• :
  • :
களத்தில்

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

புலிகளின் பரிணாமம்:

புலிகள் இயக்கம் முதலிலேயே முற்றும் முழுதும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. அது ஈழச் சூழலுக்கு ஏற்ப பரிணமித்த ஒரு தனித்துவமான  இயக்கம். யாரையும் அப்படியே படி (copy) எடுத்து உருவாக்கப்பட்டதல்ல.

முதலில் அரசியல் பாதையில் சென்று கொண்டிருந்த ஈழப்போராட்டம், வெற்றிபெற முடியாததனால், ஆயுதப் போராட்டக் கருத்தியல் உருவானது. முதலில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகளுடன்    தோன்றின.  அவற்றிற்கிடையே யார் சிறப்பாக ஈழவிடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும், அவர்கள் பலசாலி ஆவார்கள். இவ்வாறு இயக்கங்களுக்கிடேயே ஒரு பரிணாமப் போட்டி ஆரம்பிக்கிறது. பரிணாமத் தத்துவத்தின்படி  எந்த இயக்கம் ஈழச்சூழலுக்கு ஏற்றபடி கற்று தங்களை சரியாக தகவமைத்துக்  கொள்கிறார்களோ,  அவர்களே வெற்றி பெறுவார்கள்.  முடிவில் அந்தப் பேறு புலிகளுக்கே கிடைத்தது. வேறு எவராவது சிறப்பாக தகவமைத்திருந்தால் அவர்கள் வென்றிருப்பார்கள்.  அவர்கள் பரிணாமத்தால் சிறப்பானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது.

இயக்கங்களுக்கு இடையேயான ஆரம்பகால போட்டிகளை  சகோதர யுத்தம் என்று குற்றம் கூறுவது அறியாமை. ஆரம்பத்தில் யார் வெற்றி பெறுவார், எந்த கருத்தியல் வெற்றி பெரும், எந்த இயக்கம் திறமையானது என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அதற்கான அறிவு யாரிடமும் இல்லை.  மேலும் ஒரு தேசியத்திற்கு ஒரு இராணுவம்தான் இருக்கமுடியும். உலகில் எந்த நாடும் இரு இராணுவங்களை வைத்து இருப்பதில்லை. ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்களாக இருந்தாலும், முடிவில் அவை இணைந்து அல்லது சில அழிந்து ஒரே இராணுவமாகத்தான் பரிணமிக்கும்,  வேறு வழியில்லை. அதுதான் ஈழத்தில்  நடந்தது. இயக்கங்களுக்கிடையே போட்டி இல்லாமல் இயக்கங்கள் கற்கவும் முடியாது, வளர்ச்சியும் அடையவும் முடியாது. ஒரு பலமான தமிழ்த்தேசிய இராணுவப் பரிணாமத்திற்குத் தேவையான ஒன்று.

இவ்வாறு பல இயக்கங்கங்கள் தோன்றாமல், பிரபாகரன் அவர்கள் தலைமையில் மட்டும் ஒரே இயக்கம் தோன்றி  இருந்திருந்தால், அந்த புலிகள் இயக்கம் இப்பொழுது படைத்துள்ள சாதனைகளைப் படைத்திருக்குமா?  இந்தக் கேள்விக்கு பரிணாமத் தத்துவம் கூறும் பதில் “இல்லை” என்பதுதான். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், மற்ற இயக்கங்கள் செய்யும் பிழைகளிலிருந்து கற்று முன்னேற வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களை எளிதாக எதிரிகள் மடக்கி இருப்பார்கள். போட்டி இருக்கும் பொழுதுதான்  கற்றல் அதிவேகமாக இருக்கும். புலிகளை அடைப்படையில் வெற்றி பெற வைத்தது பரிணாமத்தால்  உருவாகும் கற்றலே.

