இயக்குனர் மகேந்திரனும், ஈழமும், சினிமாவும்

இயக்குனர் மகேந்திரனும், ஈழமும், சினிமாவும்

இயக்குனர் மகேந்திரனும், ஈழமும், சினிமாவும்

தமிழ் சினிமாவின் யதார்த்த இயக்குனர்களில் முதன்மையானவராக, "முள்ளும் மலரும்", "உதிரிப்பூக்கள்" படங்களினூடாக, 1978 இல் இருந்து தமிழ் சினிமாவில் ஆழமாக கால் பதித்தவர் இயக்குனர் மகேந்திரன். எனினும், எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்டு, திரைத்துறைக்கு அழைத்துவரப்பட்டவர், 1966இல் ஜெயசங்கர், ரவிச்சந்திரன், நாகேஸ் நடித்த "நாம் மூவர்" திரைப்படம் மூலம் கதையாசிரியராக அறிமுகம் ஆனார். இவ்வாறு 26 படங்களிற்கு கதை எழுதியுள்ளார். 1974இல் சிவாஜியின் "தங்கப்பதக்கம்" படம் மூலம் கதையுடன், வசனகர்த்தாவாகவும் அறிமுகம் ஆனார். இவ்வாறு 27 படங்களிற்கு வசனகர்தாவாகவும் தொழிற்பட்டுள்ளார். 1976இல், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கமலகாசனின், "மோகம் முப்பது வருசம்" படத்தில் முதல் தடவையாக திரைக்கதையையும் எழுதினார். இவ்வாறு 14 படங்களிற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

ஈற்றில் 1978 இல் ரஜனியின் "முள்ளும் மலரும்" படம் மூலம் இயக்குனர் ஆனார். இவ்வாறு 12 படங்களை இயக்குனராகவும் இயக்கியுள்ளார். 2004இல் காமராஜரில் தொடங்கி விஜயின் "தெறி" ரஜனியின் "பேட்டா" உட்பட 8 படங்களில் நடிகராக நடித்தும் உள்ளார்.

முள்ளும் மலரும் படத்தில் அதன் படப்பிடிப்பாளராக ஈழத்தின் சாதனைக் கலைஞர் பாலு மகேந்திராவை கமல் தான் இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1972 முதல் 19 மலையாளப் படங்கள் மற்றும் 6 தெலுங்குப் படங்களில் படப்பிடிப்பாளராக செயற்ப்பட்ட பாலு மகேந்திரா முள்ளும் மலரும் படத்திற்கான படிப்பிடிப்பினூடாகவே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முள்ளும் மலரும் படத்தில் ஏற்ப்பட்ட பல சவால்களுக்கு மகேந்திரனுக்கு துணையாக நின்ற கமல், மகேந்திரனின் இயக்கத்தில்; நடிக்கவில்லை என்பதுவும் நடந்தேறியது.

முள்ளும் மலரையும் தொடர்ந்தே தேசிய விருதை பெற்றுக் கொடுத்த கன்னடப் படமான "கோகிலா"வைத் தொடர்ந்து, "அழியாக கோலங்கள்", "மூடுபனி", "மூன்றாம் பிறை" என பெரு வெற்றித் தமிழ் படங்களின் இயக்குனர் ஆனார் பாலு மகேந்திரா. ஆனால் முள்ளும் மலரும் படத்திற்கு பின்னர் பாலு மகேந்திராவும் மகேந்திரனும் சேர்ந்து இயங்கவில்லை. ஆனால் நெருக்கமாகவே இருந்தனர்.

இவ்வாறு தான் நான் முன்னர் விரிவாக எழுதியிருந்த, 1985இல், தமிழீழ மருத்துவ நிதிக்காக, சென்னையில் அன்றைய நிலையில் வரலாறாக 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்ட, இளையராஜா கங்கையமரன் இணைத்து நடாத்தித்தந்த, "திரையிசைத் திருவிழா" நிகழ்வில் பாலு மகேந்திராவின் அழைப்பில் கலந்து சிறப்பித்தார் இயக்குனர் மகேந்திரன். இது ஈழம் சார்ந்த விடயத்திலான அவரது முதல் பங்கேற்பு. சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003 மார்ச் மாத நடுப்பகுதியில், அரசியல் விவகாரக்குழு உறுப்பினராக ஜரோப்பிய நாடுகள் பலவற்றிற்கான பயணங்களுக்கு முன்னர், நான் தேசியத்தலைமையை தேசத்தின் குரல் பாலா அண்ணாவுடன் சந்தித்த பின்னர், அரசியல் நடுவப்பணியகத்தின் வெளியே பேசிக் கொண்டிருந்தபோது, அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் இணைந்து கொண்டார். அப்போது தலைமை, தமிழ்ச் செல்வனைப் பார்த்து சினிமாவிற்கான குழுவை தயார் செய்யச் சொன்னேன். ஆட்களைப் பிடித்துவிட்டாயா? என்று கேட்டார். அப்போது புரிந்தது. ஈழத்திரைத்துறைக்கு முறையான கட்டமைப்பாக முழு அளவிலான வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் தலைவர் உள்ளார் என்பது. நான் கேட்டேன் பாலு மகேந்திராவிடம் இந்தியாவில் பேசவா அண்ணா என்று. அப்போது அவர் சிரித்துக் கொண்டு சொன்னார். எங்களிடம் உண்மையான கதைகள் நிறைய இருக்கு. அதை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக அவ்வாறே எம்மவர்களால் எடுக்கவும் முடியும். ஆனால் அதற்கு எவ்வாறு கமரா வைப்பது. வெளிச்சம் போடுவது. அதை எவ்வாறு கோற்பது (கமரா லைட்டிங் எடிட்டிங்) இது தான் தெரியாது. இந்த தொழில்நுட்பங்களைத் தெரிந்தாலே, நம்மவர்கள் சிறந்த உண்மைப்படங்களை, எமது வரலாற்றை எடுப்பார்கள் என்றார்.

