img/728x90.jpg
பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணைக்குழு - பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணைக்குழு - பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணைக்குழுஅமைக்கபடுமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

டெய்லி டெலிகிராப் செய்தித்தாளுக்கு நேற்று (திங்கட்கிழமை) அளித்த செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இனவெறியை கையாளுவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிற அனைத்து துறைகளிலும் சமத்துவமின்மையின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அதனை கவனிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டிய தருணம் இது.

இந்த நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட எவரும், ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை வெறுமனே புறக்கணித்து விட முடியாது. அதேசமயம், நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் போக்கை சகித்துக் கொள்ள இயலாது.

எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, இந்த பிரச்னைக்கான தீர்வு எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது நிகழ்காலத்தைப் பற்றிதான் பேச வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்துவதில் பயனில்லை’ என கூறினார்.

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் உரிமைக் குரல் போராட்டங்கள், பிரித்தானியாவிலும் எதிரொலித்துள்ளதன் பின்னணியில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய ஆணைக்குழு அமைப்பது, அதன் வடிவமைப்பு, கால அட்டவணை உள்ளிட்ட பிற விபரங்களை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிடவில்லை. அதேசமயம், ஆணையம் அமைக்கும் பணியையும், அதன் உறுப்பினர்களை நியமிக்கும் பணியையும் சமத்துவத்துறை அமைச்சர் கெமி பேடெனோச் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.