சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர்!

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் முஸ்லிம் ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சமரில் ஆயுதக் குழவைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  
 
தற்கொலைக் குண்டுதாரிகளுக்கான ஆயுதங்கள் அங்கு தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அப்பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி முஸ்லிம் ஆயுதக் குழு அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியது எனவும் அதையடுத்து இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது எனவும் கூறப்படுகின்றது.  
 
இதேவேளை, சம்மாந்துறை  பிரதேசத்தில் ஆயுதக்குழு தங்கியிருந்த வீட்டில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் தொடர்ந்தும் அங்கு பதற்றம் நிலவுவதால் கால வரையறையற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், அந்த அமைப்பின் உறுப்பினர்களே படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தினர் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 
 
அதற்கு ஏற்றாற்போல, சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சீருடைகள், அவர்கள் முகத்தை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட துணிகள், பனர்கள் போன்ற பொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றன. 
 
கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது  அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே பொழுதைக் கழித்து வருகின்றனர்.