img/728x90.jpg
இதற்குத்தானா ஐ நா வின் இந்தக் கால அவகாசம்

இதற்குத்தானா ஐ நா வின் இந்தக் கால அவகாசம்

சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்திற்கு புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது உலகளவில் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தாங்கள் நீதியை வழங்கப்போவதில்லை என்ற பெரும் ஆதாரத்தை இந்த நியமனம் மூலம் சிங்களப் பேரினவாதம் இந்த உலகிற்கு வெளிப்படையாக வழங்கியிருக்கின்றது.

மகேஸ் சேனநாயக்காவிற்கு அடுத்த நிலையில் இப்பதவிக்கு வரவேண்டிய நிலையில் மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என இருவரும் இருந்த நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் கோரிக்கையைப் புறந்தள்ளி, இந்தப் பதவியை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு வழங்கியமையானது இனஅழிப்பை வெற்றிகரமாக செய்து முடித்தமைக்காக சிங்கள தேசத்தால் வழங்கப்பட்ட உயர் கெளரவமாகவே பார்க்கமுடிகின்றது.

கடந்த சில மாதங்களின் முன் இவருக்கு சிறீலங்கா இராணுவத்தின் தலைமைப் பிரதானி எனும் உயர் பதவியை சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திபால சிறீசேன வழங்கியபோது, அமெரிக்கா, சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமைவாதிகளும் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக மிகமோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்காவை மிகவும் கீழ் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு தெரிவித்திருந்தது.

மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது 2009ம் ஆண்டு வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர் என ஐக்கிய நாடுகள் விசாரணை குழு தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்த சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு, சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும் சித்திரவதைகளிற்கும் காரணம் எனவும் குற்றம்சாட்டியிருந்தது.

சிறீலங்கா இராணுவத்தின் தலைமைப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கே இத்தனை எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த நிலையில், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தற்போது அதனையும்விட உயர்ந்த பதவியான இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். சிறீலங்கா இராணுவத்தில் இன்று உயர்மட்டத் தளபதிகளாக இருக்கும் எல்லோருமே தமிழின அழிப்பில் முன்னின்று செயற்பட்டவர்கள்தான்.

அவர்களில் யார் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இனப்படுகொலையாளிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களை எல்லாம் மீறி இறுதி இனஅழிப்புப் போரில் களத்தில் நின்று தமிழின அழிப்பின் உச்சத்தைத் தொட்டவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ச இருந்த
போது, அவரது நெருங்கிய சகாவான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவரது கட்டளையை ஏற்று ஏராளமான படுகொலைகளைச் செய்துள்ளார்.

இவற்றையயல்லாம் விட சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் பயன்பாட்டிற்கும் இவரது கட்டளைகளே மிகமுக்கிய காரணமாக இருந்துள்ளன.

அத்துடன், தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பரியா போன்றவர்கள் உட்பட உயிருடன் பிடிக்கப்பட்ட ஏராளமானவர்களின் படுகொலைகள் இவரது கட்டளையின் கீழேயே நடைபெற்றுள்ளன.

இவற்றை கடந்த காலங்களில் சனல்-4 உட்பட பல்வேறு ஊடகங்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியும் இருந்தன.

அதிகம் தேடப்படும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர் சவேந்திர சில்வா என்பதில் சந்தேகமில்லை எனக் குற்றம்சாட்டியிருந்த மனித உரிமைகள் வாதியான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறித்த ஆவணமொன்றை தாங்கள் தயாரித்துள்ளதாகவும் அதனை விரைவில் வெளியிடப்போவதாகவும் எச்சரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஒருவரையே சிறீலங்கா தமது இராணுவத்தின் தளபதியாக இப்போது நியமித்திருக்கின்றது. சிறீலங்கா தமது மனித உரிமை மீறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கும் எனக்கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மூன்றாவது தடவையாக மேலும் இரண்டு ஆண்டுகளை காலஅவகாசமாக வழங்கியுள்ளது.

அந்த இரண்டு வருடகாலத்தில் சிறீலங்காப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள நீதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உயர் பதவி நியமனங்களையே பார்க்கமுடியும்.

இதற்குத்தானா ஐ.நா. மனித உரிமைகள் சபை கால அவகாசம் வழங்கியதோ என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. அதேவேளை, இந்த நியமனம் இன்னொரு பேருண்மையையும் உலகிற்கு இங்கு சொல்லி நிற்கின்து. அது, சர்வதேசத்தின் தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

Image result for ஈழமுரசு