• :
  • :
களத்தில்

கானல்நீர் கனவான்களை நம்புவதே மக்களின் தலைவிதி! – இதயச்சந்திரன்

கானல்நீர் கனவான்களை நம்புவதே மக்களின் தலைவிதி! – இதயச்சந்திரன்

கானல்நீர் கனவான்களை நம்புவதே மக்களின் தலைவிதி! – இதயச்சந்திரன்

தமிழ்த் தேசிய அரசியல் தற்போது வடமாகாண சபையில் மையங்கொண்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகிறதா..?.

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது வலிமிகுந்த போராட்டங்களை இன்னமும் கைவிடவில்லை.

இந்த முக்கிய செய்திகள் ஓரங்கட்டப்பட்டு, மாகாணசபைத் தேர்தல்களும், திறப்பு விழாக்களும், ‘கார்பொரேட்’ மீட்பர்களின் பேச்சுக்களும் நமது ஊடகங்களை நிரப்புகின்றன.

தமது பெருவணிக இலாபங்களுக்காக திரைமறைவில் அரசோடு பேசிக்கொண்டு, மக்கள் நலன்விரும்பி போல் தமிழ்த்தேசியம் பேசுவது தற்போதைய போக்கு.

இதற்கு முற்போக்கு அரிதாரம் வேறு பூசப்படுகிறது.

அடுத்த மாதமளவில் வடமாகாண சபையின் நிர்வாக காலம் முடிவடைகிறது.

தமது கட்சியின் உறுப்பினர்கள் அதிகளவில் சபையில் இருந்தாலும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தம்மைக் கண்டு கொள்ளாமல் தனிக் கோஷ்டி அமைத்து செயல்படுகிறார் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் தமிழரசுக் கட்சிக்கு உண்டு.

முதலமைச்சருக்கு எதிரான அனல் பறக்கும் பரப்புரையை இப்போதே ஆரம்பித்துவிட்டார் சபை உறுப்பினர் சத்தியநாதன்.

முதலமைச்சரோடு இருந்து செயல்படும் குழு, அடுத்த தேர்தலில் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு சேருமா? இல்லையேல் தனித்து போட்டியிடுமா? என்ற அரசமரத்தடி விவாதங்கள் மிக விமரிசையாக நடக்கிறது.

இவை எதைக்காட்டுகிறது?.

மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், இந்த அதிகார விரும்பிகளுக்கும் இடையே பெருவெளி உள்ளதா..?. ஆம்..உண்டு என்றே இந்த அதிகாரவாசிகளின் செயல்கள் மக்களுக்கு உணர்த்துகின்றன.

இதனை மாற்றியமைக்கும் வல்லமை யாருக்கு இருக்கிறது?.

இதே மக்களிடம்தான் அதை மாற்றும் அதிகாரமும் இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது அரசியல் தீர்வு பற்றியும், மாகாணசபைத் தேர்தல் வரும்போது அபிவிருத்தி பற்றி பேசுவதே இவர்களின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த கானல்நீர் கனவான்களை நம்புவதே மக்களின் தலைவிதியென்று நினைத்தால், அது தப்பென்று கடந்தகால வரலாறுகள் பலதடவைகள் அவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளன.