• :
  • :
களத்தில்

“என் உடல் வரைவதற்காக அல்ல!”.. இனவெறிக்கு பலியான சாரா பார்ட்மன் Remembering Saara Baartman

“என் உடல் வரைவதற்காக அல்ல!”.. இனவெறிக்கு பலியான சாரா பார்ட்மன் Remembering Saara Baartman

பத்தொன்பதாம் நூற்றாண்டு. ஐரோப்பிய வணிகர்களின் அறிவு, கொஞ்சம் அறிவியல் பக்கமாகவும் சாயத்தொடங்கிய காலம். வளங்களை எல்லாம் சுரண்டுவதோடு நிற்காமல், அவர்கள் வணிகம் செய்யப்போன இடங்களில் வாழ்ந்த மனிதர்களை, இனக்குழுக்களை, தோலின் நிறம் காரணமாகவும், உடல்வாகு காரணமாகவும், கீழானவர்கள் என்று பச்சைக்குத்தத் தொடங்கிய காலம். இதற்குத் தோதாக அவர்கள் கையில் எடுத்தது, அறிவியல் என்ற ஆயுதம்! சில விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து, மனித உடலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன்மூலமாக, ‘இவர்கள் மேலானவர்கள்... பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள்; அவர்கள் கீழானவர்கள்... பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்கள்’ என்று அவர்களின் ‘வளர்ச்சி’யை அவர்களே பறைசாற்றிக்கொண்டார்கள். ஆதலால், இந்தப் பின்தங்கியவர்கள் அனைவருமே, அடிமைகளாகவும், தங்களுடைய ஆராய்ச்சிக்குப் பயன்படுபவர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


எடுத்துக்காட்டாக, ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த விஞ்ஞானி ஃபிரான்ஸ் ஜோசப் கால் என்பவர், மனிதர்களின் மண்டை ஓடுகளை வைத்தே, அவர்களின் அறிவுத்திறனைக் கண்டுபிடிக்க இயலும் என்று ஒரு தேற்றத்தை முன்வைத்தார். இத்தேற்றமானது, பிற்காலத்தில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் அக்காலத்தில், வெள்ளையர்கள் அல்லாத பல இனக்குழுக்களைக் கீழானவர்கள் என்று நிறுவுவதற்கு இத்தேற்றம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இயற்கை வளங்களைச் சுரண்டியதுபோலவே இவர்கள் மனித வளங்களையும் சுரண்ட ஆரம்பித்தார்கள். அறிவியலை இவர்கள் அரசியலாகச் செலுத்திய இடம், ஒரு பெண்ணுடல்!

சாரா பார்ட்மன் (மதம் மாறியபின் இவருக்குச் சூட்டப்பட்ட பெயர். உண்மையான பெயர் அல்ல), தென் ஆப்பிரிக்கக் கொய்கோய் இனப்பெண். 1810-ம் ஆண்டு, தன்னுடைய எஜமானர்கள் ஹென்றிக் சீசர்ஸ் மற்றும் மருத்துவர் வில்லியம் டன்லோப் ஆகியோரோடு இங்கிலாந்துக்குச் சென்றார். அவருக்கு அப்போது தோராயமாக 21 வயது இருக்கும். சாராவை அவர்கள் அழைத்துச் சென்றமைக்குக் காரணம், வீட்டுவேலைகள் செய்வதற்கு அல்ல... அவரை ஒரு கேளிக்கை மிருகம்போல வேடிக்கை காட்டுவதற்கு! அதற்குக் காரணம், சாரா பார்ட்மனின் தோற்றம். வெள்ளையர்களைத் தவிர, பெரும்பாலும் வேறு இனத்தவர்களை அவர்கள் கண்டதில்லை. ஆதலால், சாரா பார்ட்மனின் நீண்ட உதடுகளும், வழக்கத்து மாறான பெரிய அளவில் இருந்த மார்பகங்கள், ஆகியவை அவர்களுக்கு வேடிக்கையையும், தாங்கள் அவர்களைவிட மேம்பட்டவர்கள் என்ற எண்ணத்தையும் அளித்தன. ஆனால், அவரின் இத்தகைய உடலுக்குக் காரணம், ஸ்டீயடோபீஜியா(Steatopygia) எனப்படும் உடல் குறைபாடு. இதன் காரணமாக, அவருடைய உடலில் கொழுப்புகள் தேங்கிப்போயின. ஆனால், சாரா பார்ட்மன்  மிகவும் நாகரிகமானவர். தொழிலாகத்தான் இதனை அவர் பாவித்தார், சட்டரீதியாக அவர் இதற்குச் சம்மதித்திருந்தார் என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு. ஆனால், இரும்புக் கூண்டுக்குள் ஒரு மனித உயிர் அரை நிர்வாணமாக்கப்பட்டு, கேளிக்கைப் பொருளாகப் பார்க்கப்படுவதற்கும், இன்னும் கொஞ்சம் பணம் செலுத்தினால் அவரை ஒரு குச்சியால் சீண்டியும் பார்க்கலாம் என்று அனுமதியளிப்பதற்கும் எத்தகைய மனநிலை இருந்திருக்க வேண்டும்?

