img/728x90.jpg
வீட்டுச்சின்னத்துக்கும் TNA, யானைச்சின்னத்துக்கும் UNP, வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்!

வீட்டுச்சின்னத்துக்கும் TNA, யானைச்சின்னத்துக்கும் UNP, வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்!

மனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற சுயநிறைகொண்ட ரீதியான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதை தொலைநோக்காகக்கொண்டு கடந்த ஒன்பது வருடகாலமாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – Vavuniya Citizen Committee (VCC)’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் எமது அமைப்பு,

 
பெப்ரவரி மாதம் 10ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் இதர அமைப்புகள் போல வெறுமனே ஒரு கண்காணிப்பாளராக இருந்துவிடாமல், ‘தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம்’ கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தேசம் குறித்த பரந்துபட்ட சிந்தனையோடும், மக்கள் நலனில் பெருத்த அக்கறையோடும், விடுக்கும் செய்தி இது!
 
எமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே! வாக்காளர் பிரமாக்களே!
 
அன்று… சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி, மத்திய அரசாங்கத்தில் எப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டதோ, அதேபோல இன்று… தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வீழ்த்தி புரட்சிகர அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 
உங்கள் நிலத்தில், உங்கள் வாழ்வையும் – வளத்தையும் நாசமாக்க, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச்சுற்றி பெரும் சதிவலை ஒன்று பின்னப்படுகின்றது. இருட்டு மூலைகளுக்குள் பின்னப்படும் இந்த சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமல் தப்பித்துகொள்ளும் வகையில், தமிழ் மக்கள் ‘நின்று நிதானித்து பக்குவமாக’ வாக்களிக்க வேண்டும். இம்முறை நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு (வீட்டுச்சின்னத்துக்கு) வாக்களித்தால், அது உங்களுக்கு நீங்களே சவக்குழி வெட்டிக்கொண்டதாக உலகத்தின் ஏனைய இன மக்களால் நோக்கப்படும்.
 
விடுதலை எனும் உன்னத இலட்சியத்துக்காக அளவிட முடியாத இழப்புகளையும் வலிகளையும் சந்தித்து, உச்சபட்ச தியாகங்களை செய்துள்ள தமிழ் தேசிய இனத்தை சேர்ந்த நீங்கள், எங்கே கூச்சநாச்சமின்றி, சூடு சொரணை எதுவுமின்றி இருந்துவிடப்போகின்றீர்களா?
 
 
 
உங்களை நெருங்கிவரும் அந்த அழிவு பற்றி, சதித்திட்டம் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
 
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து, மறுதேர்தல் ஒன்றுக்கு இவர்கள் தயாராகும் போது, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கி ஐக்கிய தேசியக்கட்சியை ஆட்சி கொண்டு வருவது தொடர்பில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் – ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் ‘கள்ள டீல்’ ஒன்று உள்ளது. இந்தக் களவாணி கூட்டத்தின் இரகசிய ஒப்பந்தத்தை முறியடித்து இவர்களின் சதித்திட்டத்தை உடைத்தெறியும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் பிரிந்து நின்று தேர்தலை சந்திக்கும்போது, ஐக்கிய தேசியக்கட்சி நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கே வாக்களிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கும். அதுபோல அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்க அனுசரணை வழங்குவதோடு, அவர்கள் கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான பட்ஜெட் மற்றும் சட்டத்திட்டங்களை நிறைவேற்றவும் ஆதரவாக வாக்களிப்பார்கள்.
 
‘அடுத்த தேசியத்தலைவர் சம்பந்தன் ஐயா தான். சம்பந்தன் ஐயாவை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்’ என்று ஐக்கிய தேசியக்கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சுக்குள் புதைந்துள்ள கொடிய நஞ்சை தமிழ் மக்கள் தின்று சாகக்கூடாது! ‘எங்கே தமிழ் மக்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் தோற்கடித்துவிட்டால், தாம் போட்டுள்ள நீண்டகாலத்திட்டங்கள் எல்லாம் குழம்பி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கதிரையில் ஏற்ற முடியாமல் போய்விடுமோ? என்று அவர் பதறுகின்றார்.
 
