img/728x90.jpg
பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை

பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை

ஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை கணக்கிட்டு  பார்க்கும் போது அது  ஒரு நூற்றாண்டுக்கு  முன் தொடங்கிய இடத்திலிருந்து  மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம்.

பெருந்தலைவர்கள்  ஆனால் பெரும் தோல்விகள். இத்தனைக்குப் பின்பும் தோல்விகளுக்கும், வீழ்ச்சிகளுக்கும், அழிவுகளுக்குமான  காரணங்களையும், அவற்றிற்கான பொறுப்பாளர்களையும் கண்டுகொள்ள  நாம்  இன்னும் தயாரில்லை  என்பது மேற்படி அடைந்த அனைத்து  தோல்விகளையும்விட  பெரும் தோல்வியாகும்.

இன அழிப்பு நடவடிக்கைகளை சிங்களத் தலைவர்கள் திட்டமிட்ட வகையில் காலத்துக்கு காலம் பொருத்தமாக முன்னெடுத்து வருகிறார்கள் என்பது உண்மை. அதேவேளை சிங்களத் தலைவர்களின்  இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் அல்லது அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமிழ் தலைவர்களின்  அரசியல் வழிநடத்தல்கள் அமைந்துள்ளன.   இந்த வகையில் தமிழ் மக்களை அரசியல் படுகுழியில்  வீழ்த்தியதற்கான  பெரும் பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச்  சார்ந்தது என்கின்ற இன்னொரு பக்கத்தையும் கருத்திலெடுக்க தவறக் கூடாது.

வரலாற்றில் பல வேளைகளில் தோல்வியின் வடிவில் வெற்றியையும்  வெற்றியின் வடிவில் தோல்வியையும் நண்பனின் வடிவில் எதிரியையும் எதிரியின்  வடிவில் நண்பனையும் காணமுடியும்

என்னவன்  – உன்னவன்,  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள்  மற்றும்  முற்கற்பிதங்கள்  என்பனவற்றை எல்லாம் தாண்டி தமிழ் மக்களின் அரசியலை  சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பாங்கு வேண்டும்.  வெற்றி தோல்விகளை புரிந்தேற்று  மக்களின் நன்மை கருதி   தலைமைத்துவ தவறுகளை   சரி செய்து முன்னேற தயாராக வேண்டும்.

தேசிய தலைமைத்துவம், தேசிய இனப்பிரச்சினைக்கு தலைமை தாங்குதல் போன்ற  விடயங்கள்  வரலாற்றில் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்புடன் நோக்கப்படும்   அம்சங்களாகும்.  புரட்சி என்பது   குறித்த வர்க்க அடிப்படையிலான தலைமைத்துவமாகும். ஆனால் தேசிய விடுதலை என்பது சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும், பல்வகைப்பட்ட வர்க்கத்தினரையும்   ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் ஒரு பரந்துபட்ட மக்கள் அமைப்பாகும்.

இதனால் ஒரு தேசிய தலைவன் என்பான் பல்வேறு பிரிவினரையும் பல்வேறு தரப்பினரையும்  பல்வேறு வர்க்கத்தினரையும்  அரவணைக்க கூடிய சிறப்பியல்புகள் உள்ளவராக இருக்க வேண்டும்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இனக் குழுக்களையும், இனப் பிரிவினர்களையும் மற்றும் மக்கள் பிரிவினர்களையும்  ஒரு கோட்டில் இணைத்து வெள்ளையின  ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா  வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றார்.

