• :
  • :
களத்தில்

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - தராக்கி

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - தராக்கி

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - தராக்கி 


மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் தமிழீழத்தின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். 
 
இவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் வைத்து   தலையை இலக்கு வைத்து 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார். 
 
இத்தனைக்கும் இவர் ஏந்திய ஆயுதம் பேனா என்பதற்காகவே அச்சுறுத்தலால் அடங்க மறுத்த முனை மழுங்கா பேனா போராளியை பேரினவாதிகள்  ஈனத்தனமாக துன்புறுத்தி சிறிலங்கா  அரச பாராளுமன்றத்தின் வாயிலில் ஆயுதத்தால்  சுட்டு போட்டது. .
 
உலகப் பத்திரிகையாளர்களையே கவர்ந்த தமிழ் ஊடகவியலாளர் என்ற பெருமை தராக்கி சிவராம் அவர்களுக்கு உண்டு. 
 
இலங்கையில் கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் உண்மைகளை எழுதி  சமூகவியல் அரசியல் நீதிக்கான  மாற்றத்தினை ஏற்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர் அல்லது கொலைமிரட்டல் விடுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்கும் பேரினவாதத்தால் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் உள்ளாகி வருபவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கையே மிக அதிகமாக இருந்து வந்துள்ளது.
 
 கடந்த 20 ஆண்டுகளுக்குள் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் என்றால் ஊடகசுதந்திரத்திற்கு எதிரான ஊடக அடக்குமுறையின் குரூரம் என்ன என்பது நன்கு புரியும். 
 
இவ்வாறான ஒரு சூழலில் உண்மையின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீண்ட வரிசையில் டி.சிவராம் தனித்துவமானவர். 
 
தமிழரின் பார்வைகளூடாக  யுத்தகால செய்திகளை, ஆய்வுகளை  ஆங்கில மொழிமூலம் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் ஊடாகவும் பல ஊடகங்களூடாகவும் எடுத்துரைத்து கொண்டிருந்தார்.. 
 
இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் கவனத்தை ஈர்க்குமளவு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும். செய்தி ஆய்வுகளும் அமைந்திருந்தன.
 
தமிழ் நெட்  இணையத்தளத்தினை உருவாக்கியதிலிருந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கடுமையாக உழைத்து அதனை வழிநடத்திய டி.சிவராம்  பத்திரிகைத்துறை ஜாம்பவான் என போற்றப்படுமளவு வளர்ச்சி கொண்டிருந்தார்.
 
 இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி என்பதோடு ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழி புலமை,  போராளியாக இருந்த பட்டறிவு,   நுட்பமான ஆய்வு திறன் ஆகியன இவரின் எழுத்துக்களின் பலமாக இருந்தன.
 
மாக்சீயக் கருத்துக்கள் இழையோடுவதோடு  தமிழர் தாயகத்தின் புவியியல் கேந்திரத்தன்மை பிராந்திய வல்லாதிக்க புவிசார் அரசியல் நிலைப்பபாடு என்பவற்றை போரியல் இராணுவ நோக்கில் தர்க்கீகமாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அவர் எழுதும் இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை பாமரமக்கள், உலக மக்கள், மட்டுமல்ல சிங்கள புத்திஜீவிகள் இராணுவத்தளபதிகள் வரை ஆர்வமாகப் படித்தனர். 
 
ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித்துவமான உலகமே வியந்து போற்றும்  ஊடகப் போராளியை, அரசியற் சிந்தனையாளனை, மானிட நேயவாதியை நாட்டுப்பற்றளனை விடுதலைவிரும்பியை  பறிகொடுத்து 13 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அந்த மாமனிதனின் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஈழத்தாய் இன்னொரு பிரசவம் செய்யவேண்டும் என்ற தேவை ஈடு செய்யப்படவில்லை.
 
இவ்வகைப்பட்ட கிடைத்தற்கரிய ஊடகவியலாளனின் வாழ்வும் வளமும் பற்றி :
 
தர்மரட்ணம் சிவராம் 11.08.1959 இல்   மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் ஆகியோருக்கு  மகனாகப் பிறந்தார். 
 
சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம்1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
 
ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். 
 
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற தமிழின அழிப்புகளாலும்  அன்றைய நாளில் வடகிழக்கில் இளைஞர் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, இன முரண்பாட்டின் தீவிரம், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் கொடூரம் என்பனவற்றினால் தமிழ் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களின் பால் சென்றபோது டி.சிவராமும் அந்த இளைஞர்களில் ஒருவராக இருந்தார்.
 
காந்தீயம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்திருந்த டி.சிவராம். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் அமைப்புக்களில் தமிழீழ விடுதலைக்கழக அமைப்பில் (புளொட்) இணைந்து தனது தாயகத்திற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.
 
