• :
  • :
களத்தில்

“உரு” திரைப்படம் எழுச்சிக்கான அறைகூவல்

“உரு” திரைப்படம் எழுச்சிக்கான அறைகூவல்

உருக்கொள்ளல் என்றால் உன்னதமான ஆவேசம்
உண்மையின் சுடர் தேடி ஓடும் ஒரு ஆவேச ஓட்டம்
நாங்கள் ஓடினால்தான் வாழ்வு
என்ற நிதர்சன அதிர்வு

“ஆட்கொணர்வு மனு” என்ற சட்டவாதம்
செல்லாக்காசாகிய ஒரு நாட்டில்
“உருக்கொள்ளல்” வாழ்வின் தரிசனம்

சர்வதேச யுத்த நியமங்கள் அலட்சியப்படுத்தப்பட்ட
ஆணவக்காரர்களின் ஆட்சி
“உரு” க் கொண்டால் மட்டுமே
தண்டிக்கப்படும்.

யுத்தக்குற்றவாளிகள்
ஆட்சிபீடங்களை அலங்கரிக்கின்ற நாட்டில்
தாய்மாரின் கண்ணீர்நதிக்கு அணை கட்ட 
வெகுசனங்களின் எழுச்சியே ஒற்றைப்பாதை.....

தமிழ்பேசும் மக்களின்
“எங்கள் பிள்ளைகள் எங்கே?”
என்ற கேள்விக்கு
“எங்கள். பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்” 
என்ற கோரிக்கைக்கு
நல்லிணக்க அரசின் பதில் என்ன?

“அவர்கள் விடுதலைப்புலிகள் அவர்களை விடுதலை செய்யமுடியாது,”
என்ற யுத்தக் குற்றவாளிகளின் வெறிக்கூச்சல்களையும்,
“வெளிநாடுகளில் தேடிப்பாருங்கள்எ ன்ற ஏளனப்பேச்சையும்

போர்க்குற்றச் சிங்கள அரசிடமிருந்து
தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருப்பதுதானா தமிழர் தலைவிதி...

பிதிர்க்கடன்கள் மீதான நம்பிக்கை காலங்காலமாக வழங்கி வந்த மண்ணில்
“வீழ்ந்தது உன் கர்ப்பத்தவம்” என்ற செய்தியைக்கூட சொல்ல
எல்லாம் வென்ற அரசு மறுக்கின்றது.

யுத்தம் வெல்லப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆன பின்பும்
எல்லாளர்களுக்கு ஒரு வணக்கம் வைக்கக்கூட
துட்டகெமுனுக்களுக்கு மனசில்லை.
அவ்வளவு கர்வம். அத்துணை அகங்காரம்!

நொறுக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களே இக்கூற்றுக்கு இரத்த சாட்சியங்கள்!

“வென்றிலன் என்ற போதும் வேதமுள்ளவரை யானும் நின்றுளேன்,”
என கம்பராமாயண யுத்த காண்டத்தில் இராவணன் இறுமாந்தது போல,
மாவீரர் சந்ததியும்
நச்சுவாயுத் தாக்குதலாலும், நரக வேதனைகளாலும் 
தங்களது கோரிக்கையின் நியாயம்
சற்றேனும் குன்றிவிடாத வைராக்கியத்தில்
காலூன்றி நிற்பதனால் வந்த கோபாக்கினியோ என்னவோ?

இத் திரைக் கதறலை காண்பதுவும் பரப்புவதும், பரம்புவதும் 
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று 
காணாமல் போன எங்கள் காவல் தெய்வங்களுக்காய் 
அணி நிரை நோற்பதும் எங்கள் கடன்... 
காலம் எங்களிடம் கையளித்த மணிவிளக்கு...

“உரு” க் கொள்ளுங்கள்.