ஒரு தேசியத் தலைவன் என்பவன் பல்வேறு பிரிவினரையும் , பல்வேறு தரப்பினரையும் அரவணைக்க வல்லவனாய் , இதயசுத்தி உள்ளவனாய், பரந்த மனப்பாங்கு உடையவனாய் காணப்பட வேண்டும்.  ஈழத் தமிழர்கள்  அளவால்  ஒரு சிறிய  தேசிய இனம்.   எதிரியோ   மிகவும் பலம் வாய்ந்த  அரச அமைப்புடன் கூடிய  அளவால் பெரிய இனம். இந்நிலையில் ஈழத்தமிழர்  தமக்கிடையே கூறுபட்டுக்  கிடக்காமல், தமக்குள் பிளவுண்டு, சிறுத்து , அழிந்து போகாமல் பெரிதும் ஐக்கியப்பட்டு   பரந்த அடிப்படையிலான  ஒரு பலமான கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டும். பலமான ஒரு பரந்த கூட்டு முன்னணி இல்லையேல் ஈழத் தமிழ் மக்களுக்கு என்று ஒன்றுமில்லை.

ஈழத் தமிழரின் வரலாற்றை ஒரு கணம் கண்கொண்டு திரும்பிப் பார்த்தால் தொடங்கிய இடத்தைவிடவும் அதிகம் பின்னோக்கி   சென்றுவிட்டதை காணலாம்.  இலங்கை  சுந்திரம் அடையும் போது தமிழ் மக்களின் தாயகமான வடக்கு- கிழக்குப் பகுதி சிங்களக் குடியேற்றங்கள் இன்றி முற்றிலும்  தமிழ் பேசும் மக்களால் நிறைந்திருந்தது.

தமிழரை சனத்தொகை ரீதியாகவும்,  இனப்பரம்பல்  ரீதியாகவும், குறைப்பதையும்   , சிதைப்பதையும் அதன்வழி   தமிழினத்தை அழிப்பதையும் எதிரி தனது  முதல்  இலக்காக கொண்டான். சுதந்திரம் அடைந்தை உடனடுத்து  டி. எஸ். செனநாயக அரசாங்கம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை என்பனவற்றை  பறித்து அவர்களை அரசியல் அநாதைகளாகவும் நாடற்றவர்களாகவும் ஆக்கியதன் மூலம்  தமிழினத்தின் சனத்தொகை பலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஒரு முனையில் உடைத் தெறிந்தார்.

கிழக்கே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி கல்லோயா, அல்லை – கந்தளாய் குடியேற்றத் திட்டங்களின் வாயிலாக சிங்கள சனத் தொகையை கிழக்கு மண்ணில் அதிகரித்தார். தமிழர் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள்    ஒரு நாள் இந்தியாவின் மாநிலமாக மாறிவிடக்கூடிய  ஆபத்து உண்டு என்ற  தனது கவலையை   செனநாயக்க   ஓர் ஆங்கில கனவானிடம் தெரிவித்த  போது அதனை   தடுப்பதற்கான வழியாக  சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறு அந்த ஆங்கில கனவான்  ஆலோசனை  கூறியதன்  பெயரில் டி. எஸ். செனநாயக்க சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தார்  என்று  ஒரு செவிவழி தகவல் உண்டு.

எப்படியோ அத்தகைய சிங்களக் குடியேற்றங்களால் முதலில் கிழக்கு மாகாணம் பறிக்கப்பட்டு தமிழ் மக்கள் அங்கு  சிறுபான்மையினர் ஆக்கப்பட்டு விட்டனர்.  அதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்திலும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள்  மேற்கொள்ளப்பட்டு  வடக்கும் கிழக்கும் புவியல் தொடரப்பற்ற  பகுதியாக ஆக்கப்படும்  நிலை தற்போது பெரிதும் வளர்ந்துள்ளது.

உடும்புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால்  கட்டுவதற்கே என்பது   வேட்டை காரனின் பார்வையாகும்.  அப்படி தமிழரைத்  தமிழ்த் தலைவர்களால் கட்டிப்போடும் வித்தையை செனநாயக்க  ஆரம்பித்து வைத்தார்.

தனிச்  சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை  ,  போலீஸ்   மற்றும் நிர்வாக வகைகளிலான ஒடுக்குமுறை   1983 கறுப்பு ஜூலை உட்பட 1958 ஆம் ஆண்டு போன்ற  இனக்கலவர  வடிவிலான   பல்வேறு காலகட்ட  இனப்படுகொலைகள் , “”பயங்கரவாத தடுப்புச் சட்டம் “” மற்றும் இராணுவ  ஒடுக்குமுறைகள், படுகொலைகள் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  என சிங்கள மேலாதிக்கம் தமிழ் மண்ணை  பெரிதும் ஆக்கிரமித்து கபளீகரம்  செய்து கொண்டுள்ளது.

