img/728x90.jpg
ஈழப்போரின் கொடை -

ஈழப்போரின் கொடை -

புலிகள் இயக்கம் ஈழ நாட்டை அடைவதுதான் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இறுதிப்போரில் பல்வேறு சதிகளினால், சக்திகளினால் அக்குறிக்கோளில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால் முதன்மை குறிக்கோளில் தோல்வியுற்றாலும், அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அதைவிட ஒரு பெரிய குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளார்கள். அதுதான் புதிய கற்பித உருவாக்கம் (new narrative).

உலகிலுள்ள எந்த மதங்களும் அவர்களை போல உணர்வுகளை உருவாக்க முடியவில்லை. சிறு தொகையான மக்கள் பலத்தைக் கொண்டு, பலம் வாய்ந்த இரண்டு இராணுவங்களை தோற்கடித்தார்கள். உலக வல்லுனர்களெல்லாம் பயிற்சி கொடுத்தும் முடியவில்லை. இதில்தான் அவர்களின் உணர்வு பலத்தை பார்க்கவேண்டும். இவை அனைத்தையும் அவர்கள் மத சார்பற்ற கற்பிதங்களால் செய்ய முடிந்திருக்கிறது.

இறுதி யுத்தத்தில் அவர்கள் ஒரு நல்ல வரலாற்றை விட்டுச்செல்லவேண்டும் என்று உறுதியாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி கருதுகிறார். வரலாற்றுக் கற்பிதங்கள்தான் ஒரு சமூகத்தின் இருப்புக்கான ஆயுதம். அதன் முலமே அரசியலும் நடைபெறுகிறது, அதன் வழியேதான் சமூக மறுசீரமைப்புகளும் நடக்கின்றன.

புலிகள் தங்கள் அழிவிலும் யாருக்கும் கிடைக்காத ஒரு நிகரில்லா ஆயுதத்தை, ஒரு வரலாற்றுக் கற்பிதத்தை (historical narrative) உருவாக்கி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்களும் அந்த ஆயுதத்தின் அங்கமாகிவிட்டார்கள்.

மற்ற இனங்களுக்கு புனைவுகளால் ஆன கற்பிதங்களே உள்ளன, உண்மையான கற்பிதங்கள் இல்லை. ஆனால் புலிகள் ஒரு உண்மையான, உணர்வுகளில் மற்ற அனைத்து கற்பிதங்களையும் விட பலமான, ஒரு முன்னேற்றகரமான, புரட்சிகரமான, மத சார்பற்ற, 21-ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கற்பிதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மாபெரும் சாதனை, மாபெரும் கொடை. இது அவர்களின் தலையாய குறிக்கோளான ஈழ நாட்டையும் விட சாதனையில் பெரிது.

ஈழமோ தமிழகமோ எதிர்கால உலக சூடேற்றத்தில் அழிவதற்கு வாய்ப்பிருக்கிறது. நிலத்தின் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல. ஆனால் கற்பிதங்களின் மாற்றம் நிரந்தரமானது. அவர்களின் கற்பிதம் காலம் உள்ளவரை தமிழினத்தைக் காக்கும் வல்லமை கொண்டது.

ஓர் இனத்தின் வலிமை என்பது அதன் எண்ணிக்கையிலோ, எல்லையிலோ இல்லை; அதன் கற்பிதத்தில்தான் உள்ளது. குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள மரபணு வேறுபாடு வெறும் 4% தான், ஆனால் நமது ஆற்றலுடன் குரங்கை ஒப்பிட முடியாது. அதுபோலத்தான் புலிகளின் கற்பிதங்களும். அதை உள்வாங்கிய தமிழ்ச்சமூகத்தின் ஆற்றலும் அதைப்போலத்தான் பலமடங்கு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் ஏற்கனவே உலகறிய நிரூபித்திருக்கிறார்கள்.

நமது எதிரிகள் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அறுந்துபோன இந்துத்வா, மகாவம்ச கற்பிதங்களைக் கொண்டு நம்மை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் புலிகள் உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்கள் முன்னால் இவை சுக்குநூறாக நொறுங்கும்.

