img/728x90.jpg
கடந்த கால நிகழ்வுகள் பலருக்கு படிப்பினை ஆகியிருக்கிறது - வளப்படுத்தியிருக்கிறது - விடுவித்திருகிறது. ஆனால் தமிழர்களுக்கு?

கடந்த கால நிகழ்வுகள் பலருக்கு படிப்பினை ஆகியிருக்கிறது - வளப்படுத்தியிருக்கிறது - விடுவித்திருகிறது. ஆனால் தமிழர்களுக்கு?

கடந்து வந்த காலத்தின் நிகழ்வுகள் என்ற ரீதியில் அமைந்துள்ள வரலாறுகள் பல படிப்பினைகளை எம் முன் பாடமாக விரித்துவிட்டிருக்கின்றன. வரலாறுகள் பலவேளைகளில் வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது என்றார் போர்கால இங்கிலாந்தின் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில். அடக்கி ஆழ்பவர்களே வரலாற்றை எழுதி அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொள்கின்றனர்.

ஆனால் அதில் எவை எல்லாம் பின்னாளில் தமக்கு சாதகம் இல்லையே அவற்றை மறைத்தும், அழித்தும் கூட விடுவார்கள். தன்னை விடுவித்துக் கொள்ள அல்லது நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் எவரும், அல்லது இனமும் இந்த பொய்மைகளில் இருந்தான படிப்பினைகளை என்றும் கவனத்தில் கொள்வதுவும், அது குறித்த தேடுகல்களினூடாக புரிந்துணர்வைம் கொண்டிருந்தாலேயே அதனால் தன்னைத் தற்காத்துக் கொண்டு முன்நகர முடியும். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் அடிமைத்தனத்திலேயே இருந்து, அதற்கு இயைபாகிவிட்ட தமிழினம், உலகில் எங்கிருந்தாலும் எசமானனுக்கு என்றும் விசவாசமான அடிமைத்தனத்தில் தான் வாழவிழைகின்றதா? என்பதே இங்கு கேள்வியாகிறது.

வரலாற்றில் இருந்து சரியான பாடத்தை கற்பதைத் தவிர்த்து, வரலாற்றுப் பாடங்களைத் தொலைத்துவிட்டு, ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் புதிதாக கற்பது போல் கற்று, தன்னைத் தொடர்ந்தும் சிதைத்துக் கொள்கிறதா? என்ற கேள்வியை, ஒவ்வொரு தமிழனும் தனக்குள் எழுப்பி, பதில் தேட முனைந்தாலே, ஏதோ ஒரு ஒளிக்கீற்றாவது தெரியலாம் என்பதே இன்றைய நிலை.

கீழே தரப்பட்டுள்ள பழைய பட்டயம் ஒன்று 71 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றைச் சொல்கிறதாம். இதிலும் உள்ள செய்தி என்னவென்றால், தன் இலக்கை நோக்கி நகர சிங்களம் எவ்வாறு சிறப்பாக அன்றே நகர்ந்திருக்கிறது என்பதே.

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறும் போது, தமிழர்கள் அதற்கு குறுக்கே நின்று முழு இலங்கையையும் தாம் தன்னகப்படுத்துவதை தடுத்துவிடக்கூடாது என்பதே அவ்விலக்கு.

சிங்களத் தலைவர்களுக்காக கப்பலேறிச் சென்று இங்கிலாந்தில் வாதாடி, அவர்களை 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவித்த தமிழ் தலைவர்களே, அவர்களால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாக, தனித் தமிழ் அரசியல் அமைப்பை உருவாக்கி தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது.

அவர்களே பின்னர் ஏமாந்த பட்டயம் தான், இந்த சிங்களத்திலும், தமிழிலும் தேசியகீதம் பாடப்படும் என்ற இந்த 1949 அறிவிப்பு. ஆனால் இந்த வரலாற்றையுமே தொலைத்துவிட்டு 2016இல் தான் ரணில் - மைத்திரி அரசு தான் தமிழிலும் தேசியகீதம் பாட அனுமதித்தது, எனவேறு எம்மவரில் சிலரே புகழாராம் வேறு.

இதைச் சுற்றி பல வாதப்பிரதிவாதங்கள் வேறு. விரும்பினால் சிங்களத்தில் பாடுங்கள், இல்லையேல் வந்த உங்கள் இடத்திற்கே போய்விடுங்கள் எனவேறு கொக்கரிக்கிறது சிங்களத்தின் இனவாதக்கூட்டம். இதில் ஏதுவும் புதிதாக இருக்கிறதா? இதுதானே வரலாறு.. தீர்மானிப்பவர்கள் தங்களை பெரும்பான்மை என்கிறார்கள்.. பெரும்பான்மையே தீர்மானிக்கும் அதற்கு அனைவரும் ஆட்படவேண்டும் என்கிறார்கள்.. தமிழர்களை ஒரு தேசிய இனமாக என்றும் எம்மால் கருதமுடியாது என்றும், நீங்கள் என்றும் அடிமைகள் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.. இக்கருத்தியலில் சிங்களத்தில் என்றும் தளம்பல் இருந்ததில்லை, என்பதே வரலாறு என்பதை எம்மில் காட்டிக் கொடுப்பவர்களும், கூட்டிக் கொடுப்பவர்களும் புரிந்து கொள்ளமாட்டார்கள் தான்!!! ஆனால் நாங்களுமா???

- நேரு குணரட்ணம் -