img/728x90.jpg
நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! -அனந்தி சசிதரன்

நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! -அனந்தி சசிதரன்

பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும் கவலைக்குரியது என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“வடக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்திக்கு வந்த ஆசை – வேலை பறிபோன பாதுகாப்பு உத்தியோகத்தர்” என்ற தலைப்பிட்டு 17.12.2017 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையின் முன்பக்க செய்தியாக யாழ் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது அடிப்படை ஆதாரம் ஏதுமற்றதென்பதுடன், அரச திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மக்களுடன் பழகும் முறைபற்றி எடுத்துக் கூறியதற்காக என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக பிரசுரிக்கப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

கடந்த வாரம் வட மாகாண பிரதம செயலாளர் அவர்களை சந்திப்பதற்காக பிரதம செயலாளர் செயலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னிடம் பண்பற்று ஒருமையில் பேசியிருந்தார்.

பிரதம செயலாளர் செயலகம் என்பது மற்ற அரச அலுவலகங்கள் போன்று அதிகளவான மக்கள் வந்து செல்லும் இடமல்ல. அதிகாரிகள் வந்து செல்லும் இடமாகும். எம்முடன் இவ்வாறு பண்பற்று நடந்துகொள்ளும் இவர் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் பணியில் இருக்கும் போது எவ்வாறு நடந்துகொள்வார் என்ற ஆதங்கத்தினை பிரதம செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்திவிட்டு வந்துவிட்டேன்.

இதனை அறிந்து கொண்ட யாழ் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தினர் என் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக மேற்குறித்த சம்பவத்தை திரிவுபடுத்தி குறித்த தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தரது பதவி பறிக்கப்பட்டதாகவும் அதற்கு எனது தூண்டுதலே காரணம் என்றும் ஆதாரமற்ற செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். 18.12.2017 ஆகிய இன்றைய நாளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வழமைபோன்று பிரதம செயலாளர் செயலக பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றார். இதன் மூலம் யாழ் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என நிரூபனமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் ஒரே நாளில் கண்ணில் ‘கற்றாக்’ சத்திர சிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் பக்ரீரியா தொற்று ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகியிருந்தமை யாவரும் அறிந்ததே. இச் சம்பவம் குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுப்பதுடன் தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் நடைபெற்ற மாகாண சபை அமர்வில் வலியுறுத்தியிருந்தமையே என் மீதான இவ் அவதூறுச் செய்திக்கு காரணமாகும்.

பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநியாகவே நான் இவ்விடயத்தை வலியுறுத்தியிருந்தேனே தவிர தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிராக இல்லை என்பது எனது கடந்த கால செயற்பாடுகளே சான்றுபகரும். உண்மை இவ்வாறு இருக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்ட ஒரே காரணத்திற்காகவே என்மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது.

நொதேர்ன் தனியார் மருத்துவமனை யாழ் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமானது என்பதனால் கண்பார்வை பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நியாயம் கேட்பதால் இனிவரும் காலங்களில் எனது செய்திகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படும் என்பதைப்பற்றி கவலைப்படாது நீதி, நியாயத்தின் பாற்பட்டு குரலெழுப்பியிருந்தேன்.

யாழ் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கோ அல்லது நொதேர்ன் மருத்துவமனை நிர்வாகத்திற்கோ நான் எதிரானவள் கிடையாது. கடந்த காலங்களில் யாழ் தினக்குரல் பத்திரிகை எனது செயற்பாடுகள் குறித்த செய்திகளை தொடர்ந்து உரிய இடமளித்து பிரசுரித்து வந்திருந்த நிலையில் தமது கிளை நிறுவனமான மருத்துவமனையில் இடம்பெற்ற தவறுக்கு நியாயம் கேட்ட ஒரே காரணத்திற்காக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு வஞ்சம் தீர்துள்ளதை எண்ணி மிகவும் வேதனையடைந்துள்ளேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக முக்கியத்துவம் பெற்று விளங்கும் ஊடகத் துறையில் இருந்து கொண்டு தமது சுய விருப்பு வெறுப்புகளை இவ்வாறு மக்கள் மீது திணிக்க முயல்வது ஊடக தர்மத்திற்கு இழுக்காகும்.