img/728x90.jpg
பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரசாரகர் கினா மில்லர் வழக்கு தாக்கல்

பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரசாரகர் கினா மில்லர் வழக்கு தாக்கல்

பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரித்தானிய மகாராணியார் வழங்கியுள்ளார்.

இந்தநிலையிலேயே இதற்கு எதிராக பிரெக்ஸிட்டிற்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் பிரசாரகர் கினா மில்லர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரித்தானிய பாராளுமன்றத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முடக்கியுள்ளதை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.

அந்த மனுவை அவசரமாக விசாரித்து, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ஆம் திகதிக்குள் தீர்ப்பு வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

சட்டத்தின் ஆட்சியையும், உலகமே மதிக்கும் பிரித்தானிய ஜனநாயகத்தையும் போற்றும் நாட்டு மக்கள் அனைவரும் எனது முடிவுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றேன்.

நாடாளுமன்றத்தை முடக்கும் பொரிஸ் ஜோன்சனின் இந்த முடிவு கோழைத்தனமானதாகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், அயர்லாந்து தீவில் பிரித்தானியாவின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் இரு பகுதிகளிடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் தொடர்வது என முன்னாள் பிரதமர் தெரசா மே-யும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

எனினும், இது பிரித்தானியாவின் இறையாண்மையை பாதிக்கும் எனக் கூறி அந்த ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, தனது பதவியை தெரசா மே இராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அவர், ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் திகதியான ஒக்டோபர் 31-ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார்.

இந்தநிலையில் பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 14-ஆம் திகதி வரை முடக்குவதாக அவர் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.