img/728x90.jpg
img/728x90.jpg
ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று உணர்வுபூர்வமாக ஒன்றுபட்ட தாயக மக்களின் எழுச்சி நிகழ்வாக . முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
 
இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் , வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.
 
காலை 11 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கொடுக்க, இறுதிப் போரின் தனது தாய் தந்தையை இழந்த, 14 வயதுச் சிறுமி ஒருவர் ஏற்றினார்.
 
இதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர்.
 
உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.
 
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து:
 
"என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர்!
 
பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம்.
 
மனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள், சுத்திகரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
 
அச் சபை நிறுவப்பட்டு 3 வருட காலங்களுக்குள்ளாகவே எமது மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள்.
 
இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
 
சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் அனைத்துலக சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது.
 
இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த அழிப்பை அனைத்துலக சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம்.
 
ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எமக்கான நீதி செயற்பாடுகள் பல தசாப்தங்கள் செல்லலாம் என்று மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆனால் ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.
 
முன்னைய படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அனைத்துலக சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றது.
 
ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது.
 
இறைமையுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது இன்றுள்ள அனைத்துலக சட்ட இணக்கங்களின் பிரகாரம் நியாயபூர்வமானது. காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்.
 
இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள்.
 
“எமது சிங்கள போர்வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்” என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப்போர் கூறும் போது ஒருவரின் குற்றம் அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
 
அனைத்துலகத்துக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் தீர்மானம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசானது இன்று மறுதலித்து நிற்கும் நிலையில் கடந்த 70 வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி இருப்பார்கள் என்பதை அனைத்துலக சமூகம் இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
 
இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி, தம் இனத்தின் வெற்றி என்ற மனோபாவத்தில்த்தான் இருந்து வருகின்றார்கள்.
 
ஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றார்கள்.
 
ஆகவே தொடர்ந்தும் கால நீடிப்புக்களை இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் வழங்கக் கூடாது.
 
கடந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் ஆணையாளரால் கூறப்பட்டதை நினைவுபடுத்தி “இலங்கையில் பொறுப்புக் கூறலை ஏற்படுத்த உதவும் வகையில் உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகிப்பது உட்பட ஏனைய வழிவகைகளையும் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்” என்று இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து அனைத்துலக சமூகத்தை இத்தால் வேண்டி நிற்கின்றேன்.
 
எந்தவொரு நாடும் தனது குடிமக்களை வீதிக்கு விரட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக பிடித்து வைத்திருப்பதில்லை.
 
துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் அது தான் நடைபெறுகின்றது. எம்மக்கள் இன்று வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் வருடக்கணக்கில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி தொடர்ந்து தடுப்பு முகாம்களில் வாடி வதங்கி வாழ்ந்து வருகின்றார்கள். “கைவாங்குவோம்” என்ற தடைச் சட்டம் கால தாமதமாகியும் கைவாங்கப் படவில்லை.
 
வன்னி நிலப்பரப்பு அதிதீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட சில இடங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குக் கூட மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இராணுவத்திற்குப் பெரும் தொகை நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை.
 
மீள் குடியேற்றத்திற்கு அனைத்துலகத்தினராலும் அரசாங்கத்தினராலும் ஒதுக்கப்பட்ட நிதிகளை எவ்வாறு படைகள் எடுத்துச் செல்ல முடியும்?
 
எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. முகாமிட்டிருக்கவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேற வேண்டிய அவர்கள் எமது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார்கள். வளங்களை அவர்கள் சுகித்து வந்தார்கள்.
 
இப்பொழுது அவர்கள் எம் மண்ணை விட்டு வெளியே செல்ல எமக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது. படைகளுக்குக் கொடுத்த பணம் எமது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி என்பதை அரசாங்கம் மறந்து விட்டது.
 
ஒருவேளை அனைத்துலக நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க படையினர் மறுத்ததால்த்தான் அவர்களுக்கு எங்கள் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வெளியேற்றுகின்றார்களோ என்று நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.
 
