• :
  • :
களத்தில்

இறுதி யுத்தம் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது! - ச.ச.முத்து

இறுதி யுத்தம் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது! - ச.ச.முத்து

இறுதி யுத்தம் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது! - ச.ச.முத்து -                                                                             

வெளிப்பார்வைக்கு இறுதியுத்தம் என்பது மே 18 2009 உடன் முடிவடைந்தது போல தோன்றினாலும் அது இப்போதும்  நடந்து கொண்டிருக்கிறது வேறு வேறு வடிவங்களில்.. 

2009 மே 18 ல் விடுதலைக்கான கட்டுமானங்களும் படையணிகளும் நிலம்மீதான தமிழின நிர்வாகமும் நாம் இழந்திருந்தாலும் ஒரேஒரு விடயம் இழக்கப்படாமல் எம் எல்லோரிடமும் இருந்து கொண்டிருக்கிறது இப்போதும்கூட .. அதுதான் தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அமைப்பு 30வருடங்களும் மேலாக நடாத்திய போராட்டத்தின் மூலம் உருவாகி எழுந்து எழுச்சி கண்ட தமிழ்தேசிய உணர்வு.
 
அந்த உணர்வு என்பது கண்ணுக்கு தெரியாத அற்புதமான ஒரு ஒருங்கிணைவு. எந்தவொரு ஆதிக்க சக்தியாலும் இலகுவில் வெற்றி கொள்ளமுடியாத பெரும் உள எழுச்சி.பல ஆயிரம் வருடம் பழமையும் செழுமையும் கொண்ட ஒரு மொழியை பேசும் மக்களின் நீண்ட வரலாற்றின் மீள் எழுச்சி.
 
உலகின் மிகப்பெரும் வல்லாதிக்கங்கள்கூட தமது நவீன ஆயுதங்களால் அவர்களின ஆளில்லாத விமானங்களாலும் மிக நுட்பமாக நேர்த்தியாக வந்து தாக்கும் ஏவுகணைகளாலும் நீர்மூழ்கிகளாலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு மகத்தான அறம் அது.
 
அந்த அற உணர்வை எமக்குள் விதைத்தது 30வருடங்களுக்கும் மேலாக தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்திய தியாகம் நிறைந்த அர்ப்பணங்களால் உருவான போராட்டமே ஆகும்.
 
அது ஒருவகையான சிந்தனை தெளிவு. அதனை வெற்றி கொள்ள முடியாது இருப்பதாக இப்போது இருக்கும் சிங்கள தேச அதிபர் முதல் சிங்களதேசத்தின் அமைச்சர்கள்வரை அனைவரும் பலமுறை பகிரங்கமாவே புலம்பி இருக்கிறார்கள்...
 
 முதலாவது மாவீரன் சங்கர் முதல் முள்ளிவாய்க்காலில் இறுதியாக மாவீரனான போராளிவரைக்கும் அதன் பின்னர்கூட தமிழீழம் என்ற கனவுடன் முயற்சிகள் செய்த தெய்வீகன் அப்பன் கோபி வரைக்கும் தம்மை ஆகுதி ஆக்கி எழுதிய ஒரு வீர வரலாறு எமது மனங்களுக்குள் உருவாக்கிய ஒரு உணர்வு காலகாலமாக நீடித்து தொடரும்.
 
என்னதான் போரியல் உபகரணங்களையும் படையணிகளையும் நிலம்மீதான தமிழர்களின் நிர்வாக அலகுகளையும் நிர்மூலமாக்கினாலும்கூட உள்ளங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் விடுதலை உணர்வை தமிழர்கள் என்ற தேசிய எழுச்சியை வெற்றி கொள்ளும்வரை சிங்களம் நிம்மதியாக தூங்கமுடியாது என்பதை முன்னாள் சிங்களதேசஅதிபர் முதல் இன்நாள் அதிபர் வரைக்கும் மிக தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
 
அது மட்டும் அல்லாமல் சிங்களதேசத்தின் அரசு கட்டிலில் அமரும் கனவுகளுடன் வலம்வரும் பேரினவாதிகள் அனைவருக்கும் இந்த கசக்கும் உண்மை நன்றாக தெரிந்தே இருக்கிறது. 
 
தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டளைப்பீடத்தையும் படையணிகளையும் நிர்வாக அலகுகளையும் சிதைத்து பின்னடைய செய்ய சிங்களத்துடன் கைகோர்த்து உதவிய இந்தியவல்லாதிக்கத்துக்கும் மிக தெளிவாகவே தெரிந்திருக்கிறது வெறும் படையணிகளையும் நிலக்கீழ்அரண்களையும் அழித்துவிட்டால் மட்டும் தமிழீழவிடுதலைப்புலிகளின் இலட்சியத்தை அழித்துவிட முடியாது என்று.
 
