img/728x90.jpg

மாவீரர்களை மதிக்காத மனிதன்.....????? உங்கள் பிள்ளைக்கும் எம்மவர் பெருமையினை ஊட்டி வளருங்கள்

 எல்லோரும் அமைதியாக

இருங்கள்


அவமானமெனும் அந்தகாரம்
எங்களின் மீது ஏறி அமர்ந்துவிட்டது
எல்லோரும் அமைதியாயிருங்கள்

 

விட்டில்களை நம்பி
விளக்கணைத்துக் கொண்டவர்கள்
நாங்கள்


வெடிகளுக்குப் பயந்து
விடியல்களைத் தொலைத்தவர்கள்
நாங்கள் அமைதியாயிருப்போம்

 

நாங்கள் இறந்தால் இடு காட்டிற்கு
எடுத்துச் செல்வார்கள்
அவர்கள் இறந்தால்
இல்லங்களுக்கும் எடுத்துச் செல்வார்கள்


இப்போது புரிகிறதா
நாங்கள் தொடமுடியாத உயரத்தில்
கொலுவிருக்கும்
புனிதர்கள் பெருமை

 

அவர்கள் இல்லங்களை
இடித்துவிட்டுத்தான்
எங்களுக்கு வீட்டுத்திட்டம் செய்தார்கள்


அவர்கள் உள்ளங்களை சிதைப்பதற்கு
இன்று பலர் வேட்டி கட்டி
அலைகிறார்கள்

 

ஊதுபத்திச் சுருளைக்கூட
தூரமாய் வைக்கிறோம்
உடல் நலக் கேடு என்று


அவர்கள் ஒரு குப்பி சயனைட்டை
உடன் காவித் திரிந்தார்கள்
தமிழீழம் எங்கள் நாடு என்று

 

மீண்டும் கத்தி முரசுகள் கொட்டி
இருப்பவரையும் அழிக்காதீர்
என்கிறார் சில நவீனப் புரட்சியாளர்கள்


நான் கேட்கிறேன்
இறந்தவர்கள் எல்லாம் என்ன
இலவம் பஞ்சா....?


காலப்போக்கில் காணாது போக

 

கட்டி இரும்புகூட நிலம்
தோய்ந்தால் காணாது போகும் - அட
வெட்டி எறிந்தாலும் விமர்சித்துமிழ்ந்தாலும்
எம் வீரர்கள் தேகம் வாழும்


விசமிகள் தொல்லை கூடினால்
பாருங்கள் தாண்ட உடல்கள் தரை மீழும்

 

தேசமென்னும் பரந்த வெளியில்
தோட்டாக்கள் தீர்ந்துபோயிருக்கலாம்
ஆட்சி மாற்றங்கள் அமைதியை தந்திருக்கலாம்
இதுபோல ஒரு அமைதியில்த்தான்
எங்கள் இனவழிப்பின் துரோகங்கள்
கருக்கொண்டதென்பதை
ஏன் மறந்து போனீர்கள்...?

 

இன்றும் பற்றியெரிகிறதே
லட்சம் தாய்மாரின் கருப்பைகள்
அவற்றை அப்படியே விட்டுவிட்டு
அடுத்த நேர உணவை உண்ணச்
சொல்கிறீர்களே!


அள்ளிப் பிசையும் சோற்றை
சற்று உற்று நோக்குங்கள்
அவர்கள் குருதிதான் அதிலும்
அப்பிக்கிடக்கும்

 

மாவீரர் கனவுகள் மடியாது என்றும் 
எனக்கோர் மகன் பிறந்தால்
அவனுக்கும் சொல்லிக்கொடுப்பேன்
எம்மவர் ஈகத்தின் பெருமை

 

உங்கள் பிள்ளைக்கும் எம்வீரம்
ஊட்டி வளவுங்கள்

 

கல்லறை இருந்த இடத்தில்
காவாலிப்படைகளின் அரண்கள்

 

கொஞ்சம் அமைதியாய் இருந்து பாருங்கள்
கார்த்திகைச் செடிகளையும்
காணாது ஆக்கிவிடுவார்கள்

 

கண்ணியம் காத்த எம்
பெண்ணியப் புலிகளை
அம்மணமாக்கியி அராஜக நாட்களை
அழுது வடித்த அவர்தம் சொந்தங்களை
மறந்துவிட்டு மகிழ்ந்திருப்பதா..?

 

கோர யுத்தத்தின் குண்டு வெளியில்
அவலப்பட்டு உயிர் மீண்டவன் நான்
எனக்கும் தெரியும் இழப்பின் வலி
அதற்காக இறந்தவர்களை
மறந்துவிட்டு கடை வாழ்வு வாழ்வதெனக்கு
கடினமாகவுள்ளது

 

எனக்குத் தெரியாத
எம்மவர் பெருமையினை
எடுத்துச் சொன்னான் வெள்ளையன் ஒருவன்
அட களவெடுத்து பிளைத்த இனத்தவன்
அவனே எங்கள் கரிகாலன் புகழ் பாடுகையில்
களமாடி வாழ்ந்தவர் இனம் வந்த
நாங்கள் கடிவாளமிட்டவைகளாய்
வாழ்வதா..?

 

கார்த்திகை கனிகிறது
மாதங்கள் தீரத் தீர அடுத்த ஆண்டிலும்
கார்த்திகை வரும்..


இலகுவாய் அமைவதற்கு
விடுதலை ஒன்றும்
புத்தனின் வீடு அல்ல

 

விடுதலை நெருப்பு பற்றி எரிந்தவாறு
இருக்கப் பார்த்துக்கொள்வோம்
விரைவில் அமையும் விடுதலை

 

கொசோவா கண்டதை..
கிழக்குத் தீமோர் கண்டதை..
மொண்டிநீக்கிரோ கண்டதை..
ஈழம் காண்பதும் வெகு தொலைவிலிலை


உல்லாசம் வந்து உயிர் மெய்யை 
மறைத்தாலும்
விலாசம் தொலையாமல் இருங்கள்..

 

கட்டிய வேட்டிகள் கறைபட்டுப் போனால்
நீளக் காற்சட்டைகள் பின்னால்
கைகளைக் கோருங்கள்


மாவீரர் தியாகம்
மாண்புறும் மட்டும்
மகத்தான ஈழம் மலர்ந்த பிற்பாடும்
ஈகைச் சுடர்களை
இதயத்தில் ஏற்ற மறவாதீர்..!!

 

மறவாதீர்!! மறவாதீர்..!!
இது ஈகத்தின் மாதம்..

 

- அனாதியன் -

Youtube

https://youtu.be/4Tti7XEn6RI