• :
  • :
களத்தில்

மாவீரர்கள் மானிட விதிகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான மனிதர்கள்.

மாவீரர்கள் மானிட விதிகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான மனிதர்கள்.

 "மாவீரர்கள் மானிட விதிகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான மனிதர்கள்.

இவர்கள் காலமானவர்கள் அல்லர். காலமாய் ஆனவர்கள்.
அவர்களை போற்றும் மாவீரர் நாள் கல்லறை திருநாள் அல்ல.  புதிய வீரர்களை பெற்றெடுக்கும் கருவறை திருநாள். "

இலங்கை இந்திய ஆதிக்க அரசுகளை எதிர்த்து தமிழீழ விடுதலை போரில் பங்கேற்று தமது இனிய இளைய உயிர்களை ஈகம் செய்த வீர மறவர்களை நினைவு கூறும் நாள் மாவீரர் நாளாக ஒவ்வொரு ஆண்டிலும் நவம்பர் 27 அன்று  உலகெங்கும் வாழும் தமிழ் தேசிய மக்களால்  நினைவு கூறப்படுகின்றது.

 நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் என தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால்1989 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதன் காரணம்  இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மாவீரரான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது.  தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு என்பதால் ஈகை சுடர் ஏற்றும் நேரமாக இந்நேரம்  பின்பு மாற்றப்பட்டது.

தமிழீழ தாயகத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழ தேசம் இருந்த வரையில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர்.

 கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.

 மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின்  உறுப்பினர்களும் மதிப்பளிக்கப்படுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவு கூறுவதையும், அவர்கள் பெற்றோர் குடும்பத்தினரை மதிப்பளிப்பதையும் தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

தமிழீழத்தில் மாவீரர்களின் பெற்றோரை மதிக்கும் மரபில் மாவீரர் துயிலும் நினைவு கல்லறைகள் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களாக மதிக்கப்பட்டு பணிவிடைகள் செய்து அன்பு காட்டி போற்றப்படுவார்கள்.

மாவீரர் நாளில்  தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற "ஏறுது பார் கொடி ஏறுது பார்..." என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

காந்தள் மலர்  தூவி கார்த்திகை  நாயகர்களை வழிபடுவது தமிழர்களின் வீரமறவர்களுக்கான மலர்வணக்க வழிபாட்டு மரபாகி உள்ளது.

அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் நினைவு சின்னங்களில் ஒன்றாக போற்றப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

உலகெங்கும் வாழும் தமிழீழ தேசிய மாந்தர்கள் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழர்களும் அயராமல் உழைப்போம் என மாவீரர்கள் கல்லறை முன்னே உறுதி எடுத்து கொள்வார்கள்.

உறுதி மொழி:

"மொழியாகி,
எங்கள் மூச்சாகி - நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழி மூடி  இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈசைக்சுடரேற்றும் போது பாடப்படும் அல்லது இசைக்கப்படும் மாவீரர்நாள் பாடலில் உறுதி மொழியை தொடர்ந்து

"தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!"

 என்ற உயிரை தொடும் களத்து கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வைர வரிகள் உணர்வில் கலந்து விழி நீர் பெருகி ஓட வைக்கும்.

அந்த பாடல் இசைக்கையில் உறவுகள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை கனக்க செய்யும்.

 அருகிருந்து ஆற்றுப்படுத்தி அரவணைத்து வலிமை ஊட்டும் போராளிகளின் அன்பில் மீண்டும் அவர்கள் வல்லமை கூட்டி எழுவார்கள்.

உயிரோடு இருக்கும் போராளிகளின் முகங்களில் தம் பிள்ளைகள் முகம் பார்த்து தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தும் தாயவர்களை, உறவுகளை அன்போடு அணைத்து வலிமையான வார்த்தைகள் பகிர்ந்து வல்லமை கொள்ள செய்யும் போராளிகளின் பணி உன்னதமானது.

அழுத மக்கள் அதன் பின் எழுகை உணர்வு பொங்க தாம் உயிரில் சுமக்கும் தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை கேட்க ஆவலோடும் நிமிர்வோடும் காத்திருப்பார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை உன்னதமான தலைவர் ஆற்றும் உரை கேட்க உலக தமிழினமே காத்திருக்கும்.

இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது.  உலகெங்கும் நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒளிபரப்பாகும்.
இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி அனைத்து தரப்பினராலும் குறிப்பாக சிங்கள அரசினாலும் கூட மிகுந்த உன்னிப்பாக செவிமடுக்கப்படுவது வழமை.

தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ஆற்றிய  இனப்படுகொலைக்கு முன்னான இறுதி மாவீரர் நாள் உரை நவம்பர் 27, 2008 அன்று இடம்பெற்றது.

  தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையை தொடர்ந்து  விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு  நினைவு மீட்புகளும், எழுச்சி உரைகளும் இடம் பெறும்.

விடுதலை போரில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூறுகின்ற உலகநாடுகளின் தேசிய வீரர்கள் நினைவு நாளுக்கு ஒப்பாக தமிழ் தேசிய மக்களால் நினைவு கூறப்படும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வு உள்ளது.
 2009 முள்ளிவாய்க்காலில் கோர இனப்படுகொலை யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிறிலங்கா இனவெறி அரசு தமிழ் மக்களை இனஅழிப்பு செய்த பொழுது தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் மட்டுமே அமைதி கொண்டது. மக்கள் போராட்டம் தொடர்கிறது.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இனவெறி சிங்கள அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை மண்ணோடு மண்ணாக தகர்த்தெறிவதன் மூலம் விடுதலை உணர்வை அடியோடு அழித்து விடலாம் என எண்ணி உயிரோடு தமிழ்  மக்களை மண்கொட்டி மூடி புதைத்தது  போல் மாவீரர் துயிலும் இல்லங்களையும் நடுகற்களை இடித்து தகர்த்தது.

அத்தோடு மாவீரர்களை நினைவு கூறுவதை பயங்கரவாத செயலாகவும் எச்சரித்து அப்படி நினைவு கூறும் மக்களின் வணக்க நிகழ்வுகள்  தடைசெய்யப்பட்டும், எச்சரிக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், காரணம் தெரியாமல் படுகொலை செய்யப்பட்டும் வந்தார்கள்.

தமிழீழத்தில் ஒற்றை விளக்கேற்றியவர்கள் கூட கைது செய்யப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பேரழுச்சியோடு காலம் தவறாமல் நினைவு வணக்கம் செலுத்தி வந்தார்கள்.

தமிழகத்திலும் பரவலாக தமிழீழ மாவீரர்கள் உணர்வுள்ள தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்து அங்கும் மாவீரர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

 இன்று உலகிற்கு நல்லாட்சி என்ற பெயரில் அகிம்சை முகம் காட்டும் சிறிலங்கா இனவாத அரசு பசுத்தோல் போர்த்த குள்ள நரிகளாக தமிழர் நிலங்களை பறித்து, தமிழர் நிலங்களில் இராணுவத்தை குவித்து தமிழர்கள் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வன்புணர்வுகள், கலாச்சார சீரழிவுகள், தமிழர் அடையாள சின்னங்களை சிதைத்தல், கைதுகள், காணாமல் போதல்கள், வரலாற்று திரிபுகள் என இன்னோரன்ன இனப்படுகொலையின் கூறுகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து ஆதிக்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் நிலையில் அடிப்படை உரிமைகளான மாவீரர்களை, வீரச்சாவெய்திய உறவுகளை  வணங்கும் உரிமையையும் தடை போட்டு எச்சரிக்கிறது, அச்சுறுத்துகிறது.
அடக்குமுறைகள் புரட்சிக்கு நீர் வார்கின்றன.

அனைத்து அடக்குமுறைகளையும் வென்று நவம்பர் 27, 2016 தமிழீழ தாயகத்தில் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழ தாயகத்தில் நிகழும் என்ற உறுதி வல்லமை தரும் மாவீரர்களின் சக்தி மீது அனைத்து தமிழ் மக்களுக்கும் பிறக்கிறது.

அந்த வகையில் மீண்டும் ஒரு எழுகைக்கு மாவீரர்நாள் 2016 அன்று அனைத்து அடக்குமுறைகளையும் தகர்த்து போராட மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

விதைத்தவை முளைக்கும் காலம் இவை!

தமிழினம் எழுச்சியை விதைத்து கொண்டும் விதைகளில் இருந்து மீண்டு எழுந்து கொண்டும் இருக்கும் காலம்!

தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!