• :
  • :
களத்தில்

கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைபீடம் சூட்டிய பெயர் றீகன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்து உழைத்து கொண்டிருந்த பொழுது சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டார்.

முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது.

படுகொலைசெய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அமைதியான பின்னரும் விடுதலை வேட்கையோடு வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்தபோதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார்.

அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது. ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர்.

தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதோடு புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கையாகவும் இருக்கும் எனும் கணிப்போடு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்றாக இருந்தது.

ஆனால் ஒவ்வொரு வீரனின் விதைப்பிலும் ஓராயிரம் விடுதலை உணர்வாளர்கள் முளைத்தெழுவர் என்பதை இனவெறி அரசு உணராது போகலாம். தமிழ் மக்கள் எழுச்சி என்பது அதை நிரூபிக்கும்.

தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இழப்புகளில் இருந்து வலிமை கொண்டு மீள் எழ கற்று கொண்ட தமிழர்கள் நாங்கள்.

தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதி போன்ற வீர மறவர்களின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் என்பதையும் கடந்து தளபதி கேணல் பரிதி போன்ற வீரர்கள் எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகவே தமது இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்களோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்று கடமையாகும்.