img/728x90.jpg
 போர் முகம் [ போர் முகம்- 01 ]

போர் முகம் [ போர் முகம்- 01 ]

போர் முகம்

எரிமலைகள் போல் சீறிக்கொண்டிருந்த தமிழீழத்தின் வடபோர்முனைக்களம்! 

போர் முகம்- 01


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வரலாறுகளையும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதமாக  தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ”போர் முகம்” என்னும் தொடரை களத்தில் நாம் மறு பிரசுரம் செய்கின்றோம்.
 

காலநேரம் இல்லாமல் சீறிக்கொண்டிருக்கும் எரிமலைகள் போல் தமிழீழத்தின் வடபோர்முனைக்களம் சீறிக்கொண்டிருந்தது.
 
தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடங்களை ஆக்கிரமித்து மக்களின் வாழ்வைச் சிதைத்து பேரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் எதிரி இந்தக் களமுனைக் காவல்வேலிகளிற்கு அப்பால் நிலைகொண்டிருக்கிறான். தமிழ்மக்களின் விடுதலையின் தலைவாசற் களமாக முகமாலைக் களபூமி மிளிர்ந்திருக்கிறது.
 
விடுதலையின் வாசலை அடைத்துவிட எதிரி துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறான். அதனால் அங்கு அவன் தனது பீரங்கிகளைப் பயன்படுத்தி எப்போதும் கொலைக் கணைகளை ஏவிக்கொண்டே இருக்கிறான். வெடி அதிர்வுகள் வரவேற்க நாங்கள் முகமாலை முன்னரங்கப் பிரதேசத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.
 
 
எதிரியின் கொலைக்கணைகள் ஒருபுறம் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. அதற்கும் அப்பால் போராளிகள் தமது அன்றாடக் கடமைகளில் பம்பரம்போல் சுழன்று கொண்டிருந்தனர். இத்தனை அதிர்வுகளிற்குள்ளும் போராளிகளின் செயற்பாடு பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக் களத்தில் இருந்து பல மைல்களுக்கும் அப்பால் இந்தப் பயங்கர அதிர்வுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் எந்த மனிதனும் இந்தச் சூழலை இவ்வாறு கற்பனைசெய்து கொள்ளமாட்டான். போராளிகள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக விடுதலைக்காக இயங்கிக்கொண்டிருந்தனர்.
 
களமுனையை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். கடந்த வருடம் விடுதலைப்போராட்டத்தில் இணைந்த புதியபோராளி ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு சென்றார். முகமாலைப் பிரதேசம் சமாதான காலத்திலும் யுத்தகாலத்திலும் முக்கியத்துவம்பெற்ற பிரதேசம் என்பதால் அனைவரின் நினைவிலும் தடக்கமின்றி நிழலாடும் என்பதில் சிறிதுகூட ஜயமில்லை. ஆனால் யாரும் நினைப்பதுபோல இப்போது முகமாலை இல்லை என்பதுதான் உண்மை. முட்புதர்களும் மண்ணணைகளும் காப்பரண்களும் நகர்வு அகழிகளும்; இப்போது முகமாலையை அலங்கரித்திருக்கின்றன.
 
நாங்கள் யாரும் எண்ணுவதுபோல சமாதானகாலத் தரிப்பிடங்களோ, அனுமதிச் செயலகக் கொட்டில்களோ அங்கு இல்லை. அவை இருந்தமைக்கான எந்தவொரு தடயத்தைக்;கூட அங்கு தேடிப்பிடித்துவிட முடியாது. சமாதானம் இந்தத் தேசத்தில் எவ்வாறு ஒரு கானல் நீரானதோ அவ்வாறே இவையும் மாறிப்போயின. முற்றிலும் மாற்றமடைந்து வன்னியின் முக்கிய போர்த் துருவமான முகமாலையில் கந்தகவாசனை மாத்திரமே இப்போது பூத்திருக்கிறது.
 