ஆதலால், தமது சதித்திட்டங்களுக்கு ஒத்துப்போகாத திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான (சைக்கிள் சின்னம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ, அல்லது திரு.சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான (உதயசூரியன் சின்னம்) தமிழர் விடுதலைக்கூட்டணியோ, தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிடுவதை தடுப்பதற்காக, மிகவும் நரித்தனமாக ஐக்கிய தேசியக்கட்சியும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து ‘கூட்டுச்சதிவேலை’ பார்க்கிறது.
 
எனவே தான், மக்களின் அடிப்படை தேவைகள் – வசதி வாய்ப்புகளுடன் தொடர்புடைய ‘குட்டிக்கூட்டணி பலம்’ என்று சொல்லப்படுகின்ற உள்ளூராட்சிசபைகளை, எப்பாடுபட்டாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க பெரும் கோடித்தொகை பணத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு வாரி இறைத்துள்ளார்.
 
ஈழத்தில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ‘சமகால காட்சிகள்’ தான் என்ன?
 
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்கள் – தொழில் வளங்களை விடுவிக்க கோரியும், தமிழ் மக்கள் தாமாகவே கிளர்ந்தெழுந்து வீதிகளுக்கு வந்து அரச, இராணுவ இயந்திரத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் இந்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் ஒரு வருடத்தை கடந்தும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பிக்களோ, அரச பயங்கரவாதத்தின் முகத்திரையை கிழித்தெறியும் இவ்வாறான மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்து, ஒவ்வொரு நாடுகளாக பயணம் செய்து அந்த நாட்டுத் தலைவர்களுக்கு, மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று, நற்சான்று பத்திரமும் – பாராட்டும் பரிசும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.
 
மே மாதம் 2009 க்குப்பின்னர், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம், மாபெரும் மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றியாக எப்போது பதிவாகியதோ, அப்போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேசம் களைந்து, மக்கள் முன்னால் இவர்கள் அம்பலப்பட்டு, இவர்களின் தோல்வி ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எப்போது இவர்களில் நம்பிக்கை இழந்து, கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கிப்போராட புறப்பட்டார்களோ, அப்போதே இவர்கள் ‘சக்தியற்ற – பயனற்ற தலைமைகள். காலாவதியான பொருட்களைப் போன்றவர்கள்’ என்ற உண்மை உறுதிசெய்யப்பட்டு விட்டது. தமிழ் மக்களை தீராநோய் போல பீடித்து உலுப்பிக்கொண்டிருக்கும் இந்த வெட்கம், கேடு, அவமானம், சாபங்களுக்கு இனியும் வாக்களிக்க வேண்டாம்.
 
எமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே! வாக்காளர் பிரமாக்களே!
 
2009க்குப்பின்னர் பல திசைகளிலும் பயணம் செய்து, புரட்சிகர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கிய புள்ளியில் இப்போது நாங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறோம். துரோகங்களாலும் – சதிகளாலும் பின்னப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கும் உங்கள் வாழ்வை மீட்டெடுத்து புதுப்பித்துக்கொள்வதற்கு காலம் இத்தேர்தலை உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக தந்திருக்கிறது. வரலாற்றுத்திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவசியம் வாக்களியுங்கள். உங்கள் உள்மனதை நோக்கி நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் உங்களிடமே உண்டு! அந்தக்கேள்விகள் இவை தான்…
 
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களின் எந்தப் பிள்ளைகளாவது ஈழத்தில் தங்கியிருந்து கல்வி கற்கின்றனரா? அரசாங்க வேலைவாய்ப்பு கிடைக்காமல் தொழில் தேடி அலைகின்றனரா?
 
இல்லை. இவர்கள் சிலர் சிறீலங்கா அரசாங்கத்திடம் பின்கதவு வழியாக புலமைப்பரிசில் திட்டங்களைப் பெற்று, தமது பிள்ளைகளை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பட்டப்படிப்பு கல்வி கற்க அனுப்பி வைத்துள்ளார்கள். இன்னும் சிலர், அரசாங்க அமைச்சுகளில் தமது பிள்ளைகளுக்கு உயர் அரச பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆனால் ஈழத்தில் இப்போதும் எங்கோ ஓர் மூலையில், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய தமது பிள்ளைகளை மேற்கொண்டு படிக்க வைப்பதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் ஏழைத்தாய்மாரின் இதயம் குமுறி அழுதுகொண்டிருக்கின்றது.
 
