img/728x90.jpg
புலிகள் போர்க்குற்றவாளிகளாக

புலிகள் போர்க்குற்றவாளிகளாக "ஆக்கப்பட்ட" கதை..

புலிகள் போர்க்குற்றவாளிகளாக "ஆக்கப்பட்ட" கதை..

புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓஸ்லோவில் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகள் ஒன்றிணைந்து தமிழீழ நடைமுறை அரசையும் அதன் குடிமக்களையும் அழித்தொழிக்கும் புரொஜெக்ட் பெக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது.

புலத்தில் தமிழ்த்தேசிய/ தமிழீழ நடைமுறை அரசின் செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் 'புரொஜக்ட பெக்கன்’.

இந்த புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தின் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து பேர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தில் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா?

வெளியக அடிப்படையில் புலிகளை "பயங்கரவாதிகள்" முத்திரை குத்தி முடக்கிய பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது அப்படியே நடந்தும் முடிந்தன.

அப்போது மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’ என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.

புலிகள் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தவில்லை. ஆனால்

மேற்படி ஒரு படைத்துறை சிக்கல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இது குறித்த ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம்’ (human shield) என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த சதிக் கூட்டணிதான்.

இதை படைத்துறை ஆய்வாளர் சிவராம் அறிந்திருந்தார். புலிகளுக்கு உடனடியாக அதைத் தெரியப்படுத்தியும் இருந்தார்.

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? அந்த திட்டத்தின் பிரகாரமாகவே இன்று புலிகள் மனிதக் கேடய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள்.

எந்த அரசியல் – இராணுவ புரிதலுமின்றி குறிப்பாக நிலப்பரப்பு குறித்த புரிதலின்றி இதை வாந்தியாக எடுக்கும் நமது மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?

இதன் விளைவாக மாமனிதர் சிவராம் கொல்லப்பட்டது கூட இந்த பெக்கன் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை மிகத் தாமதமாகவே நாம் அறிந்து கொண்டோம். ஏனென்றால் அவர் இருந்திருந்தால் புலிகள் எதிர்கொள்ளும் இந்த மனிதக் கேடயக் குற்றச்சாட்டை இராணுவ விஞ்ஞான அடிப்படையில் மட்டுமல்ல அவரிடமிருந்த ஆவணங்களின் பிரகாரம் பெக்கான் திட்ட வரைபையும் முன்வைத்து அம்பலப்படுத்தியிருப்பார்.

எப்படியெல்லாம் நுட்பமாகப் பார்த்து புரொஜெக்ட் பெக்கன் திட்டம் வரையப்பட்டு, தமிழின அழிப்பு நடந்து முடிந்து, ‘தமிழீழ நடைமுறை அரசு’ அழிக்கப்பட்டது என்பதை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் கடைசிவரை ஏன் மண்டியிடாது தீரத்துடன் போராடினார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு காரணம்தான் - அது "இறைமை".

அதை அடகு வைத்து வரலாற்றில் ஒரு தவறான போராட்டப் பாரம்பரியத்தை விட்டுச் செல்ல அவர்கள் தயாராக இல்லை.

ஆனால் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் இணக்க/ ஒத்தோடி அரசியலின் வழி கொன்றவன்/ கொல்லச் சொன்னவன்/ கொலைக்கு உடந்தையாக இருந்த அனைத்து தரப்பிடமும் பங்கு பிரித்து தமிழ் இறமையை அடகு வைக்கப் படாத பாடு படுகிறார்கள்.

ஆனால் அது நடக்கப்போவதில்லை - நந்திக்கடல் உருவாக்கியிருக்கும் ஓர்மம் என்றும் அதற்கு இடமளிக்காது.

#TenYearsGenocide.

- பரணி கிருஷ்ணராஜானி -