பெரும் வசதி படைத்த கனவான்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிய கதைகளும் உண்டு. கேளிக்கைப் பொருளாகப் பார்க்கப்பட்ட சாராவின் உடல், சில ஆண்டுகளுக்கு மருத்துவம் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆராய்ச்சிப்பொருளாகிப் போனது. உடற்கூறியல் மாணவர்கள் அவருடைய உடல் பாகங்களை வரைபடமாக வரைந்து தள்ளினார்கள். சாராவோ, ‘தன்னை நிர்வாணமாக வரைதல் கூடாது’ என்று விடாப்பிடியாக மறுத்தார். அவருடைய தோலின் நிறம், பிட்டம், பிறப்புறுப்பு, மார்பகங்கள் ஆகியவற்றின் அளவுகளை வைத்து, சாரா தற்கால மனிதர்களைவிடச் சற்றுப் பின்னோக்கிய உடல் அம்சங்களைக் கொண்டுள்ளார் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதாவது, அவருடைய உடல் அம்சங்கள், ‘ஓரங் உட்டன்’ குரங்கினத்தைச் சார்ந்திருப்பதாக அவர்கள் எழுதினார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் உடல்சார் வளர்ச்சி அவர்களிடம் இல்லை; அவர்கள் பரிணாம வளர்ச்சியடைய இன்னும் நேரம் தேவைப்படும்; ஆக, அவர்கள் அடிமைப்படுத்திய ஆப்பிரிக்கர்களில் சில இனத்தவர்கள் அடிமைப்படுத்தத் தகுதியானவர்கள்! ஆராய்ச்சிக்குப் பிறகு மீண்டும் சாராவை பாரிஸ் நகரத்தில் இருந்த ஒருவர் விலைக்கு வாங்கினார். ஆனால், பலவிதமான நோய்கள் தாக்கியபடியால், சாரா டிசம்பர் 29-ம் நாள், 1815-ம் ஆண்டு இறந்துவிடுகிறார்.

இறந்தபின்பும் அவருடைய உடலுக்கு அமைதி கிடைக்கவில்லை. பாரிஸில் உள்ள மனித அருங்காட்சியகத்தில், அவருடைய மூளை, பிறப்புறுப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவை தனித்தனியாக வெட்டி கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. அவருடைய நிர்வாண உடலின் மாதிரியும் அங்கே வைக்கப்பட்டன. ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல... இப்படி, நூற்றைம்பது ஆண்டுகள்! 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அவருடைய எலும்புக்கூடுகள் நீக்கப்பட்டன. 1978-ம் ஆண்டு, டயானா பெராஸ் என்ற கொய்கோய் இனக்கவிஞர், “நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன், உனக்கு மலைகளின் அடிவாரத்தில் நிம்மதி கிடைக்கும்” என்ற பொருளில் எழுதப்பட்ட கவிதை, சாராவின் உடல் உறுப்புகள் மீட்கப்பட வேண்டும் என்ற எழுச்சியை மீட்டெடுத்தது.

1994-ம் ஆண்டு, நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான பிறகு, பிரான்ஸ் நாட்டிடம் சாராவின் உடலுறுப்புகள் திருப்பித் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2002-ம் ஆண்டு, சாராவின் உடல் தென்னாப்பிரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட கண்ணியமான இறுதிச்சடங்கு, உடலின்மூலம் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அரசியலையும், கேளிக்கை என்றபெயரில் நிகழ்த்தப்படும்  பிற்போக்குத்தனங்களையும் உடைத்தெறிந்து, கண்ணியமான வாழ்க்கை அனைவருக்கும் வேண்டும் என்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியது என்றால் அது மிகையாகாது!