புலிகள் இவ்வாறு வெற்றியடைந்து ஒரு தேசிய இராணுவத்தை  உருவாக்கியபின்னும்  கற்றல் நின்றுவிடவில்லை. உலக இராணுவ உத்திகளை கற்றது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போரிலும் அனுபவம் பெற்று புதிய உத்திகளை, அமைப்புகளை, படைப்பிரிவுகளே  உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். எவ்வாறு பரிணாமம்  அனைத்துப் பாதைகளின் வழியாக செல்கிறதோ, அதே போன்று அனைத்து  வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. படைப் பிரிவுகளுக்குள்ளே யார் எதிரியுடன் போரில் சிறக்கிறார்கள் என்ற போட்டியும் உருவாகிறது. இதன் விளைவாக பல சிறப்பான படையணிகளும் தலைவர்களும் பரிணமிக்கிறார்கள். கடற்படை விமானப்படை என புதிது புதிதாக பரிணமித்துக்கொண்டே இருந்தார்கள். இன்று புலிகள் இருந்திருந்தால், மேலும் பல சாதனைகளை செய்திருப்பார்கள்.  ஒரு செயற்கைக் கோளை ஏவினாலும்  ஏவி இருப்பார்கள்.  அவர்களுக்கு எப்பொழுது ஈழம் அடைவோம், அதற்கு என்ன பாதை  எனவும்  தெரியாது , ஆனால் ஒவ்வொரு அடியும் அதனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அதுதான் பரிணாம உத்தி என்பது. அதைத்தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். புலிகள் இயக்கம் என்பது பரிணமிக்கும் கற்கும் இயக்கம். அதனால்தான் அவர்களால் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடிந்தது.   அவர்கள் கற்றது பலவகைகளில் புதுமையானது என்பதால், உலகம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்களைக் கற்றுக்கொண்டு இருக்கும். இன்று உலக இராணுவப் பள்ளிகளில் புலிகளைப் பற்றியப் பாடம் கட்டாயம் ஒன்று இருக்கும்.  புலிகள் உலக இராணுவங்களுக்குப்  பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள். அதுபோன்ற சாதனைகளை ஒரு பரிணாம இயக்கத்தினால் மட்டுமே செய்ய முடியும்

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

இறுதிப் போருக்குப்பின் இப்பொழுது எது போன்ற உத்திகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்த அளவில் “ஒரு நல்ல தலைமை” கிடைத்தால்தான் நம்மால் மீண்டும் எழ முடியும் என்ற சிந்தனைககளை அடிக்கடிப் பார்க்கிறேன். இது பரிணாம உத்தியின் பார்வையில் பிழையான தத்துவம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்[8].  நாம் எதிர்நோக்கும் சிக்கல் என்பது அறிவுச்சிக்கல். ஈழத்தை எப்படி அடைவது  என்பதற்கான அறிவு யாரிடமும் இல்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு பரிணாமா உத்தி ஒன்றுதான் வேலை செய்யும். நல்ல தலைமையைக் கூட பரிணாம உத்தியின்படிதான் கண்டறிய முடியும்.

பரிணாம உத்தியை தமிழ்த்தேசியத்திற்கு  எவ்வாறு பயன்படுத்துவது?  சிக்கலான தகவமையும்  அமைப்புகளைப்  (Complex Adaptive Systems) பற்றிய ஆராய்ச்சிகள் இதற்கான முறையை அளிக்கிறது [2]. அதை தமிழ்தேசியத்திற்கு கீழ்வருமாறு  பயன்படுத்தலாம்:  இது சிக்கலானது அல்ல,  மூன்று எளிமையான விதிகள் போதுமானது.

விதி 1:  முதலில் பரிணாமப் போட்டிக்கான விதிமுறைகளைப் பட்டியலிடவேண்டும்.  கண்டிப்பாகத் தேவையான விதிமுறைகள் மட்டுமே இருக்கவேண்டும். தேவையற்ற விதிமுறைகள் பரிணாமத்தைப் பாதிக்கும். எவ்வளவு குறைவான விதிகள் உள்ளதோ அவ்வளவு நல்லது.  அனைத்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறினால், அவர்கள் ஆட்டத்தில் இல்லை, அவர்களுடன் மற்ற இயக்கங்கள் ஒத்துழைக்கக்  கூடாது, ஆனால் அவர்களை தோற்கடிக்க முயலவேண்டும்.  இந்த விதிகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது. இப்பொழுது எனது எண்ணத்தில் தோன்றியதைப்  பகிர்கிறேன். இவை எதிர்காலத்தில் மாறலாம்.

