img/728x90.jpg
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் நாடுகடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் நாடுகடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் நாடுகடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க்குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை சிறிலங்காவுக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டுக்கதவைத் தட்டிய அவுஸ்திரேலிய எல்லைப்படையினரும் காவற்றுறையினரும் அக்குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி சுமார் 2500 கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கிற மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்துவைத்துள்ளனர். பத்துநிமிடங்கள் மட்டுமே அக்குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அந்நேரத்தில் கையில் அகப்பட்ட சில உடைகளை மாத்திரம் ஒருபையில் அள்ளிக்கொண்டு வந்ததாகவும் குடும்பத்தலைவி பிரியா கூறுகிறார்.
 
பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா , 2 வருட குழந்தை கோபிகா ஆகியோரைப் பலவந்தமாக ஏற்றுவதைப் பார்த்த அண்டைவீட்டுப் பெண்மணி “ஹாலிவுட் திரைப்படத்தை போன்ற சம்பவங்கள்” நடந்தேறியதாகக் குறிப்பிடுகிறார். கடும் மன வலியால் கதறிய தன் தோழி  பிரியாவை அரவணைக்க சென்ற தன்னை அனுமதிக்காமல் காவல் துறை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளதையும் விசனத்தோடு அவர் குறிப்பிடுகிறார்.
 
2013 ல் ஆஸ்திரேலியா சென்ற நடேசலிங்கம் மற்றும் பிரியா 2014 ம் ஆண்டு திருமணம் முடித்து பல வருடங்களாக பிலோலாவில் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாண்டு மார்ச் 4 ல் பிரியாவின் இணைப்பு விசா முடிவடைந்த தருவாயில் தனது விசாவை புதுப்பிப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
இது குறித்து மெல்பேர்ண் தடுப்புமுகாமிலிருக்கும் பிரியாவுடன் பேசியபோது “விடியற்காலை 5 மணியளவில் என் வீட்டு கதவை தட்டிய அதிகாரிகள் எங்களை Melbourne அகதிகள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகவும் பத்து நிமிடத்தில் தேவையான உடைமைகளை எடுத்துக்கொள்ளும்படியம் கட்டளையிட்டனர்.” எனத் தெரிவித்தார்.
 
பிரியாவும் அவரின் கணவரும் தனித் தனியாக இரு வாகனங்களில் Gladstone விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகள் பிரியாவுடன் சென்றிருந்தாலும் கூட வாகனத்தில் பிரியாவுடன் குழந்தைகளை இருக்கவிடவில்லை. அவரின்  கெஞ்சல்களுக்கு பிறகும் கூட குழந்தைகள் தாயிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
 
“அகதிகள் என்னும் காரணத்தினால் இப்படி நடத்தலாமா, உங்கள் குழந்தைகளை இப்படி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவீர்களா ” என பிரியா காவலரிடம் வினவியதுடன் தான் மிகுந்த அவமானங்களுக்கும், மன உளைச்சலுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும், இது தனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனவும் பிரியா விவரித்தார்.
 
Melbourne ல் சிறை வைக்கப்பட்ட பிறகு, தமது விருப்பின்பேரில் நாடு திரும்புவதாக ஒப்புக்கொண்டு ஆவணங்களில் கையெழுத்திட காவலர்கள் கட்டாயப்படுத்தினர் எனவும், கட்டளையை மறுத்தால் தானும் கணவரும் தனித்தனியாக இலங்கை கடத்தப்படுவோம் என்றும் மிரட்டினர் எனவும் பிரியா தெரிவிக்கிறார்.
 
“நாங்கள் வீட்டு சிறையில் உள்ளோம். நாங்களோ, குழந்தைகளோ வெளியில் செல்ல அனுமதி இல்லை. மூன்று காவலர்கள் எங்களை கண்காணிக்கின்றனர். குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என் குழந்தை பிலோலாவில் உள்ள தன் தோழி வீட்டிற்கு செல்ல வேண்டும்” என்று சொல்வதாக பிரியா கூறியுள்ளார்.
 
தங்களை நாடு கடத்த வேண்டாம் என்று கதறி கெஞ்சியுள்ளனர். நம்பிக்கை தளர்ந்த நிலையில் செவ்வாய் மதியம் காவலர்கள் தந்த ஆவணங்களில் கையெழுதிட்டுள்ளனர்.
 
பிரியாவின் குடும்பம் வசித்துவந்த பிலோலாவில் உள்ள அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தால் ஆச்சர்யமும், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். எந்த ஒரு முன்னறிவுப்பும் இன்றி ஒரு குடும்பம் நாடு கடத்தப்படுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
 
“சமூகத்தில் அவர்களுக்கு நிறைய ஆதரவு உள்ளது “என்று நகரில் ஒரு நண்பர் தமிழ் அகதி மன்றத்தில் தெரிவித்தார்.  கோபிகாவிற்கு  விரைவில்  மூன்று வயது ஆகிவரும் இந்நேரத்தில் .அவர்கள் கோபிகாவை மழலையர் பள்ளியில் சேர்க்க இருந்தார்கள் .பிரியா தன் குழந்தைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தாய். நடேசலிங்கம் அருகிலிருக்கும் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்தவர்.
 
“இந்த குடும்பத்தினருக்கு அறிமுகமான அக்கிராம மக்கள் அனைவரும் குடிவரவு அமைச்சரிடம் கிறிஸ்துமஸ் முன்பே இவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியிருந்தனர்.  அப்படி இருந்தும் இப்படி ஏன் நடக்கிறது என தெரியவில்லை” என அக்கிராமத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.
 
ஒரு வாரத்திற்கு முன் ஒரு தமிழ் வாலிபர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நாடுகடத்தலுக்கு அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டு வருகின்றது. ஏற்கனவே நாடுகடத்தப்பட்டவருக்கு சிறிலங்கா அரச புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து, மிரட்டி வந்தனர். இப்பொழுது பிரியா குடும்பத்தினருக்கும் அம்மாதிரி நாடு கடத்தப்படும் சூழ்நிலை வந்துவிடுமோ என்று அவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
 
இதேவேளை, இந்தக் குடும்பம் பலவந்தமாக தடுப்புமுகாமுக்குக் கொண்டுவரப்பட்ட முறைமையும் அதுவும் அவுஸ்திரேலியாவிலேயே பிறந்து வளரும் இரண்டு குழுந்தைகளையும் நாடுகடத்த முற்படுவதும்  அவுஸ்திரேலியாவில் பொதுமக்களிடத்திலும் அகதிகள் செயற்பாட்டு இயக்கங்களிடத்திலும் பெரும் விசனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
பிரியா, நடேசலிங்கம், தருணிகா மற்றும் கோபிகாவை Biloela விலுள்ள அவர்கள்  இல்லத்திற்கு திரும்ப அனுப்ப ஆஸ்திரேலியா அரசிடம் தமிழ் ஏதிலிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் கோரபட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் குழந்தைகளை தொடர்ந்து அமைதியான வாழ்க்கை முறையில் தொடர முடியும்.
 
தொடர்பு: அரன் மயில்வாகனம் 0061410197814
 
Regards,
Aran Mylvaganam
Press Office,
Tamil Refugee Council
0410 197 814