img/728x90.jpg
விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்.

தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள் எமது தாய்மண்ணில்

அகற்றப்பட்டு துயிலுமில்லங்கள், சிதைக்கப்பட்டபோதும் உலகப்பந்தின் எங்கோர் மூலையில் தன்மானமும் சிந்திக்கும் அறிவுமுள்ள கடைசித்தமிழன் வாழும் வரை மாவீரரின் நினைவும் அவர்களின் வரலாறும் அழியாது…. எம்மத்தியிலிருந்து உருவாகி எம்மோடு வாழ்ந்த வீரர்களின் வரலாற்றை பதிவு செய்யும் சிறுமுயற்சியே இத்தொடராகும். நிறைவானது என்று நிறுவ முடியாதெனினும் முயற்சிக்கின்றோம். ஆக்கéர்வமான கருத்துப்பரிமாற்றத்தை வேண்டி சுவடுகள் தொடரும்…

வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

1991 ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் வீரவணக்க நிகழ்வில் தளபதி ஜோய் வீரவணக்க உரையாற்றிய போது அதில் பொதிந்திருந்த கருத்துக்களின் ஆழமும் உறுதியும் உணர்வும் தேசியத்தலைவரின் தெரிவின் அர்த்தத்தை எமக்கு அப்போது புரியவைத்தது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக விசாலகன் என்னும் பெயருடன் ஜோய் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து எங்கும் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டவண்ணம்மிருந்தன.

1991 ம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் மட்டக்களப்பு -பதுளை வீதியில் கொடுவாமடு என்ற இடத்தில் நடந்த சிங்கள இராணுவத்தினருக்கான வழிமறிப்புத்தாக்குதலில் தளபதி ஜோய் விழிப்புண் அடைந்து நவம்பர் 30 ம் நாள் வீரச்சாவடைந்தார்.

இவருடன் மாதவன் வந்தாறுமூலை, தூசன் சித்தாண்டி , ரோயல் வந்தாறுமூலை, தான்தோன்றி கல்லடி ஆகியோரும் வீரச்சாவடைந்தனர். வெற்றிகரமாக நடந்த இத்தாக்குதலில் 20 க்கு மேற்பட்டசிங்கள அரசபடையினர் அழிக்கப்பட்டு அவர்களிடமிருந்து படைத்துறைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்த வேளையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று ஜோய் அவர்களின் கழுத்தில் பாய்ந்ததனால் விழுப்புண் அடைந்தநிலையில் ஜோய் இறுதியாக தெரிவித்த கருத்துக்களை நினைக்கும்போது எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் தளபதியாகயிருந்து இலட்சியத்தை அடைவதற்கு பெரும் பங்காற்றக்கூடிய ஒரு தளபதியை நாம் அன்று இழந்திருந்தோம் என்பதை இன்று எண்ணிப்பார்க்கின்றோம்.

இறுதியாக ஜோய் கூறிய வார்த்தைகள் ஒரு போராளியான நான் வீரச்சாவு அடைவதில் எந்தவித வருத்தமுமில்லை ஆனால் தலைவர் என்னிடம்கூறிய எல்லாவற்றையும் என்னால் நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டது என்பதுதான் வருத்தமாகவிருக்கின்றது. கட்டளைபிறப்பிக்கும் தளபதி களத்தில் தான் நிற்கவேண்டும் அதைத்தான் நான் செய்திருக்கின்றேன் என்று கூறிய கருத்துக்கள் ஒரு உண்மையான போராளியின் முதிர்ச்சியை எமக்கு உணர்த்தியது.

தளபதி ஜோய் அவர்களின் சொந்த ஊர் கொம்மாதுறை. சாதாரண குடும்பத்தில் 20.05.1969ம் ஆண்டு பிறந்து சாதாரண தொழிலாளியாக வேலை செய்துகொண் டிருந்தபோது 1987 ம் ஆண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் . மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தின் 7 வது பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்துக்கொண்ட ரகுநாதன் என்னும் பெயரைக்கொண்ட ஜோய் அப்போது தலைவர் தங்கியிருந்த மணலாற்றுக்கு அனுப்பப்பட்டு தலைவரின் பாதுகாப்புப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எமது தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்புப்பிரிவில் கடமைசெய்த ஜோய் வட தமிழீழத்தில் பல தாக்குதல்களில் பங்குகெடுத்து தலைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலை கொண்டிருந்த வேளையில் மணலாற்றில் கூர்க்கா படையினர் மீதான தாக்குதலில் ஜோய் அவர்களின் வீரம் செறிந்த போர் நடவடிக்கை பற்றி தலைவர் அவர்கள் தளபதிகள் போராளிகள் மத்தியில் குறிப்பிட்டுக்கூறியதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