 வடக்குக் கிழக்கின் மூலை முடுக்குக் கிராமங்கள் முதல் காடுகள், மலைகள் ஈறாக கால்நடையாகவும், உந்துருளியிலும், ஈருருளியிலும் அலைந்து திரிந்து மக்களைச் சென்றபோது அப்பிரதேசங்களில் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், பொருளாதார வளங்கள், புவியியல் நிலமைகள், இராணுவக் கேந்திரத்தன்மை என்பவற்றினை மிக ஆழமாகக் கிரகித்துக் கொண்டமையை பின்னாளில் அவரது கட்டுரைகளின் கேந்திர யதார்த்த புறநிலை விளக்கங்களில் அறிய முடிகின்றது.
 
1987 இல் நடந்த இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் அப்போது புளொட்டின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களால் புளொட் அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் புளொட் அமைப்பு மேற்கொண்ட மாலைதீவு ஆட்சிக்கவிட்பு, புளொட் அமைப்பின் கொள்கை விலகல், அமைப்பின் நிர்வாக ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாக மற்றுமுழுதாக புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். 
 
உண்மையான ஒரு விடுதலை இயக்கம் அயல் நாடொன்றின் ஆட்சிக்கவிழ்பு சதி புரட்சிக்கு கூலிப்படையாகச் செல்லாது. அவ்வாறு செல்லின் அதை ஒரு விடுதலை இயக்கமாகக் கொள்ளமுடியாது." என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
 
செப்டெம்பர் 8 1988 இல் ஜோகரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதோடு  அவருடைய ஊடகப்பயணம் ஆரம்பமாயிற்று.  சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
 
 இவருடைய பல்துறை அறிவியல் ஆற்றலைக்கண்டு வியந்த. இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான ரிச்சட். டி. சொய்சா. இவரை காமினி வீரக்கோனுடைய ஆங்கிலப்பத்திரிகையான ஐலண்ட பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதும்படி வேண்ட தராக்கி என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். 
 
இவ்வாறு பத்திரிகைத் துறையுள் நுழைந்த சிவராம் குஞ்சி, சிவா, ளுசு தராக்கி, பொன்னம்பலம். ஞானசோதி எனப் பலபெயர்களில் ஊடகங்களில் வலம்வந்தார். 
 
இவருடைய அரசியல், இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் ஐலண்ட் பத்திரிகையிலும், வீரகேசரி வார இதழிலும், ஈழநாடு, ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 
 
பத்திரிகையாளனாக இருந்தவர் 1990 களில் மனித உரிமை அமைப்புக்களினதும், அரசுசார்பற்ற நிறுவனங்களினதும் திட்டமிடல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் அளவிற்று அறிவியல் கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தார். 
 
இவருடைய ஆங்கிலப்பத்திரிகை ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு 1.11.111 என்ற பெயரில் 3 புத்தகங்கள் தமிழீழ அரசியல் துறையால் வெளியிடப்பட்டு வடகிழக்கெங்கும் மாணவர்களாலும் போராளிகளாலும் விரும்பி ஆர்வமாகப் பாதிக்கப்பட்டன.
 
இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும் நிறுவி புதிய கருத்துருவாக்கத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். 
 
இதன்மூலம் அமெரிக்க – ஐரோப்பிய கருத்தியளாளர்களின் நம்பிக்கைக்குரியவரானார். 
 
இவருடைய கருத்துக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு வெறுமதி வாய்ந்தவைகயாக வளர்ந்து வருவதை ஆதிக்க சக்திகளும் உற்று நோக்கி வந்தன. 
 
சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்களப் பத்திரிகைக் குழாம், சிங்களப் புத்தி ஜீவிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு அவர்களுடன் நட்பாக பழகி கருத்துப் போர்களில் ஈடுபட்டு அவர்கள் யாவர் மத்தியிலும் புரையோடிக்கிடந்த பேரினவாத உணர்வுகளை போக்கி புதிய கருத்துப் பரிமாறலை ஏற்படுத்தும்  கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்த பெரிதும் முனைந்தார். 
 
எனினும் அவர்கள் கேளாச் செவியர்களாகவும், அறிவுக்குருடர்களாகவும் இருப்பதையும் மறாத உளப்பாங்குடைய இன வெறியர்களாக வளர்க்கப்பட்ட பௌத்தமத பீடங்களின் போக்கினை பின்பற்றுவதையும் கண்டு மனம் நொந்ததன் வெளிப்பாடுதான் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பித்தபோது 3.10 2004 இல் வீரகேசரி வார வெளியீட்டில் “தமிழர் பிரச்சினையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் 
 சிங்கள தேசம் தாம் விரும்பியதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கின்றது. என்பதை வெளிப்படுத்திய உணர்வாக இருந்தது.
 
சிவராமின் அரசியற் பார்வையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 
 
இருந்தும் அஞ்சா நெஞ்சுடன் அவருடைய ஆக்கங்களில் தமிழர் அரசியலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம் இருக்கவேண்டும் என உறுதிபட எழுதுவார்.
 
 தமிழ்மக்கள் தேசிய விழிப்புணர்வுடன் இருந்து தென்னிலங்கை அரசியற் காய்நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுவார். 
 