தலைவர் அனைத்து சினிமாக்களையும் பார்ப்பவர், அவற்றை அனைத்துக் கோணங்களிலும், அனைத்துத் துறை சார்ந்தும், சிறப்பாக ஆய்விற்குட்படுத்துபவர், என்பதுவும் எனக்கு நன்கு தெரியும். விடுதலை வரலாறுகளுக்கு முன்னுதாரணமாக, அமைந்த களப் படிப்பிடிப்புக் குறித்தும், ஈழ விடுதலை வரலாற்றின் அந்தப்பக்கம் குறித்தும், அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம். அக்காலப்பகுதியில், ஈழத்தின் சினிமாவாக வெளிவந்த ஒரு சிறந்த முழுநீளத்திரைப்படம், கரும்புலிகளை மையமாகக் கொண்ட, "கடலோரக் காற்று". அப்படம் ஈழத்திரைப்பட வரலாற்றில் பெரும் வளர்ச்சியை சுட்டி நின்றது. இது குறித்து நான் நிதர்சனத்தின் சேரலாதனை சந்தித்து பேசினேன். அப்போது அதன் எடிட்டிங்கிற்காக பாராட்டுத் தெரிவித்தேன். சேரா சிரித்தார். ஏன் என்றேன். அப்போது தான் சொன்னார். இரண்டு டெக்குகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து அந்த எடிட்டிங்கை செய்த புதுமையை. அப்போது தலைவர் சொன்ன தொழில்நுட்பத்தின் குறைபாடு என்பதின் முழுமையான அர்த்தம் புரிந்தது. இதன் தொடர்ச்சியாகவே இவ்வாறான அணிசேர்பின் ஓர் அங்கமாக, உறவுகளின் முயற்சியில் இயக்குனர் மகேந்திரனின் மைந்தர், விஜயின் சச்சின் படத்தை இயக்கி 2005 ஏப்பிரல் வெளியிட்ட, ஜோன் தாயகம் சென்றார்.

அவர் பின்னர் தாயக உறவுகளுக்கு, கற்கை நெறியாகவும், அதேவேளை நேரடிப்பயிற்சியாகவும் அமையும் வகையில், அதற்கான உபகரணங்களையும் கொண்டு சென்று, 95 யாழ் வரலாற்று இடப்பபெயர்வை மையமாகக் கொண்ட, "ஆணிவேர்" ஈழத்திரைப்படத்தை இயக்கினார். இக்காலப்பகுதியில், தனது இறுதிப் படமான சாசனத்தின் இயக்கத்தில் மகேந்திரன் முனைப்பாக இருந்தார். பின்னர் 2006இன் முற்பகுதியில், தாயகம் சென்று அப்பணியில் மைந்தன் ஜோனுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு மூன்று மாதங்கள் தங்கியும் இருந்து, தாயக உறவுகளின் திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல வேலைத்திட்டங்களிலும் பணியாற்றினாhர். இக்காலப்பகுதியிலேயே, தேசியத் தலைமையும் மகேந்திரனை நேரில் சந்தித்தார். இவ்வாறான முயற்சிகளின் அங்கமாகவே இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான் என தமிழக சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் தாயகம் சென்றனர். இவ்வாறான முயற்சிகளின் பின்னர், பாலு மகேந்திராவின் பங்கு நேரடியாக இருந்தாலும், அவரால் இந்தியாவை விட்டு வெளியேற முடியவில்லை. அவர் இந்தியாவில் வாழ்ந்தாலும், அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடையாது. அதனால் கடவைச் சீட்டும் கிடையாது. வெளியேறினால் திரும்பக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகலாம். எம்மவர்களுக்கு மேலும் திரைத்துறை சார்ந்த தொழில் நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அமையக்கூடியதாக, பாலு மகேந்திரா 2007இல் சினிமா பட்டறை என்ற ஒரு சினிமா கல்விக் கூடத்தை சென்னையில் நிறுவினார்.

இவ்வாறு தொடர்ந்த ஈழ சினிமாத் துறை வளர்ச்சியின், பெரு அறுவடையாக எடுக்கப்பட்டதே இறுதிப் போர்க்காலத்தில் படப்பிடிபிற்கு உள்ளாகி, முள்ளிவாய்காலின் பின்னர் வெளிவந்த, அநுராதபுரம் வான்படைத் தளம் மீதான கரும்புலிகள் தாக்குதலை மையமாகக் கொண்ட, "எல்லாளன்" திரைப்படம். ஈழத் திரைத்துறைக்கு என்றும் மகுடம் சூட்டி நிற்கும் படம் அது. ஒரு விடுதலை வரலாற்றின் அடிநாதம், அதனை ஆவணமயப்படுத்தலும், அது குறித்த படப்படிப்பும், அதனூடாப் பெறப்பட்ட ஒளியிழைகளுமே. இவ்வாறு ஒரு வரலாற்றியக்கத்தை பாடமாக கைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை, முன்னகர்த்த வேண்டியதன் அத்தியாவசியத்தை, ஒரு முதன்மை விடயமாக தலைமை எங்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறார். ஈழத்தமிழர்களின் துறைசார் வளர்ச்சியொன்றில் அங்கமாக இருந்து, சமீபத்தில் இயற்கையெய்திவிட்ட, இயக்குனர் மகேந்திரனை நினைவில் கொள்ளும் இதேவேளை, எம்பணியில் 10 ஆண்டுகளின் பின் எங்கிருக்கின்றோம்? என்பதே நெஞ்சை நெருடும் பெரும் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

- நேரு குணரட்ணம் -