• :
  • :
களத்தில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஜெனீவாவில் இல்லை - திருமதி.அமலநாயகி அமல்ராஜ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஜெனீவாவில் இல்லை - திருமதி.அமலநாயகி அமல்ராஜ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஜெனீவாவில் இல்லை - திருமதி.அமலநாயகி அமல்ராஜ்

 
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் ஐக்கிய நாடுகள் சபையின், ஜெனீவா மனித உரிமைச் சபையில் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி அமலநாயகி அமல்ராஜ் கூறியுள்ளார். கொழும்பை மையப்படுத்தி செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகத்தில், தமக்கு நம்பிக்கை இல்லையென்றும், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மட்டக்களப்பில் நடைவெறவுள்ள அந்த அலுவலகப் பிரதிநிதிகளின் விசாரணைகளை புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
ஜெனீவா மனித உரிமையைச் சபையை சமாளிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தாயகத்தில் மாகாணங்கள் மற்றும் மாவட்ட ரீதியாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் சரியான முறையில் ஜெனீவா மனித உரிமைச் சபையில் பதிவு செய்யப்படவில்லை என்று மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமலநாயகி கூறியுள்ளார்.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 38 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றியபோது, விபரங்கள் சரியான முறையில் அங்கு இல்லை என்பதை அறிந்து கொண்டதாகவும் அமலநாயகி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
போரில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் கூட சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறிய அமலநாயகி, தமிழ் அரசியல் கட்சிகளின் இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
 
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரான சூழலிலும் இலங்கை படையினரால் பலர் கடத்தப்பட்டனர். வேறுபலர் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இன்னும் சிலர் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
 
அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெறுகின்றது.
 
ஆனால், இதுவரை இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை. ஜெனீவா மனித உரிமைச் சபையின் பரிந்துரைகள்கூட உரிய முறையில் நடைமுறைப்படுத்தவுமில்லை என்று அமலநாயகி கூறியுள்ளார்.
 
அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் முழுமையாக இல்லை என்றும் ஆனாலும் உறவினர்களினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சில பெயர்ப் பட்டியல்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார்.
 
ஆனால், தமிழ் கட்சிகள் உரியமுறையில் செயற்படவில்லை எனவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மகேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜித சேனரட்ன பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.