img/728x90.jpg
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்கொள்ள பிரித்தானியா தயார் - பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்கொள்ள பிரித்தானியா தயார் - பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் தொடர்பான முன்னேற்பாடுகள் உரிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அறிக்கையொன்றின் தகவல்கள் கசிந்த போதிலும் பிரெக்சிற்றை எதிர்கொள்ள தமது அரசாங்கம் தயாராகவே இருப்பதாக அவர் நேற்று (திங்கட்கிழமை) குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் ஆட்சி காலத்தில் பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வௌியேறுவதற்கான பிரெக்சிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற  முயற்சித்தது.

எனினும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்காமையால் அந்த முயற்சி மூன்று முறையும் தோல்வியடைந்தது.

அதற்காக வழங்கப்பட்ட கடந்த மார்ச் 29 ஆம் திகதியுடனான காலக்கெடுவை விட எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற்றிற்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எந்தவொரு ஒப்பந்தத்தையும் நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் சபதம் செய்துள்ளார்.

பிரெக்சிற்றிக்கு பின்னரான நெருக்கடிகள் தொடர்பில் கசிந்துள்ள அறிக்கை, ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று ஒப்பந்தம் இல்லாமல் இங்கிலாந்து வெளியேறினால் எவ்வளவு மோசமான விடயங்கள் இடம்பெறும் என்பதை தெளிவுபடுத்துவதாக, தொழிற்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம், ஐரிஷ் எல்லை திட்டம் தொடர்பிலான தனது எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளார்.