1990 ம் ஆண்டு யாழ் கோட்டையில் தங்கியிருந்த சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதலை தான் வைத்திருந்த ஆர் .பி . ஜி உந்துகணையினால் தாக்கி தாக்குதலை ஆரம்பித்து வைத்ததை அப்போதைய யாழ். மாவட்டத் தளபதியாகயிருந்த பானு கூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். மட்டக்களப்பு மண்ணில் பிறந்த உறுதிமிக்க உணர்வான வீரமிக்க போராளிகளில் ஜோய் அவர்களும் ஒருவராகவிருந்தார் என்பதையிட்டு பெருமிதம் கொள்ளுகின்றோம். ஒரு போராளியாக இருப்பவன் தன்னையும் தனது குடும்பத்தை மட்டுமல்லாது தாய்நாட்டையும் மக்களையும் மேலாக நேசிக்கவேண்டும் என்பதற்கும் ஜோய் உதாரணமாகவிருந்தார்.

சித்தாண்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தனமடுவை அண்டிய குடாவட்டையில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போராளிகளுடன் தங்கியிருந்த ஜோய் அவர்களை ஒரு முறை பி. பி. சி தமிழேசை ஆனந்தி அவர்கள் நிமலன் சவுந்தரநாயகத்துடன் சந்தித்தபோது ஜோயின் உறுதிமிக்க பதிலைக்கேட்டு ஆச்சிரியமடைந்ததையும் தமிழ்ப்பெண்ணாக ஆனந்தமடைந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இந்த மண்ணிலிருந்து சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டப் போகின்றேன் என்று ஜோய் கூறிய போது ஆனந்தி அவர்கள் உன்னைப் பார்த்தால் சிறுவனாக இருக்கின்றாய் உன்னால் முடியுமா ? என்று கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கப்போகின்றது என்று ஜோய் கூறியதையும் பின்னாளில் தொடராக நடந்த தாக்குதல்களையும் நினைவுபடுத்துவது ஒரு போராளியின் உறுதிமிக்க நடவடிக்கையை எமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றது.

எப்போதும் சிரித்தமுகத்துடன் மணலாற்றில் விழுப்புண்அடைந்து முழுமையாக இயங்காத ஒருகாலுடன் கெந்தி நடந்து வரும்போது ஜோயின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம் எம்மை எதிர்காலத்தில் மட்டக்களப்பில் வழிநடத்தப் போகின்ற தளபதி என்பதையிட்டு மூத்தபோராளிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை ஜோயின் வீரச்சாவுடன் தகர்ந்துபோனது. மட்டக்களப்பு மண்ணில் கால்பதித்ததிலிருந்து அம்மண்ணிலே தான் விதையாகுமட்டும் தளபதி ஜோயின் வீரமிகு தாக்குதல்கள் சிங்களப்படையினரை சிதறடித்து அவர்களை சிந்திக்கவும் வைத்ததை சிங்களப்படைத் தளபதிகளின் வார்த்தைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள அரசபடையினருக்கெதிரான தாக்குதல்களில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய காலம் 1991 ம் ஆண்டு என்பதை இக்கட்டுரையில் பதிவு செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்கின்றோம். 1990 ம் ஆண்டு இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஒரேவேளையில் சிங்களக்காவல் நிலையங்கள், படைமுகாம்கள் தாக்கப்பட்டன. தமிழ்மக்களின் முழுமையான ஆதரவோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தினர். நகரத்தின் தென்பகுதி, வடபகுதி, மட்டக்களப்பு வாவிக்கு தெற்கே அமைந்துள்ள வயல்சாந்த ஊர்கள், மட்டக்களப்பு -பதுளை வீதியில் அமைத்துள்ள ஊர்கள் என்பன குறிப்பிட்ட சிலகாலம் விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இக்காலப்பகுதியில்தான் வந்தாறுமூலைகிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழ்மக்களில் 150 க்கு மேற்பட்ட ஆண்கள் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. மட்டக்களப்பு அம்பாறையில் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டதன் வரிசையில் இச்சம்பவமும் இணைக்கப்பட்டது. இதற்கு பிற்பட்ட காலங்களில் சிங்கள அரசபடையினருக்கெதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் மந்தகதியிலிருந்தன.