நாங்கள் முகமாலைக் களப் பிரதேசத்தின் முன்னரங்க நிலைகளை நெருங்கிக்கொண்டிருந்தோம். எங்கு பார்த்தாலும் எறிகணைகள் வீழ்ந்துவெடித்துச் சிதறிய தடங்கள்தான் தெரிந்தன. நாங்கள் அவற்றைத் தடங்களாக மாத்திரம் பார்த்தோம். ஆனால் எங்களை அழைத்துச்சென்ற போராளி ஒவ்வொரு தடங்களும் எந்த ரகத்தைச் சேர்ந்த எறிகணைகளால் உருவானது என்பதனை வகைசெய்து கொண்டிருந்தான்.
 
அவனின் களமுனைப்பணி முதிர்வை அவனின் செயல்கள்; கட்டியம் கூறின. எறிகணைகள் வீழ்ந்துவெடித்த தடங்களையும் சமநேரத்தில் எதிரியால் இலக்கின்றி வீசப்படுகின்ற எறிகணைகளின் வெடி ஒசைகளைக் கேட்கின்றபோதும் அங்கு புதிதாகச் செல்பவர்களிற்கு முதலில் ஒருவித பீதியை ஏற்படுத்தம். உருமாறிப்போய்க் கிடக்கும் பளை நகரிற்கு அப்பால் முகமாலை நோக்கிச் செல்கின்றபோது தென்படுகின்ற அனைத்து மரங்களும் எதிரியின் எறிகணைச் சிதறல்களால் தலையற்றும் சிதறுண்டும் இருந்தன. மொத்தத்தில் சொல்வதானால் அவை இயல்பில் மரங்களின் தோற்றத்தில் இல்லை என்பதுதான் உண்மை. இப்படியே அனைத்தையும் அவதானித்துக்கொண்டு அந்தப் புதிய போராளியின் வழிகாட்டலில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.
 
சற்றுத் தொலைவில் மறைப்பிற்காக அமைக்கப்பட்ட வேலி ஒன்று மண்ணணைக்கு மேல் தெரிந்தது. இவற்றை நெருங்கியதும் முன்னணி நிலைகளை அண்மித்துவிட்டோம் என்பது புலனாகியது. சீனத்துப் பெரும்சுவர்போல கள முன்னரங்க மண்ணணைகள் இருக்கலாம் என்ற வெற்றுக் கற்பிதங்கள் நொருங்கி விழ்ந்துவிட எங்கள் முன்னால் தெரிந்தது வெறும் மண்புட்டியும் அதன்மேல் சில ஓலைக் கிடுகுகளும் மாத்திரமே. ஊர்க்கற்பனைகளை மறந்து நியபூமிக்குள் சென்றோம். நாங்கள் நிற்கின்ற பகுதிக்கு அப்பால் சில நூறு மீற்றர்கள் நகர்ந்தால் எமது போராளிகளின் முன்னணி நிலைகளை அடைந்துவிடலாம்.
 
நாங்கள் சென்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து சிலமீற்றர் தொலைவில் எதிரியின் பதுங்கிச்சுடும் இலக்கிற்குரிய பிரதேசத்தை மண்டை ஓட்டுக்குறியிடப்பட்டு சினைப்பர் வலயம் என அறிவுறுத்தப்பட்டிருந்த பலகை அடையாளப்படுத்தியது. அந்த அறிவுறுத்தலை பார்க்கின்றபோது எச்சரிக்கை உணர்வு மயிர் நுணிகளில் வந்துநின்றது. அந்தப் பகுதியூடாக அனைவரும் எச்சரிக்கையாக நகரவேண்டும். இல்லையேல் அவர்கள் எதிரியின் சினைப்பர் சூட்டுக்குள்ளாவார்கள்.
 