என்னதான் இரும்புச்சிறை போன்ற ஒரு சமூகத்தை உருவாக்கி இராணுவ கண்களின் பார்வைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது தமிழீழதாயத்தில் தன்னியல்பாக உருவாகி எழும் எழுச்சிகளும் (அவை நீண்ட காலம் தொடராது விட்டாலும்கூட)
தமிழ்நாட்டில் 2009க்கு பின்னர் ஏற்பட்டு இருக்கும் தமிழ்தேசிய எழுச்சியின் பரிணாமங்களும், சிந்தனைப்போக்கும்
புலம் பெயர்ந்த தேசங்களில் இன்னும் தொய்வடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் விடுதலைநிகழ்வுகளும் எழுச்சியும் பல பாடங்களை சிங்களபேரினவாதத்துக்கும் இந்தியவல்லாதிக்கத்துக்கும் கொடுத்தபடியே இருக்கிறது.
 
கருத்தை அழிப்பதன் மூலம்தான் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டு நிரந்தர அடிமைகளாக வைத்து அரசாளமுடியும் என்று சிங்களம் நினைக்கிறது.அந்த கணிப்பு மிக சரியானதுதான்.உலக வரலாற்றின் பல பக்கங்களில் இதுவே காணவும்படுகிறது.
 
விடுதலைப்போராட்டங்களுக்கும் புரட்சிமுன்னெடுப்புகளுக்கும் எதிராக உலக அரசுகள் முன்னெடுக்கும் கொயின்(coin) எனும் எதிர்புரட்சிமுறைகளில் மிக முக்கியமானது இதுதான். கருத்தை அழித்தல் அல்லது கருத்தைசிதைத்தல் என்பதுவே.
கருத்து என்பது மிக உறுதியாகும் தருணத்திலேயே இலட்சியமும் உறுதியாகிறது.
 
தமிழர்களின் கருத்தியல் என்பது தமிழீழவிடுதலைப்புலிகள் உருவாக்கிய ஒரு பெரும் கருத்தியலின் தொடர்ச்சி ஆகும்.உதாரணமாக மில்லர் என்பது எதிரியின் அசுரத்தனமான முற்றுகையை எதிர்கொள்ளும் ஒரு போர்முறை என்பது ஒருபுறம் இருக்க ஒரு இனம் தன்னுடைய இருத்தலுக்காக தனது இறைமையை தக்கவைப்பதற்காக தனது விடுதலையை வென்றெடுப்பதற்காக தியாகத்தின் உச்சத்தையையும் தொடலாம் தொடமுடியும் என்ற கருத்து அதற்குள் மிக ஆழமாக இருப்பதை காணலாம்.
 
இப்படி 30வருடத்துக்கும் மேலான போராட்டத்தின் ஒவ்வொரு அர்ப்பணிப்பும் வழிகாட்டுதலும் பெரும் கருத்தாக தொகுத்து எம் எல்லோருக்குள் ஆழமாக வேரூன்றி நிற்கிறது.
 
இன்னுமொரு நிகழ்வை உதாரணமாக சொல்லலாம், இனி இந்த இனம் எழும்பவே முடியாது என்று எதிரியும் எதிரிக்கு முண்டுகொடுத்த நாடுகளும் முழு உலகமும் நினைத்திருந்த பொழுதில் அப்படியான ஒரு கற்பனையுடன் இனி தமிழினம் எழுந்து உட்காரவே பல பத்து ஆண்டுகள் ஆகும் என்று நினைத்து கொண்டு லண்டன் வந்த மகிந்தவுக்கு தமிழர்கள் கொடுத்த பலத்த அடியும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக உரை நிறுத்தமும் தமிழர்கள் இன்னம் மிக பலமான கருத்து வளத்துடன் இலட்சிய உறுதியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உரத்து சொன்னது.
 
சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.
 
என்னவிதமாக தமிழர்களின் தாயககோட்பாடு தமிழதேசிய எழுச்சி போன்ற கருத்துகளை இல்லாமல் செய்யலாம்இதுவே எதிரியினது சிங்களபேரினவாதத்தினது இப்போதைய பெரும் தலையிடி..
 