இறுதி யுத்தத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும் – இனப்படுகொலைக்கும், ‘சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசை தண்டிக்க விடாமல் பாதுகாப்பு வழங்குவோம். மைத்திரி – ரணில் கூட்டு அரசுக்கு சர்வதேச சமுகம் நெருக்கடி கொடுக்க இடமளியோம்’ என்ற பேரம் பேசலுடன் எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவிகள் மற்றும் சொகுசு வாகனங்கள், ஆடம்பர வீடுகள் இவர்களுக்கு கைம்மாறாக வழங்கப்பட்டுள்ளன. இவர்களிடம் நெஞ்சுரமும் இல்லை. நேர்மைத்திறனும் இல்லை. எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் பணம் புகுந்து விளையாடுகின்றது.
 
இந்த கொடுவினைகளுக்கும் – அவலங்களுக்கும் முடிவு இல்லையா?
 
எமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே! வாக்காளர் பிரமாக்களே! அண்ணார்ந்து பார்க்கிற அளவுக்கு மாளிகை கட்டி இவர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ, நீங்கள் இன்னும் ஓலைக்குடிசைகளில் சீவிக்கும் வாழ்க்கையை வாழவா விரும்புகிறீர்கள்? அவர்கள் அழகிய பூந்தோட்டங்களில் வாழ, நீங்கள் அழுகிய குப்பை மேடுகளில் வாழவா ஆசைப்படுகின்றீர்கள்? நீங்கள் வாக்களித்து வாக்களித்து நம்பிக்கெட்டு ஏமாந்து நடுவீதிக்கு வந்துவிட்ட நிலைமைகள் போதும்! இனியும் இந்த இழிநிலை தொடரத்தான் வேண்டுமா? தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை, ‘தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம்’ கோட்பாடுகளை தாங்கிப்பிடிக்கும் மாற்று அணியினரிடம் கையளிப்பதே, இந்த அவலங்கள் – கொடுவினைகள் – துரோகங்களுக்கு எல்லாம் ஒரே தீர்வாக அமையும்.
 
சைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியன் சின்னத்துக்கும் உளத்தூய்மையுடனும் – நெஞ்சுரத்துடனும் வாக்களியுங்கள்!
 
எமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே! வாக்காளர் பிரமாக்களே! தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் – ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் உள்ள இரகசிய ஒப்பந்தத்தின் சூழ்ச்சியை நன்கு உய்த்துணர்ந்து விளங்கிக்கொண்டு, தமிழ் இனத்தின் இருப்பை தீர்மானிக்கப்போகும் அரசியல் சாசன திருத்தத்துடன் கூடிய அரசியல் தீர்வுக்கான காலத்தில்,
 
‘சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் தமிழ் சமுகத்தின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாக, வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் சைக்கிள் மற்றும் உதயசூரியன் சின்னங்களில் போட்டியிடும் தத்தமது வட்டாரங்களுக்கு பொருத்தமான வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்.
 
எப்போது ஒரு இனம், ‘தன்னைத்தானே அடிமை’ என்று உணருகின்றதோ, அத்தகையதொரு உணர்வு அந்த இனத்தை கௌவியிருக்கும் வரை, அந்த கோழை உணர்விலிருந்து அந்த இனம் சுயமாக விடுபட்டு விலகி வெளியே வரும் வரை, அந்த இனத்துக்கு எவராலும் விடுதலையை பெற்றுக்கொடுக்கவோ, அன்றி அந்த இனம் தாமாகவே விடுதலை அடையவோ முடியாது.
 
இந்த உலக நியதியின் பிரகாரம், ‘நாங்கள் எவருக்கும் அடிமை இல்லை’ என்ற இனமான உணர்வு முகடுடைத்து கொப்பளித்து மேலெழுந்து வரும் வகையில், இத்தேர்தலில் உங்கள் வாக்களிப்பு முடிவுகள் அமைந்து, ‘நாங்கள் கேட்பது அடிமைச்சாசனம் அல்ல, அரசியல் சாசனம். நாங்கள் கேட்பது ஒற்றையாட்சி அல்ல, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்’ எனும் செய்தியை சர்வதேச சமுகத்துக்கு இடித்துரைத்துச்சொல்வதாக பதிவாகட்டும்.
 
மக்கள் நலப்பணியில்,
- வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் -
தலைவர், கோ.ராஜ்குமார் (0094 77 8547 440)
செயலாளர், தி.நவராஜ்
ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா(0094 77 9916 786)