• :
  • :
களத்தில்

இரவின் நினைவுகள்

இரவின் நினைவுகள்

கறுப்பு வானம் மீது 
அபட்சமாய் விடியலுக்காக 
ஏக்கம் கொண்டது 
அந்த கொடிய இரவு
செந்துளிர்களின் வருகைக்காக 
தேனீக்கள் பச்சையம் தேடி 
மொய்க்கக் காத்திருந்தன.

கிழக்கு வான வெளிப்பில் 
இசை இன்பம் காண பூங்குயில்கள் 
குரல்களை சீர்படுத்தி கொண்டன
மல்லிகைக் கொடியது வீசிடும் 
சுகந்தம் முகர்ந்து சுகமது 
பெற்றிட கடவுள்கள் ஆயுத்தமாகினர்
கறுப்பு நீங்கி வரும் ஒளிப்பில் 
மகிழ்ச்சி பெற்றிட 
துடித்து எழுந்தன புள்ளினங்கள்.

சிகப்பு மாறவில்லை 
இருள் தொலையவில்லை 
விடியல் கிடைக்கவில்லை
விளக்கம் மட்டும் கருக்கொண்டு 
சிதை மூட்டப்படாத விடியலுக்காக 
எதிர்பார்ப்பு அதிகரித்தது
நாளை விடிந்தால் 
இல்லை மரணம் என்று 
காத்திருந்த இறுதி மணித்துளிகள்
கண் இமைக்கும் பொழுதில் 
கடந்து போய் விடியல் 
கிட்டாமலே போனது
கை நழுவிய சில்லறையாக 
சிதறிப் போன வாழ்வின் 
வசந்தத்துக்காக ஏங்கியது மனது
மெல்ல நகரும் நாழி மீது 
வெறுப்பு கொண்டு ஆரவாரித்தது 
மறுநாள் பிறந்த கொடிய இரவு.

கவிமகன்.இ 
''வேரோடும் விழுது '' புத்தகத்தில் இருந்து