இந்தப் பிரதேசத்தை நாங்கள் அடைந்ததும் எதிரியின் சினைப்பர்; தாக்குதலிற்கு மண் தூவும் வழிமுறைகள் எங்களிற்கு கண்டிப்பாக கூறப்பட்டது. அந்தப் போராளியின் ஒவ்வொரு அறிவுறுத்தல்களும் போராளிகளின் பாதுகாப்பு உணர்வையே வெளிப்படுத்தியது. அவரின் கண்டிப்பான அறிவுறுத்தல்களுடன் நாங்கள் முன்னணி நிலைகளிற்குச் சென்றோம். முன்னணி நிலைகளில் போராளிகள் மிகவும் சுறுசுறுப்பாகத் தமது கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு காவலரணிலும்; நிற்கும் போராளிகள் அச்ச உணர்வுகள் ஏதும் இன்றித் திடமான போர்வீரர்களாக நிமிர்ந்து நின்றார்கள்.
 
இவ்வாறு சென்ற நாங்கள் தேக்கங் குற்றிகளாலும் பனைமரத் துண்டுகளாலும் அமைக்கப்பட்டிருந்த காப்பரண் ஒன்றை அடைந்தோம். அங்கிருந்த போராளிகள் ஷவணக்கம் வாங்கோ| என்று எங்களை அன்பாக வரவேற்றார்கள். அங்கிருந்த போராளிகள் பலவகையிலான சுடுகலன்களைத் தாங்கியிருந்தார்கள். அவர்களில் இரண்டுபேர் ஆர்.பி.ஜி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் இருந்தார்கள். இவர்களில் செங்கோடன் என்ற போராளி எங்களுடன் பேசத்தொடங்கினான்.  அண்ணா அவன்ர ”ராங் ” கை அடிக்கவேணும் ஷராங்| அடிச்சுத்தான் அடுத்தவேலை செய்யிறது. இயக்கம் எனக்கு இந்த ஆர்.பி.ஜி யைத் தந்திருக்கிது.
 
ஆனால் இன்னும் ”ராங்” அடிக்கிறதுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கேல்ல  என்று கூறிக்கொண்டு எதிரியின் காவலரண் பக்கம் பார்த்தான். அளவான உயரம், ஆனால் மிகவும் வலிமையான உடற்கட்டு. சாந்தமான முகத்தில் மெல்லியதாக அரும்பிய மீசை அவனை மேலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தது. சுறுசுறுப்பாக இருந்தான்.
 
அவனின் மிடுக்கான தோற்றம் போர்வீரனுக்குரிய எடுப்பைத் தந்தது. எந்த வேளையிலும் சீறிவிடத்துடிக்கும் வலிமைமிக்க போராளிகளின் உணர்வில் திளைக்கும்; முகமாலையின் யாழ் – கண்டி நெடுஞ்சாலையின் அருகில் அவனது காப்பரண் அமைந்திருந்தது. அவனது காப்பரணுக்கு மிகவும் அருகில் தகர்க்கப்பட்ட எதிரியின் கவசவாகனம் இருக்கிறது. அந்தக் கவசவாகனத்தைக் காப்பரணின் அவதானிப்புப் பகுதிக்கூடாக எங்களிடம் காண்பித்தான். பறட்டைப் பற்றைகளிற்குள் அந்தக் கவசம் அசைவற்று நின்றது. கடந்த வருடத்தின் ஒரு பொழுதில் ஆனையிறவைக் கைப்பற்றும் இறுமாப்பில்; முகமாலையில் இருந்து சிறிலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்;டிருந்தனர்.
 
