img/728x90.jpg
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

“கனவு” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப்பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான்.

மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது.

உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று.

இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள்.

இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை.

செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர்.

உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர்.

சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான்.

செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது.

பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான்.

இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூட போராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது.

இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.