1991 ம் ஆண்டு முற்பகுதியில் எமது தேசியத் தலைவரின் பணிப்பின்பேரில் அவருடைய பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றிய மூன்று இளநிலைத் தளபதிகளான லெப்.கேணல் ஜோய்,மேஜர் வினோத், லெப். கேணல் விஜயகாந் ஆகியோர் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களின் வருகையை த்தொடந்து தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டன. தேசியத் தலைவர் அவர்களின் பார்வையில் இம்மூவரும் நேர்த்தியான வீரர்களாகத் தென்பட்டனர் . எதிர்கால நோக்கோடு இவர்கள் அனுப்பப்பட்டதை போராளிகள் உணர்ந்து கொண்டனர். எம்மண்ணில் இவர்களின் பணி நீண்டு செல்லாதது எமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

வந்தாறுமூலை தொடரூந்துப்பாதையில் சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதல் மட்டக்களப்பு மண்ணில் தளபதி விசாலகனின் ( ஜோய்) முதல் தாக்குதலாக இருந்தது. இத் தாக்குதலில் ஒன்பது படையினர் அழிக்கப்பட்டு கருவிகளும் கைப்பற்றப்பட்டன. அடுத்து சித்தாண்டி காவல் நிலைய அழிப்புத் தாக்குதலும் இடம்பெற்றது. 25 .10 .1991 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை ஊரிலிருந்து மண்முனைத்துறைக்குச் செல்லும்பாதையில் தளபதி விசாலகன் தலைமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தபோதும் தேசியத் தலைவரினால் அனுப்பப்பட்ட மூவரில் ஒருவரான மேஜர் வினோத் என்பவரை நாம் இழந்திருந்தோம். இவருடன் இன்னும் இரு போராளிகள் வீரச்சாவடைந்தனர் .

கொக்கட்டிச்சோலையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வினோத் வறுமை நிலையிலுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த போதும் இவருடைய ஒவ்வொரு நிமிட எண்ணங்களும் தமிழ் மக்களின் விடுதலையையொட்டிதாக இருந்ததனால் களத்தில் வீரச்சாவு அடைவதில் இவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்வான ஒன்றாக இருந்தது. ஆனால் திறமை வீரம் பற்றுக்கொண்ட வீரர்களை இழப்பது எமக்கு எதிர்காலத்தில் போரை வழிநடத்த திறமையானவர்கள் இல்லாமல் போகும் என்பதுதான் முடிவாக இருந்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருந்த வினோத்தை இன்னும் எமது கண்முன்னே கொண்டுவரும்போது சாந்தமான முகமும், விடுதலையின்பால் கொண்டபற்றும் தான் நினைவுக்கு வருகின்றது. இவர்களைப்பற்றி எழுதும்போதுதான் இவர்கள் குடும்பங்கள் பற்றியும் எண்ணிப்பார்க்கமுடிகின்றது.

இவ்வாறானவர்களை விடுதலைப் போராட்டத்தில் நாம் இழந்திருந்தாலும் இவர்களை நாம் பெற்றதிலிருந்து பெருமைகொள்கின்றோம். அத்தோடு இவர்களைப் பெற்றவர்களையும் தலைவணங்குகின்றோம். தாய்மண்ணின் மீது அளவற்ற பற்றுக்கொண்ட இவர்கள் அம் மண்ணிலே விதைக்கப்பட்டார்கள். வரலாற்றில் அழியாத பதிவாக இவர்கள் இருப்பார்கள். கிரான் ஊரைப்பிறப்பிடமாகக் கொண்ட லெப். கேணல் விஜய்காந் பற்றி அடுத்து ஒரு மாவீரர் தொடர்களில் விரிவாகப்பார்ப்போம்.

தளபதி விசாலகனின் தாக்குதலில் வெலிக்கந்தை வடமுனைத்கிடையிலான சிங்கள அரசபடையினருக்கெதிரான வழிமறிப்புத் தாக்குதலை குறிப்பிடமுடியும். இத் தாக்குதல் ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சிறுகுழப்பத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வேளையில் தளபதி விசாலகனின் அதிரடி நடவடிக்கைகள் பதட்டப் படாமல் நிதானமாக இருந்தன. சண்டையை நிறுத்தாமல் தொடருங்கள் என்று கூறி பின்புறமாக பiயினர் எதிர்பார்க்காதவிதத்தில் தாக்குதலை ஆரம்பித்தவுடன் படையினர் நிலைகுலைந்தனர். முன் பக்கதாக்குதலை நிறுத்துமாறு போராளிகளுக்கு கட்டளையிட்டார். இதனால் இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தது. இத் தாக்குதலில் குருமண்வெளி, மட்டக்களப்பு சேர்ந்த 2 ம் லெப். நிலா வீரச்சாவடைந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு தாக்குதல்களிலும் தமிழனின் வீரத்தை வெளிக்காட்டி எதிரிபடைகளை எம் மண்ணிலிருந்து விரட்டும் பணியை தொடந்துகொண்டிருந்தான். இவ்வாறான தன்னலமற்ற ஒரு வீரன் காலம் பிந்தி எமக்கு கிடைத்தாராயினும். காலம் முந்தி நாம் அவரை இழந்தோம். இல்லையேல் எமது மாவட்டத்தின் நிலைமையே மாறியிருக்கும் .

நினைவுப்பகிர்வு:- -என்றும் எழுகதிர்.
மின்னஞ்சல் முகவரி:- paramathevaranjan@yahoo.com.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”