1979ஆம் ஆண்டு “”பயங்கரவாதத் தடைச் சட்டம்””    நிறைவேற்றப்பட்டு வடக்குக்கு இராணுவம் அனுப்பப்பட்ட போது  இலங்கையின் மொத்த இராணுவம்  8500   வரையான சிப்பாய்களை கொண்டிருந்தது.  தற்போது இலங்கையின் மொத்த படையினர் தொகை 3,46,000.  இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ் மண்ணில் நிலை  கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் குறிப்பாக சுதந்திரத்தின் பின் சிங்கள பௌத்த மேலாதிக்கமானது அனைத்து வகையிலும்  தமிழர் மீதான தமது ஆக்கிரமிப்புகளை பெரிதும் முன்னெடுத்து தமிழரை மேலும் மேலும் கொடுமைப் படுத்துவதிலும்  சிறுக்கப் பண்ணுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசார ரீதியில் மிகப் பெரிய   அளவில்  வீழ்ச்சியடைந்து செல்கிறது. ஒரு தமிழ் மகனின் , ஒரு தமிழ் மகளின் ,ஒரு தமிழ் தந்தையின் ,  ஒரு தமிழ் தாயின் இலட்சியம் என்ன என்று அவர்களிடம் கேட்டால்   வெளிநாடு செல்வதுதான் தமது இலட்சியம் என்று சொல்லும் அளவுக்கு  நிலைமை  அதிகம் அதிகம் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில்  தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் அதிகம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . அது உள்நாட்டிலும்  கூடவே புலம்பெயர் நாடுகளிலும்  அவசியமானதாகும். ஒரு மாகாண அமைச்சர் குற்றவாளி என குற்றம் காணப்பட்டாலும் அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கையின் நீதித்துறை தீர்ப்பளித்துள்ளது.  மாகாண  சபைகள் அதிகாரம்    அற்றவை என்ற உண்மையை தெளிவாக பறைசாற்றும் வகையில்  இது அமைந்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் ,  மாகாண சபை தேர்தல்கள் சனாதிபதித் தேர்தல்  என்பவற்றின் வாயிலாக தமிழ் இனம்  பலவீனமானது என்பதையும் அது  தேசிய முக்கியத்துவம் குறைந்த  ஓரினம்  என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் சிங்கள பேரினவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

மேற்படி தேர்தல்களில் எல்லாம் சிங்களத் தேசியக் கட்சிகள் , தேசிய கட்சிகளுடன்  கைகோர்க்கும்  சார்புக்  கட்சிகள்,   மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்போர் எல்லாம்  கைகோர்த்து செயல்படும் நிலையில்  தமிழ் தேசியத்திற்கான பிரதிநிதித்துவம் தொகை  அளவில்  குறைவானதாக காட்சியளிக்க கூடிய ஆபத்துண்டு.

இந்நிலையில்  தமிழ் தேசியம் பற்றி பேசும்  மாற்று தலைமைத்துவத்தை கையில் எடுத்துள்ள  தமிழ் தலைவர்கள் அதற்கான ஒரு பலம் பொருந்திய பரந்த கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர். சனநாயக அடிப்படையில் இலங்கையிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஒரு முதலமைச்சர். ஆதலால்  மக்கள் தீர்ப்புக்குப் பணிந்து அவரை அடிப்படையாகக் கொண்டு ஒரு  பலம் வாய்ந்த பரந்த  கூட்டு முன்னணியை பல்வேறு அமைப்பினரும் , பொது அமைப்புகளும் , கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.

ஒரு தெளிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரைந்து  அதன் அடிப்படையில்   ஒரு  கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.