இக்கற்பித்ததைக் கொண்டு இழந்ததை மட்டும் நாம் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, மறுசீரமைத்து, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம். அதற்கான வலிமை அக்கற்பிதங்களுக்கு உண்டு. இதை ஏற்கனவே புலிகள் போர்த்துறையில் செய்து காட்டிவிட்டார்கள். நாம் மற்ற துறைகளுக்கு கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர்களின் கற்பிதங்கள் அடிப்படையாக அமையும்.

ஜப்பான் எவ்வாறு மறுசீரமைப்பு செய்து சிறப்படைந்தார்களோ, அதைவிட நம்மால் சிறப்பாக செய்வதற்கேற்ற கற்பிதங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

பிரபாகரன் அவர்கள் வரலாற்றின் திறனை நன்றாக அறிந்தவர்:

“இலட்சியத்தால் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள். இந்த வரலாற்றின் படைப்பாக எமது தேசிய மண் ஒரு சுதந்திர பூமியாக பிறப்பெடுக்கும் என்பது திண்ணம். “

பிரபாகரன் அவர்கள் கூறியதில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டாவது பாகம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

புலிகளின் கற்பிதங்களின் வலிமை எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் புலிகளின் வரலாற்றை மறைக்க முழு மூச்சில் செயல்படுகிறார்கள். அவர்களின் கல்லறைகளை இடித்தார்கள், போரில் அழியாத பதுங்கு கட்டிடங்களைத் வெடி வைத்து தகர்த்தார்கள், தலைவர்களின் உடல்களை மறைத்தார்கள், ஐயா நெடுமாறனின் நூலை எரிக்க நீதி மன்றம் உத்தரவிடுகிறது. புலிகள் பற்றிய திரைப் படங்களுக்கு தடை இடுகிறது. அவர்கள் அஞ்சுவது புலிகளின் வரலாறு என்ற மாபெரும் ஆயுதத்திற்குத்தான். அதற்கு முன் அவர்களது இந்துத்வா மகாவம்ச கட்டுக்கதைகள் அப்பளமாக நொறுங்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளின் வரலாற்றை மறைக்காமல் தமிழரை அழிக்க முடியாது. ஒரு நாட்டின் ஆன்மா என்பது போரின் மூலமே உருவாகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல் (Hegel)

“Every nation that wishes to emerge into existence must assert its individuality or soul by entering the stage of History, that is to say, by fighting other nations.” [17]

ஈழப்போரின் அழிவு என்பது தமிழர்தேசத்தின் ஆன்மாவின் பிறப்பு, நமது வரலாற்று கற்பிதங்களின் பிறப்பு. அந்த ஆன்மாவை புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம் ஒவ்வொருவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பது நாம் செய்யவேண்டிய முக்கிய செயல்பாடு. ஒவ்வொரு வீட்டிலும் மாவீரர் நாள் கொண்டாடப்படும் நாள் வரும்பொழுது, 'தமிழின விடிவு வெகு தூரத்தில் இருக்கப் போவதில்லை. அது ஒரு புதிய தமிழ்ச்சமூகத்தை, நாம் எண்ணிக்கூட பார்க்க முடியாத கனவுதேசத்தைப் படைக்கும்' என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

அதுதான் வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம் வரும் உணர்வுகளின் பலம். இன்று தமிழ்த்தேசிய அரசியலை இயக்குபவர்களுக்கு உந்து சக்தியாக இருப்பதும் அவர்கள் உள்வாங்கிய புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள்தான்.

பகுத்தறிவை மட்டும் கொண்டு மக்களை எழுப்பிவிடலாம் என்று நினைத்தால், தோல்விதான் மிஞ்சும். மனிதனின் மூளை உணர்வுகளுக்கே செவி மடுக்கும். புலிகளின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமிது.

- பரணி கிருஸ்ணரஜனி -