இதற்கு ஒரேஒரு விடயத்தை செய்துவிட்டால் மிக இலகுவாக தமிழர்களின் அடையாளத்தை தமிழர்களின் தேசியஉணர்வை இல்லாமல் செய்துவிடலாம்.
 
தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றி சிந்தனையை தமிழீழவிடுதலைப்புலிகளை ஞாபகம் கொள்ளும் நிகழ்வுகளை தமிழீழவிடுதலைப்புலிகள் பற்றிய வரலாற்றை மெதுமெதுவாக இல்லாமல் செய்யும்போது தமிழர்கள் என்ற அடையாளமும் தன் உணர்வும் போராட வேண்டும் என்ற அற உணர்வும் தமிழ்தேசிய எண்ணமும் இல்லாமலேயே போய்விடும்.
இன்று உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்களை ஒருங்கணைக்கும் இரண்டு கருத்தியல் தளங்கள் எவை என்றால் 
 
1)தமிழீழவிடுதலைப்புலிகளின் வீரமிகு போராட்டவரலாறும் மாவீரர்களும் 
2)தேசியதலைவர் பிரபாகரனும் ஆகும்.
 
ஒவ்வொரு மாவீரனின் வரலாறும் அவன் உறுதியுடன் போரிட்ட இறுதிக்கணங்களும் பல ஆயிரமாக விரிந்து பரந்து நீண்டு கிடந்தாலும் அவை எல்லாவற்றினதும் ஒரு அற்புதமான ஒருங்கிணைவாக தொகுப்பாக மாவீரர்நாள் திகழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.அந்த நாள் தரும் எழுத்தில் வடிக்கமுடியாத உணர்வுக்கலவைகளும் உறுதிவகித்தலும் சிங்களபேரினவாதத்துக்கும் பிராந்திய வல்லாதிக்கத்துக்கும் எப்போதுமே கிலியை தருபவை.அதிலும் சென்ற வருடங்களில் அத்தனை ராணுவகண்காணிப்பு பயமுறுத்தல்கள் கொடும்சட்டங்கள் மத்தியிலும் தாயகத்தில் மாவீரர்நாளில் திரண்ட மக்கள் திரளும் அவற்றின் மிக உண்மையான உணர்வு எழுச்சியும் சிங்களபேரினவாதத்துக்கு பல தோல்விகளை மனதளவில் தந்து வருகிறது.
 
இந்த மாவீரர்நாளை பொதுமை படுத்துவதன் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகள் நடாத்திய தியாக வேள்வியை சிங்களஅரசுக்கு ஒட்டுகுழுக்களாக இருந்தபடி எலும்புகாவிய அமைப்புகளின் உயிர் இழப்புகளுடன் சமனானது ஆக உருவாக்கினால் உண்மையான அர்ப்பணம்கூட காலப்போக்கில் அவற்றின் வீரியம் இழந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதே எதிரிகளின் கணிப்பு. அது ஓரளவுக்கு சரியான கணிப்பும்தான்.
 
இதற்கான வேலைகளை பல உளவியல் தளங்களில் சிங்களதேசம் பல வடிவங்களில் முன்னெடுக்க தொடங்கியும் விட்டிருக்கிறது.
 
சென்ற வருடத்து மாவீரர்நாளின் போது கோப்பாய் மாவீரர் துயிலகம் முன்பான மாகாணசபை உறுப்பினர் ஒருவர் பிரபாகரன் ரெலோ அமைப்பில் இருந்து சென்றே தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார் என்று சொன்னது வெறும் வார்த்தைகளாக மட்டும் பாhக்க வேண்டாம்.
 
இப்போது வல்வெட்டித்துறை தீருவிலில் குமரப்பா புலேந்திரன் உட்பட இந்திய-இலங்கை சதியால் வீரமரணத்தை தழுவிக்கொண்ட பன்னிரண்டு தமிழீழவிடுதலைப்புலிகள் நினைவாக தூபி அமைந்திருந்த மரணித்த எல்லா  அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களும் என்ற நயவஞ்சகமான மாயதோற்றத்துடன் ஒரு தீர்மானத்தை ஈபிடிபி தமிழதேசிய கூட்டமைப்பு இணைந்து நிறைவேற்றி இருக்கிறது.
 
மிகவும் உறுதியுடன் வீரமுடன் தமிழீழஇறைமையை விட்டு கொடுக்காமல் போராடிய ஒரு அமைப்பின் தியாகவரலாற்றுடன் மிகவும் குழப்பங்களும் உள்முரண் கொலைகளும் தமிழீழவிடுதலைப்புலிகளாலேயே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றைய அமைப்பின் மரணங்களை சமனாக வைப்பதன் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான கருத்தியலை அழிக்கப்பாhக்கிறார்கள்.
 
