img/728x90.jpg
சிரிய நிலத்தில்லிருந்து முழுமையாக விலக தீர்மானம்  – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

சிரிய நிலத்தில்லிருந்து முழுமையாக விலக தீர்மானம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

சிரிய மண்ணிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் நிலை கொண்டுள்ள குர்திஷ் படைகள் மீது துருக்கி தாக்குதலை ஆரம்பித்தது.

இதனால் லட்சக்கணக்காக குர்திஷ் மக்கள் இடம்பெயர்ந்ததுடன், பொதுமக்கள், போராளிகள் என 600 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கடந்த வாரம் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸூக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதையடுத்து துருக்கி அரசு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. குர்திஷ் போராளிகளும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்டனர்.

இதனிடையே சிரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினும், துருக்கி ஜனாதிபதி எர்டோகனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பு வளையத்தில் இருந்து மொத்த குர்திஷ் படைகளையும் வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என தகவல்கள் வெளியாகின.

இதேவேளை, ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவிற்கு துணையாக நின்ற குர்திஷ் போராளிகளை காட்டிக்கொடுத்து, துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘குர்திஷ்களுக்கு துரோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையில்லை.

அமெரிக்க படைகள், குர்திஷ் போராளிகளுடன் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடியது. சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் துருக்கியும் தற்போது ஒன்றிணைந்துள்ளன.

இரத்தக் கறை படிந்த அந்த நிலத்தில் வேறு யாராவது போர் நிகழ்த்தட்டும். அமெரிக்கா, சிரியா விவகாரத்தில் இருந்து முற்றிலும் விலக முடிவு செய்துள்ளது. துருக்கி மீதான பொருளாதார தடைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.