img/728x90.jpg
img/728x90.jpg
தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் தரப்புகள் அக்கறை செலுத்துதல் ஆரோக்கியமானது

தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் தரப்புகள் அக்கறை செலுத்துதல் ஆரோக்கியமானது

இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் சிறீலங்கா நோக்கி எழுந்த போது,

 "மனிதாபிமானப் போரில் ஈடுபட்ட எமது இராணுவம், ஒரு கையில் ஆயுதங்களுடனும் மறு கையில் மனித உரிமைகள் சாசனத்துடனும் போரிட்டது". 

அதன் காரணமாக பொதுமக்கள் போரின் போது கொல்லப்படவில்லை என்ற தொனிப்பட மகிந்த ராஜபக்ச அவர்கள் மே மாதம் 2011 ல் தெரிவித்திருந்தார். ஆயினும், சர்வதேச அழுத்தங்கள் தணியவில்லை.

சர்வதேச மயப்பட்ட ஈழத் தமிழர்களின் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புகூறலுக்காகவும் வலுப்பட்டு வந்த வேளையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் பின்னர், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயங்கள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் பிரயோகிக்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பான அழுத்தம், சர்வதேச விசாரணை, மற்றும் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தல் போன்ற விடயங்களிலிருந்து சிறீலங்காவை காப்பாற்றியது நடப்பு அரசாங்கத்தின் பாரிய சாதனையாக சிறீலங்கா சனாதிபதி மார்தட்டிக்கொள்கிறார்.

சர்வதேசமயப்பட்ட தமிழர்களின் போராட்டத்தை முடக்குவதில் கணிசமான வெற்றியை பெற்ற இந்த அரசாங்கம், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை சில ஆயிரங்கள் மட்டுமே என காட்டும் மற்றுமொரு நகர்வை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக கூட்டாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெற்றிபெறுமாக இருந்தால், இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து நீண்ட கால நோக்கில் சிறீலங்கா அரசு விடுபடும். 

பொறுப்புக்கூறல் அற்றுப் போகும். இறுதியில், ஈழத்தமிழர்களுக்கான நீதி கானல் நீராக மாறும்.

ஆதலால், இந்த நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான மூலோபயத்துடன் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் தரப்புகள் அக்கறை செலுத்துதல் ஆரோக்கியமானது. 

அதன் ஒரு அங்கமாக, ஈழத் தமிழர்களின் பிரதான எதிராளிகளையும் அவர்களின் நகர்வுகளையும் விழிப்புணர்வுடன் நோக்குதல் வேண்டும்.