img/728x90.jpg
அமேசன் காடுகளின் பேரழிவு உலகத்துக்கே ஏற்பட்டுள்ள பேராபத்து - சீமான்

அமேசன் காடுகளின் பேரழிவு உலகத்துக்கே ஏற்பட்டுள்ள பேராபத்து - சீமான்

அமேசன் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “அமேசன் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, அணையாது இரு வாரங்களாக எரிகின்றமையானது உலகம் முழுவதிலும் உள்ள சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமேசன் காடுகளில் ஏற்பட்டிருக்கிற இந்த காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில்  அமேசன் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முயற்சியையும் பிரேசில் அரசாங்கம் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசன் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும்.

சூழலைக் காத்து வந்த அமேசன் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியானக் கார்பனை வெளியிட்டு வருவதனால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.