வல்வெட்டித்துறை ஆலடிஓழுங்கையில் தேசியதலைவரின் வீட்டுக்கு ஒரு பத்துவீடு தள்ளி தமிழீழவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் தலைவரின் நண்பருமான ஒருவரின் பெயரில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு வாங்கி விட்டிருந்த நிலம் ஒன்று பகிரங்கமாக விற்கப்ப்டு அதன்மூலம் வந்த பணத்தில் வாங்கப்பட்டதுதான் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரண்டு தமிழீழவிடுதலைப்புலிகளின் நினைவுதூபி காணி.அந்த காணியும் அதில் படிந்துள்ள பன்னிரண்டு தமிழீழவிடுதலைப்புலிகளின் சாம்பலும் ஒரு தியாகம் மிக்க போராட்டம் ஒன்றினதும் அதன் தளபதிகள் போராளிகளதும் உச்சமான அர்ப்பணத்தின் சாட்சியங்கள்... தமிழினம் சிங்களபேரினவாதத்தை ஒருபோதும் நம்பவே கூடாது என்பதற்கான சாட்சியம் அந்த இடம்.
 
எண்பதுகளின் நடுப்பகுதியில் இதனை போன்ற ஒரு சதிமுயற்சியை இந்தியபுலனாய்வு பிரிவு செய்திருந்தது.அப்போது உணமையான தாயகவிடுதலை இலட்சியத்துடன் வீரமுடன் போராடி கொண்டிருந்த தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்புடன் சோத்து பார்சல் அமைப்புகளை வெற்று சிவப்புகனவு  கண்டு கொண்டிருந்த அமைப்புகளை கொண்டு வந்து சேர்ப்பதன் மூலம் சரியான ஒரு வழிகாட்டலை இந்த இனம் பெற்று விடகூடாது என்று சதி திட்டமிடலை ரோ அமைப்பின் தலைவராக இருந்த கிறிஸ் சந்திர சக்சேனா செய்திருந்தார்.
 
அதனை முறியபடித்து எழுந்ததுதான் முப்பதுவருட தியாகம் நிறைந்த மிக தெளிவான தமிழீழவிடுதலைப்போராட்டம்.
இப்போதும் வெறும் வாய்ச்சவடால் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலரையும் நகரசபை உறுப்பினர்களையும் சிங்களம் எறியும் எலும்புதுண்டுகளை கைகளால் ஏந்தாமல் வாயாலேயே ஏந்தி வாழும் ஈபிடிபி உறுப்பினர்களையும் வைத்து வல்வெட்டித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் சிங்களத்தின் சதியின் ஒரு சிறிய நகர்வு மட்டுமே .
மெதுமெதுவாக தமிழர்களின் தியாகவரலாற்றை நீர்த்து போய் இறுதியில் ஒன்றும் இல்லாமல் Nhக செய்து மொன்ணையான ஒரு இனமாக எம்மை நேர்மையுடன் போராடிய வரலாறு ஏதுமற்ற இனமாக எம்மை மாற்றி இறுதியில் தேடிச்சோறு நிதம் சாப்பிட்டு உறங்கி மறையும் ஒரு விலங்குகளாக உருவாக்கும் திட்டத்தின மிக சிறிய மாற்றி எமது கல்லறைகளுக்கான குழிகளை எம்மை கொண்டே தோண்ட வைத்து எமது இனத்தை முழுதாக புதைத்து தோற்றம் மறைவு எழுதி விடும் திட்டம் ஒன்றின் சிறிய நகர்வுதான் எமது அடையாளங்களை இல்லாது செய்யும் நகர்வு.
 
மானுட வரலாற்றில் அதுவரை எழுதப்பட்டிராத முறைகளில் எல்லாம் அர்ப்பணங்களை நிகழ்த்திய ஒரு பெரும் போராட்டவரலாறும் அந்த வரலாற்றின் மூலவராக நின்று வழிகாட்டிய தலைவரும் எப்போதும் எம் பாதைகளை எமக்கு செப்பனிடும் வல்லமையை வழங்குவார்கள்.
 
வரலாறு ஒரு போதும் பின்னோக்கி பயணிக்காது. அது முன்னோக்கியே செல்லும்.எல்லாவழதமான தடைகளை நொருக்கியபடி முன்னோக்கி செல்லும்.
 
   - ச.ச.முத்து -