img/728x90.jpg
“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்

“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்

“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்

1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை.

ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான்.

தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது.

அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் ‘கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்” என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான்.

இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம்.

முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது.

சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் – 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர்.

சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான்.

நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது.

ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு.

இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன.

கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன.

ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது.

இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது.

ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள்.

எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை.
வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன்.

ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது.

இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான்.