img/728x90.jpg
முள்ளிவாய்க்காலும் - தமிழர் ஆவணப்படுத்தலும்...!

முள்ளிவாய்க்காலும் - தமிழர் ஆவணப்படுத்தலும்...!

முள்ளிவாய்க்காலும், தமிழர் ஆவணப்படுத்தலும்

இன்று தமிழர் வாழ்வியலில், அரசியலில் அனைத்துமே முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்றே ஆகிவிட்டது. இவ்விடயப்பரப்பில் ஆய்விற்கு உள்ளாக வேண்டிய, பல விடயதானங்கள் தமிழர் வாழ்வியலிலும், தமிழர் அரசியலிலும், தாயகத்திலும், புலம்பெயர் வாழ்விலும் தமிழரிடையே நிறைந்து பரவிக் கிடக்கின்றன. இது குறித்த ஆய்வும் அதனூடான தீர்வுகளுமே அப்பரப்புகளை தொடர்ந்தும் ஆக்கபூர்வமான திசையில் இயக்கவல்ல இயங்கு சக்தியாகினும், இன்றைய நிலையில் அது குறித்த முனைப்புகள் அருகியேயுள்ளன. இந்நிலையில் அதில் ஒரு முக்கிய அங்கமான தரவுகளும், ஆவணப்படுத்தலும் குறித்து இங்கு பார்ப்போம்.

தமிழர் வாழ்வியல் உரிமைப் போராட்டத்தின் பலமான இயங்குநிலைகளில், லிடுதலை இயக்கத்தால் ஆரம்பத்தில் இருந்தே வலுப்பெற்று வந்த ஒரு முக்கிய பரப்புத் தான் ஆவண சேகரிப்பும், அவணப்படுத்தலும். அதில் காணொளி, ஒலிவடிவம், பதிப்பு, சர்வதேச ஒழுங்குமுறையிலான ஆவணம் என பல வடிவங்களில் அவற்றின் வீச்சு தொடர்ந்தும் வலுப்பெற்று முன்நகர்த்தப்பட்டது. தமிழர் அவலங்களையும், உரிமை மறுப்புகளையும், இனவழிப்பையும், அதற்கான பரிகாரங்களை நோக்கிய சர்வதேச நகர்வுகளிலும் இவற்றின் முக்கியத்துவம் சொல்லி மாளாது. தமிழருக்கு எதிரான தரப்புகளும் இவ்வாறான ஆவண முறைமை கொண்டே நீதியான தமிழர் வாழ்வியல் போராட்டத்தை மலினப்படுத்தும், பயங்கரவாதம் எனச் சித்தரிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்தன, வருகின்றன.

இங்கு தாயகத்தில் முள்ளிவாய்காலுக்கு முன் வடிவமைக்கப்பட்டு, வலுப்பெற்ற பல வடிவங்களை இங்கு ஒருமுறை கவனத்தில் கொண்டோம் என்றால், இன்றைய எம் நிலை துல்லியமாக புலப்படும். ஆவணப்படுத்தல், பதிப்பித்தல், வெளியீட்டுப்பிரிவு. அரசறிவியற் கல்லூரி, அனைத்துலகச் செயலகம், நந்தவனம் - வெளிநாட்டு தமிழருக்கான தாயக தொடர்பாடல் சேவை மையம், தொடர்பகம். ஒளிப்படப்பதிவுப்பிரிவு - திரைப்படவெளியீட்டுப்பிரிவு, நிதர்சனம் - திரைப்படத் தயாரிப்பு, தர்மேந்திரா கலையகம் - திரைப்பட கலைகள் சம்பந்தமானது. விடுதலைப்புலிகள் மாதாந்த செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் - பெண்கள் செய்தி இதழ், ஈழநாதம் - நாட்செய்தியிதழ், பத்திரிகை. வெளிச்சம் - மாத சஞ்சிகை, நாற்று மாத சஞ்சிகை. பொற்காலம் வண்ணக்கலையகம், அருச்சுனா - புகைப்பட கலையகம், புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, சமூக செய்தி இணையத்தளங்கள், தமிழ்மொழி காப்பகம் என தரவுகளின சேர்க்கைக்கும், ஆவணப்படுத்தலுக்கும் கருவிகளாக பல வடிவங்கள் உருவகம் கண்டு பெரு வளர்ச்சி கண்டு நின்றன.

இந்நிலையில் தொடர்ந்தும் வியாபித்து வலுப்பெறவேண்டிய ஆவணப்படுத்தில் நடைமுறை, முள்ளிவாய்காலுக்குப் பின்னரான காலத்தில், அதற்கு முன் கொண்டிருந்த ஆவணங்களை கூட இழந்து வருவது மட்டுமின்றி, புதிய ஆவணப்படுத்தலுக்கான எத்ததைய முன்னெடுப்பும் அதற்கான பார்வையும் அற்று வேறு இருக்கிறது. எந்தச் சக்திகள் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் நின்றனவோ, அதே சக்திகள் தான் ஏற்கனவே இருக்கக்கூடிய ஆவணங்களை கூட இல்லாதொழிப்பதில், கடந்த 10 ஆண்டுகளாக அதேமுனைப்புடன் உள்ளன என்பது தான் யதார்த்தமான உண்மையாகும். இதற்கு நம்மவர்களும் துணைபோகின்றனர் என்பது தான் பெருவலி தரக்கூடிய விடயமாகும்.

நிசோர் என அமைந்த வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஈழத்தமிழர் மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச நியமத்தில் பதிவிற்குள்ளாக்கியது. அத்தகைய முயற்சி முள்ளிவாய்க்காலின் பின் எவ்வித வடிவத்தையும் பெறவில்லை. அதனால் தமிழர் மீதான தொடரும் மனித உரிமைகள் மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படாத விடயமாகிறது. இவ்வகையில் 2012 மார்ச் மாதம் கனடிய அரசினால் அனுப்பப்பட்ட மூவர் அடங்கிய குழு சிறீலங்காவிலான நிலைமைகளை நேரடியாக கண்டறியச் சென்று திரும்பியது. அது பலதரப்பட்ட தமிழர்களையும் சந்தித்தது. அவர்கள் முதன்மைப்படுத்திய விடயங்களை குறிப்பெடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் அனைத்தையும் சேர்த்து எவை முக்கிய விடயங்கள் என பார்க்க முற்ப்பட்டபோது, ஒரே விடயத்தை பலரும் சொல்லாதது அவதானிப்பப்பட்டது. இது ஒருங்கிணைப்பு, தரவு சேகரிப்பு, அது குறித்த ஆய்வின் அடிப்படையிலான முடிவுகள் என பல விடயங்களில் இருந்த மோசமான சறுக்கல் நிலையை வெளிப்படுத்தியது. அதுமட்டுமன்றி தம்மிடம் விடயங்களை பகிர்ந்து கொண்ட தமிழர் தரப்புகளிடம் அதற்கு ஆதாரமான ஆவணங்களையும் அவர்கள் வினாவியுள்ளனர். மன்னார் ஆயர், இராயப்பு ஜோசப் ஆண்டகையைத் தவிர எவரும் ஆதாரமாக எத்தகைய ஆவணத்தையும் வழங்கும் நிலையில் இருக்கவில்லை. அதாவது வாயால் வடை சுடுவதிலேயே இன்றைய வல்லமை இருக்கிறது.

