img/728x90.jpg
பிரான்சில் எழுச்சியுடன் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2017

பிரான்சில் எழுச்சியுடன் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2017

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2017 திங்கட்கிழமை பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லாப்பிளான் சென்ரெனியில் உள்ள இரண்டு மண்டபங்களில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் திரு. ஜோசப் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
 
தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் துயிலும் இல்லம் அமைந்திருந்த மண்டபத்திற்கு முக்கிய பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் அழைத்துவரப்பட்டனர். 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 16.06.1990 அன்று பலாலியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை வெற்றியின் பெற்றோர் ஏற்றிவைத்தனர்.
 
மலர் வணக்கத்தை 13.01.1994 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜினியின் தாயார் அணிவித்தார். சமநேரத்தில் பாரிசு துயிலும் இலத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வின் காட்சிகளும் வழமைபோன்று திரையில் காண்பிக்கப்பட்டன.
 
துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு 20.30 மணிவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டனர்.
விழா மண்டபத்தில் பகல் 14.00 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.
 
தமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் பாடல்களும், தமிழ்ச்சோலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், பண்டாரவன்னியனின் வரலாறு பிரெஞ்சு மொழியில் நாடகமாக இடம் பெற்றது. மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் இனமான இயக்குநர் திரு.கௌதமன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அவர் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலை குறித்து தெளிவாக விளக்கியிருந்தார். அவருடைய உரை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.
 
தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சுரேஸ் அவர்களின் மனித நேயம் தொடர்பான உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினரின் உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.
 
சிறப்பு நிகழ்வாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான ‘வீர விதைகள்” எனும் இறுவெட்டு மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
 
இசைப்பிரியனின் இசையில் புலம்பெயர் மண்ணில் வாழும் இளம் பாடகர்களின் குரலில் மாவீரர்களின் நினைவு சுமந்து வீர விதைகள் வெளியிட்டுவைக்கப்பட்டது.
 
இறுவெட்டின் சிறப்பு பிரதிகளை திரு.இசைப்பிரியன், திரு.கௌதமன் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர்கள் பெற்றுச் சிறப்பித்திருந்தனர். குறித்த இறுவெட்டில் பங்குபற்றிய கலைஞர்களும் மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
 
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகமும் சோதியா கலைக்கல்லூரியும் இணைந்து வழங்கிய சமகால நிகழ்வைச் சித்தரிக்கும் ‘ ஏன் எம்மை கைவிட்டீர்கள்?” எனும் சிறப்பு நாடகம் இடம்பெற்றது. குறித்த நாடகத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையாக தமது கலை வெளிப்பாட்டை காட்டியிருந்தனர். அத்துடன் எமது தாயகத்தின் இன்றைய நிலையையும் குறித்த நாடகம் புடம்போட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது.
 
தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
 
வழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை மக்களுக்கு விநியோகித்திருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது. தமிழீழ உணவகத்தினரும் பொதுமக்களுக்குத் தேவையான உணவை வழங்கியிருந்தனர். ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன.
 
அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது. மிக சிறிய வயதினர் கூட தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
21.00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன
 
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )