img/728x90.jpg
img/728x90.jpg
வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுநடத்த தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு!

வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுநடத்த தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு!

அமெரிக்காவுக்கு இடையிலான பாரிய வர்த்தக முறுகல் நிலையை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீனாவின் துணை பிரதமர் லியூ ஹீ தெரிவித்துள்ளார்.

உலகின் இரண்டு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வர்த்தகப் போர் நீடிக்கிறது.

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் தீர்வைவரிகளை விதித்து போட்டா போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

300 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 5 சதவீத வரி விதித்தது. அதற்கு பதிலடியாக 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பினைக் கொண்ட அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் 5 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.

இந்த வர்த்தகப்போர் காரணமாக சீனா பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில் சீனாவின் நாணய மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ சர்வதேச கண்காட்சியை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போதுள்ள பிரச்சினையை ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.