இதுவே இன்றைய வடக்கு – கிழக்கின் யதார்த்த நிலையாகும்.
 
இலங்கையின் கடந்த 70 வருட காலவரலாற்றைப் பார்க்கும் எவருக்குமே அனைத்துலக தலையீடுகள் இல்லாமல், நெருக்குதல்கள் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம் என்பது புலப்படும்.
 
அனைத்துலக அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்.
 
போர் முடிந்த பின் சமாதான காலத்தில் ஒரு இனத்தைத் தொடர்ந்து தமது ஆதிக்கத்தினுள் கட்டுப்பட வைத்து எமது தொடர் அரசாங்கங்கள் செயலாற்றி வருவதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எனது அருமை மக்களே!
 
நாம் தொடர்ந்தும் எடுத்தார் கைப்பிள்ளையாகச் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டினுடாக இனஅழிப்புக்கான நீதிவேண்டியும் எமக்கான அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளை முன்னெடுத்தும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல அணிதிரளுமாறு இன்றைய நாளில் உங்களை அழைக்கின்றேன்.
 
21ஆம் நூற்றாண்டின் நவநாகரிக மானிட யுகத்தில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் என்பதை நாம் மனதில் நிறுத்துவோமாக” என தெரிவித்தார்.
 
அடக்கி வைத்த கண்ணீரை அணை உடைத்து தடை தகர்த்த உணர்வு பொங்க கதறிய காட்சி நிகழ்வில் பங்கேற்றவர்களின் மனதை உருக்குவதாக இருந்தது.
 
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அடையாளப்படுத்தியதோடு. வீதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக இருந்திருக்கின்றது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும், இன்று நண்பகல் 12 மணிவரை கடைகள் திறக்கப்படாமல் துக்கதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
இதேவேளை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 9ஆவது ஆண்டு நினைவேந்தல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இன்று காலை நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில், கலை காலாசார பீடாதிபதி, விரிவுரையாளர்கள், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
 
அதே போல் யாழ். பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பல்கலைக்கழககத்தின் மத்தியில் உள்ள அலங்கார சுற்று வட்டத்தில் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
 
 
தொடா்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உட்பட பலா் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க வணக்கம் செய்தனர். தொடர்ந்து மலர் வணக்கம் செய்ததோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக இன்றைய நாளை துக்க நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்திருந்தது.
 
இதைமுன்னிட்டு இன்று வடமாகாண சபையின் அனைத்து பாடசாலைகளிலும், மாகாண சபையின் கொடியினையும் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
எனினும் வடமாகாண பேரவை செயலகத்தின் கொடி மற்றும் தேசியக் கொடி என்பன இன்று காலை முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தவிர முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கியமை மக்களை நகைக்க வைத்தது.
 
. புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமில், வாகனங்களில் வந்தவர்களை மறித்து படையினர் மென்பானங்களை வழங்கும் பொழுது நகைப்பிற்குரிய முறையில், ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
 
அத்துணை எளிதில் குளிர்வித்து அணைய கூடிய நெருப்பா தமிழ் மக்கள் நெஞ்சங்களில் கனன்று கொண்டு இருப்பது?
 
ஒன்றுபட்ட மக்களால் வரலாற்றை எழுச்சியோடு படைக்க முடியும் என்பதை எங்கள் தாயகம் நிரூபித்து காட்டியுள்ளது. இதை புலத்தில் உள்ள தமிழ் மக்கள் கற்று கடைப்பிடிக்கின்ற பொழுது தான் எங்கள் இனத்திற்கு விடுதலை.
 
அதே போல் எங்கள் தமிழினம் எங்களுக்கான நீதியை பெற்று கொள்ளும் வரை ஓயப்போவதில்லை என்ற செய்தியையும் உறுதியாக உரத்து சொல்லி உள்ளது.
 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! ஆரம்பம்!

Youtube

https://www.youtube.com/embed/CVcTdbbjI6M