இந்தப் படை நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு படையினரின் 75 இராணுவ உடல்களைக் கைப்பற்றியதுடன் இரண்டு படைக் கவசவாகனங்களையும் அழித்திருந்தனர். இந்த மூர்க்கத்தனமான யுத்தத்தில் எங்கள் விடுதலைப் படைகளால் அழிக்கப்பட்ட படைக்கவசமான ஷராங்|கில் ஒன்றே அந்தப் போராளியின் காப்பரணின் அருகில் இருக்கிறது. சிங்களப் படைகளின் படைநகர்விற்கு எதிராகப் போரிட்ட புலிப்படை வீரர்களின் கவச எதிர்ப்பு அணியினரால் இந்தப் படைக்கவசம் தகர்க்கப்பட்டிருந்தது. தனது காப்பரணுக்கு அருகில் இருந்த அந்த அழிக்கப்பட்ட படைக் கவசத்தை எங்களிடம் காண்பித்த அந்தப் போராளி ஷஷஅண்ணா! வரப்போற சண்டையில கட்டாயம் நான் ஷராங்| அடிப்பன். அதுக்குத்தான் காத்திருக்கிறன்|| என்று கூறிவிட்டுத் தாய் தனது குழந்தையை அணைப்பதுபோல அவன் கையில் இருந்த கவச எதிர்ப்பு ஆயுதத்தை மெல்ல அணைத்து முத்தமிட்டான். ஷஷஎங்கட போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு போராளிகளின் பங்கும் முக்கியமாவதுபோல எனது பங்கு கவச அழிப்பில் நிச்சயம் முக்கியமானதாகவே இருக்கும்.
 
 
யுத்தக் கவசத்தை அழித்து விடுதலைப்போராட்ட வரலற்றில் நான் எனது பெயரை நிச்சயம் நிலைநாட்ட வேண்டும். தினமும் எனக்கான அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற தவிப்பில் எதிரியின் வரவைப் பார்த்துக் காத்திருக்கிறேன்.||
 
என்றான். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இந்த இளம் போராளியின் குடும்பமும் இராணுவ ஆக்கிரமிப்புப் படைநடவடிக்கைகளால் பெரும் பாதிப்புகளிற்குள்ளாகியிருக்கிறது. இவர்கள் யாழ்ப்பாண தீவகற்பத்தின் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். 1991 ஆம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தீவகம் மீதான ஆக்கிரமிப்புப் படைநடவடிக்கையால் அங்கிருந்து இடம்பெயர்ந்து யாழ்.நாச்சிமார் கோவிலடியில் வசித்துவந்தார்கள். ஷஷகடற் தொழிலை நம்பி வாழ்ந்ததால் நாங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது எந்தத்தொழிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு ஒருநேர உணவிற்குக்கூட பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
 
நாங்கள் அப்போது சிறுவர்கள் என்பதால் எங்கள் பெற்றோரைத்தவிர எங்களுக்கு இந்தத் துயரத்தின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.||
 
 இந்த நிலையில் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது ஆக்கிரமிப்புப் படைநடவடிக்கையை மேற்கொண்டது.
 
இந்தப் படைநடவடிக்கை ஏற்கனவே இடம்பெயர்ந்து பெரும் துயரங்களுடன் வாழ்ந்த எமக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனையவர்களைப் போலவே நாங்களும் வீட்டுப்பொருட்களைத் தோள்களிலும் தலையிலும் சுமந்துகொண்டு நாவற்குழிப் பாலத்தால் தென்மராட்சியை வந்து சேர்ந்தோம். தென்மராட்சி இடப்பெயர்வுக் கதையை இப்போது கூறும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
 
அப்போது எங்களை எதிரிகள் விரட்டுகின்ற போது நாங்கள் சுமக்கமுடியாத சுமைகளுடன் வீட்டுப்பொருட்களையும் சுமந்துகொண்டு தப்பி ஓடிவந்தோம். ஆனால் இப்போது எங்களை விரட்டிய எதிரியை விரட்டுவதற்காக ஆயுதங்களைத் தோள்களில் தாங்கிநிற்கிறோம். அன்றைய நிலையை நினைத்து வேதனை அடைந்தாலும் இன்றைய நிலையை நினைத்து மகிழ்கிறேன்|| என்றான். இந்தப் போராளியின் வாழ்வின் துயர்களையும் அவனின் இலட்சியப் பற்றுதியையும் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு அடுத்த காப்பரண் நோக்கிச் செல்வதற்கு நகர்வு அகழிக்குள்ளால் நடக்கத் தொடங்கினோம்….
 
தொடரும் …….