img/728x90.jpg
பிரித்தனியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு

பிரித்தனியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு

பிரித்தனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. 

இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி இங்கிலாந்தில் மொத்தம் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 907 இறப்புகள் பதிவாகியுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் 1,631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100,162 ஆக அதிகரித்துள்ளது.

டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அந்த மோசமான புள்ளிவிவரத்தில் உள்ள துக்கத்தை கணக்கிடுவது கடினம் என்றும் பயங்கரமான மற்றும் சோகமான உயிரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாளில் உயிரிழந்த அனைவருக்காகவும் தான் மிகவும் வருந்துவதாகவும் பிரதமராக உள்ள காலத்தில் அரசாங்கம் செய்த எல்லாவற்றிற்குமான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று அடையாளம் காணப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதிவரை நாட்டில் 50 ஆயிரம் உயிரிழப்புக்களே பதிவாகியிருந்த நிலையில் வெறும் 76 நாட்களில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.