img/728x90.jpg
லெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..

லெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..

2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் படைத்துறை சாதனைகளைப் புகழ்வதென்பதும், அதைப் பதிவு செய்வதென்பதும் எதோ வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக சிலரது அயராத உழைப்பின் பிரகாரம் அவ்வப்போது அது ஓரளவு பதிவு செய்யப்பட்டே வருகிறது.

ஆனால் இவை வரலாற்று நோக்கிலோ, அதை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாக அடையாளம் கண்டோ, படைத்துறை விஞ்ஞான அடிப்படையிலோ அவை பதிவு செய்யப்படவில்லை.

பெரும்பாலும் உணர்வின் பாற்பட்ட பதிவுகளே அவை.

2009 இற்கு முன்பு கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனாலும் விதி விலக்காக ஒரு தனிமனித ஆளுமையாக தராக்கி சிவராம் மேற்படி பன்முகக் கண்ணோட்டத்தில் புலிகளின் சாதனைகளைப் பதிவு செய்தார்.

அதனால்தான் அவர் கொல்லவும் பட்டார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளை பேச்சுக்கு அழைத்து வலுவிழக்கச் செய்து அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்குலக - பிராந்திய அரசுகள் சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டத்தின் வழி உலகில் வேறு ஒரு போராட்ட இயக்கம் என்றால் குறிப்பான ஆறு மாதங்களிற்குள் அழித்தொழிக்கப்பட்டிருக்கும் அல்லது மண்டியிட்டிருக்கும்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழு செயலில் இருக்க ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறிய எதிரியானவன் - போதாததற்கு கருணா குழு போன்ற துணை இராணுவக் குழுக்களையும் களத்தில் இறக்கி புலிகளை ஒரு தடுப்பு சமரே செய்யும் புறச் சூழலில் பல மாதங்கள் வைத்திருந்ததை பலர் மறந்து விட்டார்கள்.

புரிந்துணர்வு உடன்படிக்கையை சாதகமாக்கி புலிகள் தரப்பிலிருந்து பலரை தம் பக்கம் இழுத்தது மட்டுமல்ல படைத்துறை, புலனாய்வு, தொழில்நுட்ப வளங்களையும் அதியுச்ச அளவில் சிங்களத்திற்கு வழங்கியது அனைத்துலக - பிராந்திய சதிக் கூட்டணி.

புலிகள் என்றபடியால்தான் பல வருடங்கள் தாக்குப் பிடித்தார்கள்.

அதைச் சாத்தியப்படுத்தியது தலைவரின் அதியுச்ச இராணுவ தந்திரமும் ஒவ்வொரு போராளிகளினதும் ஓர்மமும்.

படைத்துறை ஆளணி வலிமையும், படைக்கல பெருக்கமும், தொழில்நுட்ப வளங்களுமே ஒரு யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என்பதே நவீன போரியலாளர்களின் தியரி.

அதுவே அரசுகளின் யுக்திகளும் கூட.
ஆனால் தலைவர் இறுதி யுத்தத்தில் இந்த சமன்பாட்டைக் கிட்டத்தட்ட கலைத்துப் போட்டார்.

கொத்தணிக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மூலம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு இதுதான் முதன்மைக் காரணம்.

மனித வலுவை மட்டும் கொண்டு ஆளணி, படைக்கல, தொழில்நுட்ப வளங்களுடன் திரண்டு நிற்கும் ஒரு அரச படையை அழித்தொழிப்பதென்பது இந்த உலக ஒழுங்கையே மாற்றிவிடும் அபாயம் உணரப்பட்ட பின்பே அரச பயங்கரவாத கூட்டணி இன அழிப்பினூடாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பலர் நம்புவது போல் சிங்களம் என்றுமே போர்க்குற்ற / இன அழிப்பு விசாரணைக்கு முகம் கொடுக்கப் போவதில்லை. காரணம் உண்மையான குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த உலக ஒழுங்கை கட்டிக் காப்பவர்கள். தேசிய இனங்கள் அதை ஊடறுப்பதை என்றுமே அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் புலிகள் அதை அசைத்துப் பார்த்தார்கள்.

வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை எதிரிகளே சொல்வார்கள்.

அதை ஒரு கோட்பாடாகவும் ஏற்றுக் கொள்வார்கள்.

தலைவரின் வழி நின்று ஒவ்வொரு போராளியும் செய்த சாதனை அது.

அந்த வகையில் விக்டர் கவச எதிர்ப்பு படையணி போராடும் தேசிய இனங்களிற்கு நம்பிக்கையூட்டும் ஒரு போரியல்
எடுத்துக் காட்டு.

அதன் தனிப் பெரும் சிகரம் லெப் கேணல் அக்பர்.

தலைவரின் தண்ணீர் கோட்பாடு பேசப்படும் பொழுது அக்பரின் புகழ் வெளி உலகத்திற்கு தெரிய வரும்.

அக்பர் உட்பட அனைத்து விக்டர் கவச எதிர்ப்பு போராளிகளுக்கும் தமிழர் தேசம் இந்தத் தருணத்தில் தலை வணங்குகிறது.

- பரணி கிருஷ்ணராஜனி -