img/728x90.jpg
மீண்டும் கால அவகாசம் தமிழருக்கான அநீதி

மீண்டும் கால அவகாசம் தமிழருக்கான அநீதி

மீண்டும் கால அவகாசம் தமிழருக்கான அநீதி

முள்ளிவாய்க்கால் இனஅழிவின் 10வது ஆண்டை எட்டிப்பிடிக்கும் நிலையில் தமிழருக்கான நீதி இன்னும் கண்களுக்கும் எட்டாத தொலை தூரத்திலேயே இருக்கின்றது என்பதை தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மெய்ப்பித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத் தொடர் கடந்த 25ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிகுரோ ஆகிய நாடுகள் இணைந்து, எதிர்வரும் 20ம் திகதியன்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

இதற்கான தீர்மான முன்வரைவு, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஜெனிவாவிலுள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில்,சுற்றோட்டத்துக்கு விடப்பட்டுள்ளது.  

இதற்கமைய, 2015ம் ஆண்டில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறீலங்கா அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றைச்  சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ள அந்த வரைவில், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறீலங்கா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மைத்திரிபால சிறீசேன சிறீலங்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது, புதிய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பாக நல்லிணக்க அரசு என்ற மகுடத்துடன் வழங்கப்பட்ட இரண்டுவருட கால அவகாசத்தில் மைத்திரிபால எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

புதிய ஆட்சியாளர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் போதாது என்று, 2017ம் ஆண்டில் மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தனது ஆட்சியின் இந்த நான்கு ஆண்டு கால அவகாசத்தில் மைத்திரிபால சிறீசேனாவால் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதை விடுங்கள், குறைந்த பட்சம் தங்கள் தடுப்புச் சிறையில் உள்ள ஓர் அரசியல் கைதியைக்கூட மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கூட இல்லை.

இப்போது மைத்திரிபாலவின் ஆட்சி முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் யார் வென்று, யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியாது.

ஆனாலும் சிறீலங்காவிற்கு மேலும் இரண்டு ஆண்டு காலஅவகாசம் வழங்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

தமிழ் பகுதியில் நடைபெற்று முடிந்த போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறீலங்கா அரசாங்கம் வேகமாகச் செயற்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் சிங்களத் தலைவர்கள் முன்பாக நேரடியாகவே கடந்த வாரம் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேவேளை, சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அண்மையில் கிளிநொச்சியில் வைத்துத் தெரிவிக்கப்பட்ட ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற கருத்தில், நீதி, பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்று இருக்கவில்லையன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கமானது, நீதி, பொறுப்புக் கூறல்களை உறுதிசெய்வதாக உறுதியளித்துள்ளபோதிலும், உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கு மாத்திரம், அமைச்சரவையின் அனுமதியைப் பெறமுயல்வதன் மூலம் பின்னோக்கிச் செல்ல முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், தென்னாபிரிக்காவின் மாதிரியைத் தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தென்னாபிரிக்காவானது, உண்மையைத் தெரிவிப்பது, விசாரணை, இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்ததாகவும், நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லையயனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு, அது உகந்ததாக இருந்ததால், அம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாதென்றும் இங்கு பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டூழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு சிறீலங்கா ஆட்சியாளர்கள் அனைவருமே தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர் என்பதை உலகின் பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்ற நிலையிலும், சிறீலங்காவிற்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

சிறீலங்காவிற்கு வழங்கும் கால அவகாசம் என்பது தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றது என்பதே உண்மை. இதனால்தான் தமிழ் மக்கள் சிறீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழர்களின் இந்தக் கோரிக்கையும் சர்வதேசத்தால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டே வருகின்றது.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்குமாறு இந்த நாடுகள் கோருகின்றன என்பது தெரியவில்லை.

காலம் கடந்த நீதி என்பது அநீதிக்கு சமமானது. சிறீலங்காவிற்கு மேலும் மேலும் கால அவகாசங்களை வழங்கி, வழங்கி தமிழ் மக்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அநீதியை இழைக்கப்போகின்றதா என்ற கேள்வியே தமிழ் மக்களிடம் எழுந்து நிற்கின்றது.

ஆசிரிய தலையங்கம்

நன்றி: ஈழமுரசு