img/728x90.jpg
கரும்புலி கப்டன் சத்தியா

கரும்புலி கப்டன் சத்தியா

“உறுதி” கரும்புலி கப்டன் சத்தியா

சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது.

ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை.

இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும்.

இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. ‘நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்” என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள்.

காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா ‘நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்.” என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல்.

உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம்
பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.

ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். ‘ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி.

ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள்.

ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள்.

31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள்.