img/728x90.jpg
அடுத்த தீபாவளிக்கும் தீர்வு இல்லையா?

அடுத்த தீபாவளிக்கும் தீர்வு இல்லையா?

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப் பினர்களில் சிவசக்திஆனந்தன் தவிர்ந்த ஏனையவர்களுக்குமிடையிலான ஒற்றுமை யைப் பார்க்கும்போது,  இலங்கையின் வரலாற்றில் இப்படியானதொரு ஒற்றுமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்பதைக் கூறித்தானாக வேண்டும்.

எப்படித்தான் இப்படி ஒரு ஒற்றுமை ஏற்பட்ட தென்பது வியப்புக்குரியது.
இதை நாம் கூறுவதற்குக் காரணம்,

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலை யிலும் அரச - கூட்டமைப்பு ஒற்றுமை வலுவடைந்திருப்பதாகும்.

காணாமல்போனவர்களின் விடயம், நில ஆக்கிரமிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலையின்மை போன்ற விவகாரங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

தவிர, புதிது புதிதாக ஏற்படுகின்ற வில்லங்கங்களை அரசு இம்மியும் கண்டு கொள்ள வில்லை.

குறிப்பாக முல்லைத்தீவு நீராவியடியில் புத்த விகாரையை அமைக்கின்ற விடயம், திருகோணமலை கன்னியாவில் பெளத்த ஆக்கிரமிப்பு, சிங்கள இளைஞர்களுக்கு வடக்கு கிழக்கில் அரச நியமனம் வழங்குகின்ற திட்டங்கள் எனப் பல விடயங்கள் இருக்கும் போதிலும்,

அதுபற்றி எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்தைப் பாதுகாப்பதையே தனது தலையாய கடமையாகக் கூட்டமைப்புச் செய்து வருகிறது.

சரி, பரவாயில்லை. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குகின்ற இலக்கை மையமாக வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறது என் றால், அதுவும் இல்லை என்றாயிற்று.

அதாவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் சரிவராது என்று கூறுமளவுக்கு அதன் நிலைமை வந்துவிட்டது??.

இனப்பிரச்சினையைத் தீர்க்கின்ற துணிவு ஜனாதிபதி மைத்திரிக்கோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ இல்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

ஆக, புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் சரிவராது என்பதுடன் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காவிட்டால், என்னால் எது வும் செய்ய முடியாதென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைவிரித்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

நிலைமை இதுவாக இருக்கின்றபோது, தீபாவளிப் பண்டிகையைத் தேர்ந்தெடுத்து அடுத்த தீபாவளிக்கு இடையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமென்று கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறியிருந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்று தெரிவித்துள்ளார்.

இங்குதான் அடுத்த தீபாவளி, அடுத்த மூன்று ஆண்டுகள் என்ற செப்படி வித்தைகள் காட்டப்படுகின்றன.

என்ன செய்வது கிடைக்காத தீர்வுக்கு திகதி யிட்டுச் சொல்கின்ற போக்கிரித்தனங்கள் இலங்கையை விட வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.