img/728x90.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டுபதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை - வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டுபதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை - வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டுபதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை - வியாழேந்திரன்

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக்க கட்சியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாத்தததைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை எனச் சாடியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்தில் இணைந்து பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள எஸ். வியாழேந்திரன்  மூன்றரை வருடங்களாக ரணில் அரசாங்கத்தினால் கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையளித்ததாலேயே நான் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளித்து பிரதமரையும் பாதுகாத்தபோதும் எமது மக்களின் எதிர்பார்ப்பு எதனையும் நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்த அவர், என்னைத் துரோகியென்று கூறுபவர்கள் தத்தமது மனசாட்சியை தொட்டுப்பார்க்கட்டும். அப்போது யார் துரோகியென்பது புரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதியமைச்சர் வியாழேந்திரன் நேற்று பத்தரமுல்லையில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இங்கு மேலும் விளக்கமளித்த அவர்,

என்னைத் துரோகி என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல. 2015 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் எம்மைத் துரோகியாகத்தான் பார்க்கிறார்கள். கட்சியின் முக்கியமான நிகழ்வுகளிலும் எம்மை புறக்கணித்தே வைக்கின்றார்கள். ஒட்டுக் குழுவென்றும் ஆயுதக்குழுவென்றும் எம்மோடு கவனமாக நடந்துகொள்ள வேண்டுமென தாம் நடத்தும் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக கூறிவருகின்றார்கள்.

என்னைத் துரோகியென்பவர்கள் தத்தமது மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கட்டும். அப்போது யார் துரோகியென்பது புரியும். எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தமது மக்களுக்கு எதுவும் செய்யாது வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து பிரதமரைப் பாதுகாப்புதான் அவர்கள் செய்த தியாகமா? இதைவிட ஆளும் கட்சியிலிருந்துகொண்டு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியுமே.

உரிமை உரிமையெனப் பேசிக்கொண்டு பசுத்தோல் போர்த்திய புலிகளாகவே அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தமது காரியங்களை மட்டுமே சாதித்துக்கொள்கிறார்கள். நாம் வெளிப்படையாகவே செயற்படுகின்றோம். அதுவொன்றும் பிரச்சினையல்ல.

கடந்த 30 வருட யுத்தத்தால் கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டது. மட்டக்களப்பில் 1085 கிராமங்கள் உள்ளன. எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பகிர்ந்தளித்தால் ஒரு கிராமத்திற்கு 1000 ரூபாவைக் கூட வழங்கமுடியாது.

இந்த நிலையில் தொடர்ந்தும் ஐ.தே.க. அரசாங்கத்துடன் பயணிப்பது அசாத்தியமானது என்பதைப் புரிந்துகொண்டேன். அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் விலகினேன். கடந்த சில மாதங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்தது. இதன்போது கிழக்கின் அபிவிருத்தி தொடர்பிலும் வடக்கு, மேல் மாகாணத்தைப் போல் கிழக்கிற்கும் மாகாண அபிவிருத்தி அமைச்சொன்று அவசியமென்பதை அவருக்கு உணர்த்தினோம். அதற்கு அவர் நீங்கள் பாரமெடுத்துச் செயற்பட்டால் அதற்கான ஒத்துழைப்பை வழங்க தயாரெனத் தெரிவித்திருந்தார். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.

கிழக்கைப் பொறுத்தவரை எமது சகோதர முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் பெருமுன்னேற்றம் கண்டுள்ளன. அவர்களுக்கு மூன்று அமைச்சர்கள் உள்ளார்கள். தமிழ்ப் பிரதேசங்களோ மிக மோசமான நிலையிலேயே எந்த அபிவிருத்தியுமின்றி உள்ளன. பிரிட்டனையும் சோமாலியாவையும் போலவே இந்த இரண்டு பகுதிகளையும் குறிப்பிட முடியும்.

ஜனாதிபதியோடு பேசியதில் சாதகமான பதில் கிடைத்தது. நான் 11 அம்சங்கள் கொண்ட கோரிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளேன். குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம், காணாமற் போனோர் விவகாரம், வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில், மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்கள் இதிலடங்கியுள்ளன. காணிகள் விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் முடிவொன்றை பெற்றுத்தருவதாக அவர் தெரிவித்துள்ளார். நான் அதை நம்புகின்றேன்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 11,000 க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தில் நான் பிரதமரையும் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தும் அரசியல் கைதிகள் 200 பேரை அரசாங்கத்தால் விடுவிக்க முடியாமற் போனதே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.