புலிகளை உணர்வுப்பூர்வமாக இணைத்துப் போராட வைத்தது மாவீரர்களின் நினைவுதான். உணர்வுகள்தான் மனிதனை இயககும் சக்தி; பகுத்தறிவு  உணர்வுகளுக்கு அடிமை.  அதனால்,  தமிழ்த்தேசிய உணர்வுதான் இயக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கவேண்டியது. அதை எடைபோடும் ஒரே கருவி என்பது  அவர்கள் குடும்பத்துடன் மாவீரர் நிகழ்வுகளை அனுசரிக்கிறார்களா என்பதே. நூறு பொய்கள் சொல்லி ஏமாற்ற முடியும். ஆனால் தொடர்ந்து உணர்வுகளால் இணைக்கும் சடங்குகளை ஏமாற்ற முடியாது [11]. அதனால் பரிணாமப் போட்டியின் விதி என்பது ஒன்றே ஒன்றுதான்: அனைத்து இயக்கங்களும் அவற்றில் உள்ளவர்களும் மாவீரர் நாளையும் மற்ற முக்கியமான நினைவு நாட்களையும்  குடும்பத்துடன் அனுசரிக்கவேண்டும்.

விதி 2: பல்வேறு அமைப்புகளிடேயே போட்டியை உருவாக்க வேண்டும்.  அது அரசியல் முதல் எந்தத் துறையாகவும் இருக்கலாம். எது சரியான பாதை என்பதைப் பரிணாமம் தீர்மானிக்கட்டும். முயற்சிகள்  எவ்வளவு புதுமையோ அவ்வளவு நல்லது. முயற்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால், கூடுதல் சிறப்பு. பரிணாமத்தில் முரண் என்று எதுவும் இல்லை. வெற்றி என்பது மட்டுமே பரிணாமத்தில் முக்கியமானது. பெரும்பாலான முயற்சிகள் தோற்கும். அது ஏற்புடையதே, அதிலிருந்து கற்றுதான் மற்ற அமைப்புகள் வெற்றி அடையும். தோல்வியுற்ற அமைப்புகளும் கொண்டாடப்பட வேண்டியவையே. அமைப்புகள்  தேவையான இடத்தில் ஒத்துழைக்க வேண்டும், தேவையான இடத்தில் முரண்படவேண்டும். தனித்து இயங்குவதுதான் சிறப்பானது என்றால் தனித்து இயங்கவேண்டும். அவ்வாறு தனித்து இயங்கினால், ஒரு அமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பு இன்னொரு அமைப்பைப் பாதிக்காது. அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஒரு பொதுவான தலைமையின் கீழ் இயங்கினால், ஒரு சிறு தவறின் மூலம் மொத்தமும் அழியும். பொதுவான தலைமை என்பது கூடாது. ஒவ்வொரு அமைப்பும் அதற்கான தலைமையுடன் தனித்து இயங்கும். ஓர் அமைப்பு நினைத்தால் இன்னொரு அமைப்புடன் இணைந்து கொள்ளலாம்.  ஒன்றிணைத்து செயல்பட  தலைமை தேவைப்பட்டால், தேவைக்கற்றபடி தலைமைத் தானாக பரிணமிக்கும். வாய்ப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் புதிது புதிதாக அமைப்புகள் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். புதிய  அமைப்புகளை மக்களோ அல்லது மற்ற அமைப்புகளோ உருவாக்கலாம்.

விதி 3. இந்த ஆட்டத்தில்  வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் மக்களும் அமைப்புகளுமே. எந்த அமைப்புகளை அவர்கள் ஆதரிக்கிறார்களோ அவர்கள் வளர்வார்கள். எவை எதிரிக்கு எதிராகத் தாக்குப்பிடித்து வெற்றி அடைகிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். மொத்தத்தில் ஓர் அமைப்பின் வெற்றியைத் தீர்மானிப்பது அவ்வமைப்பு  தனது  சூழலுக்கு ஏற்று சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதே.  இந்த ஆட்டத்தை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த தலைமை எதுவும் தேவை இல்லை. மக்களும் போட்டிபோடும் அமைப்புகளும் தாங்களே இந்த மூன்று பரிணாம விதிகளின்படி ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள். இதைப் பரிணாமத் தத்துவத்தில் சுயஒழுங்கு (Self Organization) என்று அழைக்கிறார்கள். இதன் மூலம்தான் யாரின் மேற்பார்வையும் இல்லாமல் உயிர்கள் பரிணமித்தன. அதுபோலத்தான் நாம் உருவாக்கும் இயக்கங்களும் பரிணமிக்கவேண்டும்.

