• :
  • :
களத்தில்

அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து..08/03/1991

அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து..08/03/1991

அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து..08/03/1991

இன்று அனைத்துலக மகளிர் தினம். முழு உலகமுமே இன்றைய தினத்தை பெண்ணினத்தின் எழுச்சி நாளாக கொண்டாடுகிறது. யுகம் யுகமாக ஆணாதிக்க அடக்குமுறையின் கீழ் ஒடுக்கப்பட்டு வந்த பெண்குலம் சம உரிமைக்காக, சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக குரலெழுப்பும் புரட்சிகர தினம் இது. பெண் விடுதலையின் வரலாற்றுத் தேவையையும், அவசியத்தையும் இன்றைய தினம் குறித்து நிற்கிறது.

இந்தப் பெண் எழுச்சி தினம் தமிழீழம் எங்கும் இன்று கொண்டாடப்படுவதையிட்டு நான் பெருமகிழ்சசி அடைகிறேன்.

எமது சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப காலம் தொட்டே பெண் விடுதலையை ஒரு பிரதான இலட்சியமாக நாம் வரித்துக்கொண்டோம். பெண்கள் விழிப்புற்று, எழுச்சி கொண்டு, தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந்தப் போராட்டம் ஒரு தேசிய போராட்டமாக முழு வடிவத்தையும் பெறும் என்ற உண்மையை நாம் அன்று தொட்டே உணர்ந்திருந்தோம்.

நாம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் இனம். அந்நியனின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டு வந்தபோதும் எமக்குள்ளே, எமது சமூக வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கியொடுக்கி வருகிறோம். இப்படியாக எம் மத்தியில் நிலவிவரும் ஒரு ஒடுக்குமுறை வடிவம்தான் பெண் ஒடுக்குமுறை. பழமைவாதத்திலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாகப் பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாத்திரங்களும் அந்தக்காலம் தொட்டே பெண் அடிமைத்துவத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்ற பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது.

எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண்விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியல்மயப்படுத்தி போராட்டத்துக்கு அவர்களை அணிதிரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. எதிரியைக் களத்தில் சந்தித்து நிற்கிறது.

காலம் காலமாக தூங்கிக்கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது.

வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண் போராளிகள் தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

ஒரு புதுமைப்பெண்ணை, ஒரு புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது.

தமிழ் சமூகத்தில் இந்தப் பெண் புரட்சி தொடர வேண்டும். மேலும் மேலும் புரட்சிப் பெண்கள் எமது விடுதலை இயக்கத்தின் பின்னால் அணிதிரளவேண்டும். போராட்டம் மூலமாகவே நாம் தேச விடுதலையையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.

அலசல்
அலசல்