• :
  • :
களத்தில்

இலட்சியத்தை தொடரும் வரை முள்ளிவாய்க்கால் பெரு நெருப்பு அணைய போவதில்லை!

இலட்சியத்தை தொடரும் வரை முள்ளிவாய்க்கால் பெரு நெருப்பு அணைய போவதில்லை!

இலட்சியத்தை தொடரும் வரை முள்ளிவாய்க்கால் பெரு நெருப்பு அணைய போவதில்லை!

இந்த நூற்றாண்டின் கொடிய தமிழின படுகொலையை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க ஒவ்வொரு தமிழர்களுக்கும் உரிமை உண்டு.
 
ஆனால் அதனை ஒழுங்கு செய்யும் உரிமை போராடிய போராளிளுக்கும்,  மக்களுக்கும்  இன்று மண்ணில் போராடும் மக்களுக்கும் அரசியல்வாதிகளை விட  முதன்மையாக உண்டு.
 
அரசிடம் ஊதியம் வாங்கி மக்களுக்காக எதையும் செய்ய முடியாதவர்களை விட மக்களுக்காக எந்த பலனையும் எதிர்பாராமல்  இன்றும் போராடும் உறவுகள் மேலானவர்கள்.
 
போராட்டத்தை எவர் தவறு என சொன்னாலும்... அவர்கள் முன்னாள் போராளிகளே என்றாலும் இந்நாளில் போராட்டத்தை முடக்க அரசுக்கு துணை நின்றால் அவர்கள் தவறானவர்கள். 
 
ஆனால் உண்மையான போராளி எந்நாளும் போராளியாகவே இருப்பான். 
 
மக்கள் வேறு போராளிகள் வேறு அல்ல போராடி கொண்டிருக்கும் வரையில். 
 
அனைத்து தமிழர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைத்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று வணங்கி அந்த இடத்திலேயே "நீதியை நிலை நாட்டும் வரை நாம் ஓயமாட்டோம்!" என உறுதி எடுத்து கொள்ளும் நிகழ்வே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு என்பது!
 
உலகில் எங்கு இந்த நிகழ்வு நடைபெற்றாலும் இதுவே உறுதி மொழி!
 
நீ பெரிது நான் பெரிது என மோதி கொள்ளும் போட்டி போடும் தமிழர்களை பிரித்தாளும் யுத்த களம் அல்ல அது!
 
நாமாக ஒன்றுபட்டு "நாடு பெரிது என போற்றி உறுதியோடு போராடுவோம்!" என வலிமையோடு எழுந்து  நின்று ஏதேனும் ஒரு வழியில் ஓயாமல்  போராட உறுதி எடுக்கும் தளம்!
 
அதற்கு தயாரானவர்களே உண்மையான போராடும் மக்கள்! அவர்களே இன்றைய போராட்டத்தை கையில் எடுத்து வரலாற்றை முன்நகர்த்துபவர்கள்!
 
அதற்காக முன்னாள் போராளிகளை தூக்கி எறிவதாக பொருள் அல்ல! அவர்கள் ஈகம் போற்றுதற்குரியது. அவர்கள் விழிகளுக்கு ஒப்பாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்!
 
மக்களிடம் இருந்து எதையும் பதிலுக்கு எதிர்பாராமல் தம்மை அர்ப்பணித்து போராடியவர்கள் போராளிகள்.
 
நாளைய சந்ததி நலமோடு வாழ தன்னை அர்பணித்தவனே மக்களுள் இருந்து எழுச்சி கொண்டு எழுந்து போராடும் போராளி! அவர்கள் எங்கள் காவல் தெய்வங்கள்!
 
நாட்டுக்காக தம்மை இழந்த நிலையிலும் தமது போராட்டத்தின் நீதியை போற்றி கொண்டே வாழும் அவர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
 
அவர்கள் அர்ப்பணிப்புகள் உயர்ந்தவை!
 
ஆனால் முன்னாள் போராளிகள் என்று கூறி கொண்டு அவர்களில் சிலர்  இந்நாளில் "போராட கூடாது!" என அரசோடு கூடி நின்று தடுப்பவர்களை மட்டும் ஏற்று கொள்ள முடியாது. அவர்களை "பாவம் அவர்கள் சூழ்நிலை கைதிகள்" என  பரிதாபத்தோடு பார்க்கலாம் அவ்வளவே.
 
நோகடிக்கப்படுவோம் என தெரிந்தும் போராட சென்றவர்கள் ஒருபோதும் போராட்டத்தை குறை சொன்னதில்லை.
 
போராட்டத்தை யாரும் வலிந்து வரவழைக்க முடியாது.  தடை போடவும் முடியாது. 
 
எங்கள் தமிழின விடுதலை போராட்டத்தின் தொடர்ச்சியில்  போராட்டத்தை நேற்றைய போராளிகளோ இன்றைய போராளிகளோ  தான் போராடுவார்கள் என்று இல்லை. 
 
அவர்களின் வீரத்தை வரலாற்றை  படித்து நாளைய போராளிகளும் வரலாற்றை படைக்க எழுந்து  போராடுவார்கள்!
 
போராட்டத்தின் தேவைகள் உள்ளவரை மக்கள் போராட்டத்தை கையில் எடுத்து கொண்டே இருப்பார்கள். மக்களுள் இருந்து போராட்டம் முகிழ்த்து கொண்டே இருக்கும்!
 
இலட்சியத்தை தொடரும் வரை இலட்சிய மாந்தர்கள் ஓய்வதில்லை! 
 
முள்ளிவாய்க்கால் பெரு நெருப்பும் அணைய போவதில்லை!