தமிழர் மத்தியில் பிரதேசவாதத்தினை தூசுதட்டி எடுத்த கிழக்கு பிரிவினையை ஏற்படுத்த முனைந்த கருணாவுக்கு ;வீரகேசரி இதழிலே “கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல்” என்ற சிறந்த கடிதத்தின்மூலம் வரலாற்று ரீதியாக பிரதேசவாதம் பேசியவர்களின் வீழ்ச்சியும், அன்றைய அரசியல், புவியியல், இராணுவச் சூழலுக்கு கிழக்குப் பிராந்தியம் எவ்வகையில் ஈடுகொடுக்க முடியும் என்றவகையிலான அவருடைய ஆழமான கருத்தியலை வெளிப்படுத்தினார். 
 
அக்கடிதம் குழப்பமான ஒரு அரசியல் சூழலில் தமிழ்ததேசியத்தை நேசித்த அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டி பிரதேசவாதத்திற்கு சாவுமணி அடித்தது.
 
 சிலநாட்களிலேயே பிரதேசவாதிகள் முறியடிக்கப்பட்டார்கள். இது தமிழர் தாயகத்தின் கருத்தியலில் அவருடைய மேலாண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. 
 
டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை”, “இந்து சமுத்திர வல்லாதிக்கப்போட்டியில் தமிழீழம்” “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயனற்ற செயல்” “ கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை போன்றவற்றை கூறலாம். 
 
சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிந்து தமிழ் மக்களை விழிப்பும் எழுச்சியும் கொள்ள வைத்தன. 
 
"தமிழரின் இனப்பிரச்சனைக்கு சிங்கள தேசம் ஒருபோதும் அரசியற்தீர்வை வழங்க முன்வர மாட்டாது!" என்பதை அவரது இறுதிக்காலத்தில் வலிமையாக தீர்க்க தரிசனப்பார்வையோடு எழுதினார். 
 
அது முக்காலத்திற்கும் உண்மையானது என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 9 வருடமாகியும் தமிழ் மக்களுக்கு நீதியோ தீர்வோ கிடைக்காததால் இருந்து அறிந்து கொள்ளலாம். 
 
தற்போதையை தமிழர்களின் அரசியல் சூழலை  பதின்மூன்று வருடங்களுக்கு முன்பே டி.சிவராமால் அனுமானிக்க முடிந்ததென்றால் அது அவருடைய ஆளுமை வீச்சின் கனதியை உலகுக்குப் புரியவைக்கும். 
 
இவ்வாறு பத்திரிகைத்துறையில் பல்வகைத்தன்மை கொண்டவராக விளங்கிய சிவராம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதனை வரலாற்று, அறிவியல், புள்ளிவிபரவியல்த் தரவுகளோடு வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். 
 
அவருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல்  அசாத்தியத் துணிவுடன் “இந்த மண்ணை விட்டு நான் எங்கே போவது. சாவு வருவதெனில் இந்த மண்ணிலேயே எனக்கு நிகழட்டும்” என்று உறுதிபடக்கூறி சாவின் விளிம்பில் நின்றுகொண்டும் தனது பேனாவினால் புதிய சரித்திரமொன்றை படைத்துக் கொண்டிந்த அந்த மானிட நேயவாதியை பேரினவாதத்தின் கொலைக்கரங்களும், தமிழினத்தின் கோடாரிக்காம்புகளும் சேர்ந்து கோழைத்தனமாக கடத்திச் சென்று கொடூரமாகக் கொன்று அவரது உடலை தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க ஆணையிடும் அந்த அதிகாரச்சின்னமான பாராளுமன்றத்தின் அருகே போட்டுவிட்டுச் சென்றனர். 
 
சிவராம் எனப்படுகின்ற அந்த ஊடகப் போராளி கொல்லப்பட்டு 13 வருடங்கள் கழிந்தும் அவருடைய ஆளுமை உலகின் பல்வேறு தரப்பினரது மனப்பதிவிலும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திற்று
 
தமிழரின் விடுதலைப்போராட்ட கருத்தியல் வரலாற்றில் சிவராமுக்கு தனியிடமுண்டு. அவரின் மகத்தான ஊடகப்பணியைக் கௌரவித்து தமிழர் தேசம் மாமனிதராக அவரை  போற்றுகின்றது.
 
 இவ்வாறே அமெரிக்காவின் கிளாக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யூட் பெர்ணாண்டோ அவர்கள் “சிவராமின் இழப்பு மனித நேய அமைப்புக்களுக்கும், கல்விசார் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், பதிலீடு செய்யமுடியாத இழப்பு” என குறிப்பிட்டதிலிருந்து அந்த மாமனிதனின் கருத்தியல் பரிமாணத்தை உலகமே வியந்து நிற்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். 
 
விடுதலை வீரர்கள் இறப்பதில்லை. அவர்கள் பல வீரர்களை பெற்றெடுக்கும் கால விருட்சமாக வரலாற்றில் நிலைத்து வாழ்கிறார்கள். 
 
மாமனிதர் சிவராமும் வரலாற்றில் நிலையான இடத்தில் வாழ்வதோடு பல ஊடக போராளிகளை உருவாக்கி கொண்டும் இருக்கின்றார்!