img/728x90.jpg
மாமனிதர் பொன். கணேசமூர்த்தி

மாமனிதர் பொன். கணேசமூர்த்தி

மாமனிதர் பொன். கணேசமூர்த்தி

 
04.08.2006 அன்று யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் அரங்கேற்றிய கொலை வெறியாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட “இலங்கை மண்” வானொலி நாடக ஆசிரியரும், ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொன் கணேசமூர்த்தி அவர்களுக்கு 15.03.2008 அன்று தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.
 
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
 
மக்களின் விடுதலை என்ற ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்து, அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய அயராது போராடி, அந்த இலட்சியப் போரில் தன்னையே அர்ப்பணித்த ஒரு உயர்ந்த மனிதர் இன்று எம்முடன் இல்லை. இந்த உன்னதமான மனிதரை பகைவன் பலிகொண்ட செய்தி, எமக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.
 
திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சத்திலே நேர்மையும் உள்ளத்திலே உயர்ந்த எண்ணமும் கொண்டவர். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்.
 
நகைச்சுவை நடனமாடும் அவரது நாவும், கேட்பதற்கு இனிமையான அவரது கேளிக்கைப் பேச்சும் அனைவரையும் கவர்வன.பொதுவாகவே, உயரிய கலைப்படைப்புக்கள் எப்போதுமே இரு முகங்களைத் தன்னகத்தே கொண்டவை. தாம் தோன்றிய சமகாலத்தை நோக்கியதாக ஒரு முகமும், எல்லையற்று வியாபித்து நிற்கின்ற எதிர்காலத்தை நோக்கிய இன்னொரு முகமுமாக, எக்காலத்திற்கும் பொருந்தும் உயரிய தன்மை கொண்டவை.
 
இத்தகைய, காலத்தில் சாகாத கலைப்படைப்புக்களைப் படைத்து, எமது மக்களது மனங்களைத் தொட்டுச் சென்றவர் இவர். கவிஞராக, சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, மேடைப் பேச்சாளராக, பாடகராக, பல்துறை விற்பன்னராக அறிமுகமாகி, கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.
 
இவர் தமிழீழ மண் மீதும், மக்கள் மீதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டவர். தமிழீழ மண் விடுதலை பெற்று, ஒரு சுதந்திர தேசமாக மலர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இந்த அபிலாசைக்காக தனது அறிவாற்றலாலும், செயலாற்றலாலும் அயராது உழைத்தார்.
 
தனது ஆழ்மனதில் எரிமலையாகக் குமுறிய விடுதலை வேட்கையை, உணர்வின் வரிகளாக வடித்து, எம்மக்களது மனங்களிலே விடுதலைத்தீயை மூட்டினார்.இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 
சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்பி, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களதுமனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார். சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை, அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார்.
 
சாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சினைகளைக்கூட, சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.
 
தொண்ணூறுகளில் இவர் எழுதி, வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய, இராவணனை கதாநாயகனாகக் கொண்ட ”இலங்கை மண்” எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது. தமிழ் மன்னன் ஒருவனை, ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி, அதில் உண்மைகளை திரிவுபடுத்தி, பொய்மைகளை புனைவுபடுத்தி, தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து, உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும். அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை, கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது, தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.
 
திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும், எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும், ”மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை, சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.