இந்தப் பரிணாம உத்தியைக் கொண்டு நமக்குத் தேவையான சிறப்பான  அமைப்புகளைப் பரிணமித்து உருவாக்கலாம். நாம் பயன்படுத்தும் பரிணாம உத்தி அடுக்கடுக்காக பல்வேறு அமைப்புகளையும் கிளைகளையும்  உருவாக்கும். அவை தேவைப்பட்டால் இணைந்து இயங்கும் அல்லது தனித்து இயங்கும். எவ்வாறு நமது உடலில் வெவ்வேறு உறுப்புகள் பரிணமித்து  இணைந்து இயங்குகின்றனவோ, அதைப்போல நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கேற்றவாறு அமைப்புகள் பரிணமிக்கும். புலிகள் தெரிந்தோ தெரியாமலோ போர்த்துறையில் மட்டும் இவ்வுத்தியை பயன்படுத்தினர். நாம் அனைத்து துறைகளிலும் வலிந்து பயன்படுத்த வேண்டும்.

பல்வேறு அமைப்புகள் இருப்பதால், ஒன்றின் தோல்வி நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக பரிணாமம் நமக்கு, இரண்டு கண்கள், கைகள் கால்கள் என இரட்டிப்பாக உருவாக்கியதால், ஒன்றை இழப்பதால் நாம் முற்றும் செயலிழப்பதில்லை. அதுபோல ஒரு அமைப்பின் அழிவை இன்னொன்று ஈடுகட்டும். விரைவில் அத்தோல்வியிலிருந்து கற்று புதிய அமைப்புகள் உருவாகி முன்பைவிட சிறப்பாக செயலாற்றும். எந்த ஒரு தனி அமைப்பின் தோல்வி என்பது பெரிய பின்னடைவை உருவாக்காது.

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எழும். தமிழ்த்தேசிய உணர்வுள்ள மக்கள்தான் இந்த உத்திக்கு அடிப்படை (விதி 1) என்பதால், முதலில் அவர்களை உருவாக்குவதுதான் முக்கியமானது.  இன்று தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உணர்வுகளற்று இருக்கிறார்கள். எத்தனை வீடுகளில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது?  ஒருமித்த  உணர்வுள்ள மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்குத்தான் முதலில் பரிணாம உத்தியைப் பயன்படுத்தவேண்டும். இதனை பற்றி பகுதி-1 இல்  எவ்வாறு புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள்  இதற்குத் துணைபுரியும் என்று விரிவாகப் பார்த்தோம் [9]. பல்வேறு   பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்குள் போட்டியை உருவாக்கவேண்டும். எவை உணர்வுப்பூர்வமாக மக்களை இணைக்கிறதோ, அவைத்  தாமாக வெற்றி பெரும். உதாரணமாக யூதர்கள் இவ்வாறு பல்வேறுபட்ட பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி  தங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.    இத்தனைக்கும் அவர்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நாடும் இல்லை, தலைமையும் இல்லை.

எங்கெங்கெல்லாம் சிக்கல்கள் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் பல்வேறு அமைப்புகளை அமைத்து போட்டியை உருவாக்கவேண்டும். இவையெல்லாம் உடனடியாக நடப்பதல்ல. புலிகள் பரிணமித்து பலமாக வெற்றிபெற எவ்வளவு காலமானதோ, அதுபோல ஆகும். அதனால் இவ்வுத்தியை நீண்டகால நோக்கில் பயன்படுத்தவேண்டும். பரிணாம உத்தி என்பது அடிப்படையில் அறிவை உருவாக்கும் உத்தி. புலிகள் போர்த்துறையில் அறிவைப் படைத்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்களை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றது.  அதுபோல நாம் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் புதிய  அறிவைப் படைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நாம் வெற்றி பெறுவது நாம் பெரும் அறிவினிலேயே உள்ளது. அறிவியல் பூர்வமாக சிந்த்தித்து எங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளன, அடுத்து எடுப்பதற்கு எது நல்ல அடி, எதுபோன்ற உத்திகள் சிறப்பானவை என்று மாறும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து  ஆராயப்பட வேண்டியது.  அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளைத் தோற்றுவித்து அவர்களுக்குள்ளும் போட்டியை உருவாக்கவேண்டும். மக்கள் அனைவருக்கும் இந்த பரிணாம உத்தி கற்பிக்கப் பட்டு, பரிணாமம் என்பது நமது பண்பாட்டு பழக்கவழக்கமாக மாற்றவேண்டும் [10]. அதற்கு நாம் ஓர் அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டியுள்ளது. அதற்கேற்ற கல்வி அமைப்புகளை உருவாக்குவது அவசியாயமானது. அவற்றையும் பரிணாம உத்தியின் மூலம் உருவாக்கலாம்.