1. சிங்களத் தேசிய கட்சிகளுக்கும் அவற்றுக்கு சார்பான கட்சிகளுக்கும் எதிரான கூட்டு முன்னணி. இதுவே இதன் முதலாவது அடிப்படையாக அமைய வேண்டும்.

2. சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்காககளத்தில் இறங்கிநேரடியாக போராட சம்மதிப்பது.

3. போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பவற்றுக்கான சர்வதேச விசாரணையைகோரி அதன் பொருட்டு நேரடிப் போராட்டத்தில் ஈடுபடுவது.

4. யுத்த விதவைகள் மற்றும் அங்கங்களை இழந்தவர்களுக்கானமறு வாய்ப்வை ஏற்படுத்தவல்ல வகையில்  உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும்  நிதிகளை திரட்டி அவர்களின் மறுவாழ்வுக்காக  இதய சுத்தியுடன் செயற்படுவது.

5. வடக்கும் கிழக்கும்பிரிக்கப்பட முடியாத தமிழரின் தாயகம். அதன் அடிப்படையில் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது.

அதிக பிரகடனங்களை முன்வைப்பதில் பயனில்லை. உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் செய்ய வேண்டியதென்றவாறான  மேற்கண்ட குறைந்தபட்ச அடிப்படைகளின் கீழ் ஒரு தமிழ் தேசிய கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும் . இதில் இணைபவர்கள்  மேற்படி கொள்கையில் இருந்து அல்லது வேலைத்திட்டத்தில் இருந்து விலகும் போது அவர்களின் பதவி இயல்பாகவே விலக்கப்பட்டதாக அல்லது பறிக்கப்படுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்.

மேற்படி கூட்டு முன்னணியில்  இணையும் கட்சிகளோ அல்லது பொது அமைப்புக்களோ தேர்தலில் பெறும் வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப அவர்களின்  மத்திய குழு உறுப்பினர் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மத்திய குழுவில் ஒரு மனதாக தீர்மானம் எடுக்கப்பட தவறும் வேளைகளிலெல்லாம் கண்டிப்பாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம்  அதற்குரிய பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். எத்தகைய பிரச்சனைகள் ஏற்படும்  போதிலும்  இறுதியிலும் இறுதியாக மேற்படி மத்திய குழுவின் இரகசிய வாக்கெடுப்பில் எடுக்கப்படும் தீர்ப்பே இறுதியானது.

இதுவே குறைந்தபட்ச உடனடி சனநாயக ஏற்பாடாகும். எனவே சனநாயகத்தை நம்பி, அதன் அடிப்படையிலான ஒரு தேர்தல் கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தக் கூட்டு முன்னணி ஒரு தனிப்பட்ட நபருக்கு  அல்லது ஒரு கட்சிக்கு என்று வீட்டோ அதிகாரங்களை வழங்குவதாக அல்லாமல்  அதிகாரம் கொண்ட மத்திய குழுவினால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.

எப்படியோ ஒரு நூற்றாண்டின் பின்பு , ஒரு நூற்றாண்டு கால அனைத்து போராட்டங்களின் பின்பு,  அனைத்து பெரும் தலைவர்களின் பின்பு,  அனைத்துப் போராட்ட வழிமுறைகளின் பின்பு  ,  இன்றைய நிலையில் ,  இறுதி அர்த்தத்தில் சிங்கள மேலாதிக்கத்தின் இரும்பு சப்பாத்து காலடியில் தமிழ் இனம்  வீழ்ந்து  அடிமைப்பட்டு கிடக்கின்றது.

திரு.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு பலம் பொருந்திய கூட்டு முன்னணியை உருவாக்குவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு எந்தொரு மாற்று வழியும்  தற்போது கிடையாது .

இன்றைய உலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு   ஊடாகவே  சர்வதேச அரசியலை   அணுகும்  போக்கை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லையேல் நிச்சயம் அந்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் இருக்காது.  இந்தியாவோ, அமெரிக்காவோ, மேற்குலக நாடுகளோ  எவையாயினும்   தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை   அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைதான் கோரி நிற்கும்.

- மு.திருநாவுக்கரசு -