இது இன்றைய தமிழர் தரப்புகளின் ஆவணப்படுத்தலில் உள்ள மோசமான பின்தங்கல் நிலையைப் புடம் போட்டுக்காட்டுகிறது. இதன் பாதகத்தன்மையை நாம் ஏனோ இன்றுவரை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. பொக்கிசமாக முள்ளிவாய்ககாலுக்கு முன்னரான காலம் ஏற்படுத்தித் தந்துவிட்ட ஆவணங்களைக் கூட குறிவைத்து அழித்துவிடுவதிலும், அதற்கான சமூக ஊடகப்பரப்பை முடக்கிவிடுவதிலும் பல சக்திகள் முனைப்புடனும் ஆள், அணி வலுகொண்டும் நாளும் இயங்கிவரும் நிலையில், அவற்றை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்ளும் எவ்வித முனைப்பும் இன்றி ஈழத்தமிழினம் இன்று அநாதரவாக நிற்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெனீவா கூட்டத்தொடரில் கூட, 88 சதவீதத்திற்கு அதிகமான அரச காணிகளையும், 92 சதவீதத்திற்கு அதிகமாக தனியார் காணிகளையும் தாம் இராணுவத்திடம் இருந்து விடுவித்துவிட்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மாரப்பன கூசாது பொய் சொன்னார். ஆனால் அவர் சொல்வது பொய் என அங்கேயே போட்டுடைக்க எம்மிடம் அவ்வித தரவும் ஆவணமும் இல்லை. பின்னர் மைத்திரி கூட்டிய ஒரு கூட்டத்திலும் தாம் பல்லாயிரம் ஏக்கரில் விடுவித்த காணிகள் என இராணுவத் தளபதி முரசறைந்த போது, இல்லை அது பொய் என ஆவணத்தை தூக்கிப் போடமுடியாமல், இது குறித்து ஒரு வருடமான விபரம் கேற்கின்றோம் தாருங்கள் என இரந்து கேட்டோமே அன்றி, தரவுகளும் ஆவணங்களும் இன்றி இன்றும் நடுவீதியில் தானே உள்ளோம்.

ஆவணங்களைக் கொண்டிருந்த பல தாயக இணையத்தளங்களை நிர்வகித்த புலத்தில் உள்ளவர்கள், முள்ளிவாய்க்காலுக்குப் பின் அவ்விணையத் தளங்களின் பதிவை புதுப்பிக்க தவறியபோது, அதற்காகக் காத்திருந்த சக்திகள் அதன் முகவரிகளை கையகப்படுத்தி அவற்றை அழித்துவிட்டனர். இவ்வாறு தான் சமாதான செயலகத்தின் இணையத்தளம் இழக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் இழக்கப்பட்டது மட்டுமன்றி, அதைக் கையகப்படுத்தியவர்கள் அதை ஒரு ஆபாச தளத்தை நோக்கி திருப்பிவிட்டனர். இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற பெரும்பகுதியினர் முன் தமிழர் சமூகம் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை இதனால் எழுந்தது. இவ்வாறு தான் வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் உயரிய இணையத்தளமும் இழக்கப்பட்டுள்ளது. புலத்தில் ஈழத்தமிழர் குறித்த ஆய்வுத் தளமான அமைந்த ஆங்கில தமிழ்நேசன் இணையத்தளமும் இவ்வாறே குறிவைக்கப்பட்டது.

எம்மிடம் உள்ள கல்வியளாலர்கள் கூட இவ்விடயத்தில் பெரிதாக எதனையும் செய்வதாக தெரியவில்லை. பேராசிரியர் மணிவண்ணன் என்ற தமிழக சகோதர உறவு, ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முயன்று அதற்கான ஆதாரங்களை சேகரித்து, 1000 பக்கங்களில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை தான் என ஆங்கிலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தினூடாக வெளியிட்டு கல்வியல், ஆராய்ச்சி சார்ந்த அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தார்;. இவ்வாறான காலத்தின் தேவை கருதிய முயற்சிகள் எம் கல்வியளாலர்களிடம் ஏன் இன்றும் எழவில்லை? எமது தேசமும் மக்களும் சிந்திய குருதிகள், எய்திய அர்ப்பணிப்புகள் இந்நாட்களில் எம் கண்முன் விரிந்து எம்மைக் கேள்வி கேட்டால், அதற்கு எம் மனச்சாட்சி எம்மையே துன்புறுத்தினால், ஆவணப்படுத்தலின் அத்தியாவதியத்தையும், அதற்கான முனைப்புகளிலும் நாம் இந்த 10 ஆண்டுகளைக் கடந்தாவது இறங்கியாக வேண்டும். இல்லையேல் நீதி வேண்டிய எம் பயணங்கள் மேலும் சவால் நிலையையே எதிர்காலத்தில் எட்டும் என்பதே கசப்பான உண்மையாகும்.

- நேரு குணரட்னம் -