இவ்வாறு போட்டியை உருவாக்குவது, ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு திசையில் இழுத்து முன்னேற்றத்தைத்  தடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கப் போவதில்லை. இதற்குக் காரணமாக நான் வைப்பது:

* இந்த பரிணாம உத்தியின் அடிப்படை என்பது போட்டி அல்ல, கற்றலே அடிப்படை. போட்டி என்பது கற்றலுக்குத் துணைபுரிகிறது.

* அமைப்புகள் அனைத்தும் குருட்டுத்தனத்தில் நாம் உருவாக்கப் போவதில்லை. நன்றாக கற்றறிந்து, பயனுள்ள உத்திகளை கண்டறிந்து, அவற்றில் எது உகந்ததோ அவைதான் இயக்கங்களாக உருவாகும். அவ்வாறு உருவாகும் இயக்கங்களுக்குள் போட்டி இருக்கும். எவ்வாறு அறிவியலாளர்களுக்குள் ஏற்படும் போட்டி அறிவியல் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதைப்போன்ற முன்னேற்றத்தை நோக்கி போட்டியை உருவாக்கவேண்டும்.

* பரிணாம உத்தியில் எந்த விதிகளின் அடிப்படையில் (விதி-1)  அமைப்புகள் போட்டி போடுகின்றன என்பதை சரியாக அமைப்பதின் மூலம், அமைப்புகளை  முன்னேற்றத்தை நோக்கி செலுத்தலாம்.

* பரிணாம உத்தியை ஓர் அமைப்பிற்குள்ளும் செயல்படுத்தலாம். உதாரணமாக கூகிள் (Google) நிறுவனம் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி வெவ்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்கிறது. அவற்றில் 80% கண்டுபிடிப்புகள் தோல்வி அடைகிறது [12], ஆனால் வெற்றி பெரும் கண்டுபிடிப்புகளினால் வரும் இலாபம் மிக அதிகமானது. இந்த பரிணாம உத்தியின் மூலமே கூகிள் கற்று முன்னேறுகிறது.

அதனால் போட்டி என்பது பின்னடைவைக் கொடுக்கும் என்று பயம் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு சில அமைப்புகள் தவறான பாதையில் செல்லும்பொழுது, மற்ற இயக்கங்கள் இந்த இழப்பை ஈடுகட்டும். அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே இயக்கம் மட்டுமே உருவாக்கினால், அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம்.

இக்கட்டுரையில் நான் விளக்கிய பரிணாம  உத்தி என்பது மேலோட்டமானது. இதைப்பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றைக் கற்று தெளிந்து செயல்படவேண்டும்.

 

இக்கட்டுரையை எப்படி முடிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது நண்பர்  பரணி கிருஷ்ணரஜனி  கீழ்வரும்  வாசகத்தைப் முகநூலில்  பதிவிட்டார்:

“பாதையைத் தேடாதே, உருவாக்கு”#தேசியத் தலைவர். #2019 விடுதலைக்கான ஆண்டு

இந்த வாசகத்தை பலமுறை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்பொழுதெல்லாம்  அதன் முழுப்பொருள் விளங்கவில்லை. இந்தக் கட்டுரையின் வழியாகப் பார்க்கும்பொழுதே என்னால் முழுதுமாகப் புரியமுடிகிறது.   ஈழத்தைப் பெறுவதற்கானப் பாதை என்று ஒன்று இல்லை. அதைத் திட்டமிட்டு முன்கூட்டியே அறிய முடியாது. அதை ஒவ்வொரு படியாக  பரிணமித்துதான் அடையமுடியும். இதுதான் அறிவியல் பூர்வமான வெற்றிக்கான உத்தி.