img/728x90.jpg
தமிழீழம் நோக்கிய பாதையில் தமிழர்களாக ஒன்றிணைவோம்! – சுவிஸ் தமிழர் அரசியல் துறை

தமிழீழம் நோக்கிய பாதையில் தமிழர்களாக ஒன்றிணைவோம்! – சுவிஸ் தமிழர் அரசியல் துறை

தமிழீழம் நோக்கிய பாதையில் தமிழர்களாக ஒன்றிணைவோம்! – சுவிஸ் தமிழர் அரசியல் துறை

 
தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் பின்னணியுடைய அமைப்பல்ல என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான தீர்ப்பாக அமைந்திருக்கிறது. 
 
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர்கள் மீது பயங்கரவாதத்திற்கான நிதி சேகரிப்பு என்ற பெயரிலான ஒரு புரட்டான வழக்கினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் பதிவுசெய்திருந்தது. 
 
12 தமிழர்கள் மற்றும் ஒரு ஜெர்மானியர் என மொத்தம் 13 பேர் மீது இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தமிழீழ விடுதலைக்கு எதிரான ஆற்றல்கள் அனைத்தும் இணைந்து இந்த வழக்கினை பதிந்ததற்கான அழுத்தத்தினை பின்னணியில் இருந்து கொடுத்தன. 
 
புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழ் மக்களாகிய நாம் எமது விடுதலை நிலைப்பாட்டில் உறுதியோடிருப்பதை உடைத்திடும் நோக்கிலேயே இந்த வழக்கானது எம் மக்கள் மீது திணிக்கப்பட்டது.
 
இதனை எதிர்த்த சட்டப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியினை நாம் பெற்றிருக்கிறோம். இந்த வழக்கினை விசாரித்த சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் பின்னணியுடைய அமைப்பு என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
சுவிட்சர்லாந்து அல்லாத இன்னொரு நாட்டில் நடைபெற்ற குற்றங்களுக்கு நேரடி கள விசாரணை இல்லாமல், பத்திரிக்கை செய்திகளையோ, இணையதளச் செய்திகளையோ அல்லது இலங்கை அரசினுடைய அறிக்கைகளையோ ஆதாரமாக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை குற்றவியல் பின்னணி கொண்ட அமைப்பாக முடிவு செய்ய இயலாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட செலவினத்திற்கான இழப்பீட்டினை வழங்குமாறும் சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடைக்கு எதிரான தீர்ப்பிற்குப்  பிறகு எமது தமிழ் இனத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய மிக முக்கியமான தீர்ப்பாக இதனை நாம் கருதுகிறோம். 
 
எமது விடுதலைப் பாதையில் நாம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து தடைக்கற்களையும் தகர்த்து முன்னேறும் நம்பிக்கையினை இத்தீர்ப்பு எமக்கு அளித்திருக்கிறது. எம்மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பிற்குப் பின்னர், அதற்கான நீதிப் போராட்டத்தில் சற்றும் சமரசமின்றி இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை முடக்கினால் தமிழீழ விடுதலைக் கனவினை முடக்கிவிடலாம் என்ற ஏகாதிபத்திய சக்திகளின் சதியினை நாம் முறியடித்து முன்னேறியிருக்கின்றோம். 
 
பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக சத்தியத்தின் பக்கம் நின்று தீர்ப்பினை வழங்கிய சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எமக்கு உறுதுணையாக நின்று எம் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்த சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
 
எதையும் சாதிக்கும் வலிமையினை எமது ஒற்றுமை எமக்கு உருவாக்கித் தரும் என்பதை எம்கண் முன்னே சான்றாக நாம் கண்டிருக்கின்றோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் சுதந்திரமாக, ஜனநாயகமாக இயங்குவதற்கான வெளி நமக்கு உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் தமிழர்கள் அனைவரும் மீண்டும் ஓரணியில் ஒற்றுமையுடன் நின்று போராடுவது அவசியம் என்று எமது அமைப்பு உறுதியாக கருதுகிறது. நமது தேசியத் தலைவர் காட்டிய வழியினில், நமது விடுதலை இயக்கம் நமக்கு கற்றுத் தந்த பாதையில் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணித்திட சுவிஸ் தமிழர் அரசியல் துறை அழைப்பு விடுக்கிறது. நமது ஒன்றுபட்ட அரசியல் குரலே விடுதலையினை மீட்டெடுக்கும் வலிமையினை நமக்கு அளித்திடும். உலகத் தமிழர் ஓரணியில் இணைந்திடுவோம்.
 
- சுவிஸ் தமிழர் அரசியல் துறை -