img/728x90.jpg
சாம்பல் மேட்டிலிருந்தும் மீண்டும் எழுவோம்

சாம்பல் மேட்டிலிருந்தும் மீண்டும் எழுவோம்

ஈழமுரசு தனது பயணத்தை ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருபத்து ஆறாவது ஆண்டில் காலெடி எடுத்து வைக்கின்றது. 1995ம் ஆண்டு தைப் பொங்கல் நன்நாளில் ‘உண்மையின் முன்னால் நடுநிலைமை இல்லை. ஈழமுரசு என்றும் போராட்டத்தின் பக்கமே நிற்கும்’ என்ற உறுதி மொழியுடன் கப்டன் கஜன் அவர்களால் தொடங்கப்பட்ட ஈழமுரசு இதழின் பயணம், கால் நூற்றாண்டைக் கடந்து இன்னும் இலக்கு நோக்கி மாறாமல் பயணிக்கின்றது.

கடந்த 25 ஆண்டுகளில் இழப்புக்கள், ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள் என ஈழமுரசு சந்தித்த தடைகள் ஏராளம். எனினும் அத்தனையையும் கடந்து, இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது சாதனை மட்டுமல்ல, ‘புலம்பெயர்ந்த தமிழர்களின் ஊடக வரலாற்றில் ஒரு சரித்திரமும் கூட.’

ஈழமுரசு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே, அதனை ஆரம்பித்த கப்டன் கஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், தனது பயணத்தை இடைநிறுத்தாது இன்னும் வீச்சுடன் தொடர்ந்தது. தாயகத்தில் உன்னத போராட்டத்தில் போராளிகளும், மக்களும் குதித்திருந்த வேளையில், அப்போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் பணியை ஐரோப்பிய நாடுகளைக் கடந்து கனடா, அவுஸ்திரேலியா என  புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் ஈழமுரசு கிளைகள் பரப்பி காத்திரமாகவே புரிந்தது.

பொருளாதார நெருக்கடி ஒருபுறம், இலத்திரனியல் ஊடகங்களின் அதிகரித்த வருகை, சமூக வலைத்தளங்களின் செய்திப் பரிமாற்ற வேகம் என உலகளவில் அச்சு ஊடகங்களுக்கு எழுந்த அச்சுறுத்தல்களை ஈழமுரசும் எதிர்கொண்டது. இணையத்தளங்களின் வருகையால் எத்தனையோ அச்சு ஊடகங்கள் நிரந்தரமாகவே நின்று போயின. எனினும் அவற்றையும் கடந்தும் ஈழமுரசு நின்று நிலைத்தது.

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் முடிவில், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மெளனத்தின் பின்னர் ஈழமுரசு சந்தித்த பேராபத்துக்கள் மிக அதிகம். 2009ன் நடுப்பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து வந்த செய்தியை வெளியிடுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தால், அதற்குப் பணிந்துபோக மறுத்ததால் எழுந்த நெருக்கடியில், மாற்றுவழி ஏதுமின்றி ஈழமுரசு இதழை முதற் தடவையாக இடைநிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஈழமுரசு இதழை வெளிக்கொணர்ந்த பூபாளம் நிறுவனமும் அத்துடன் இழுத்து மூடப்பட்டது.

எல்லாம் முடிந்துவிட்டதோ? என்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரக்த்தியுற்று நின்றவேளை, உண்மை நிலை எதுவென அறிந்துகொள்ள முடியாமல் அவர்கள் துடிதுடித்தவேளை, ஓரிரு மாதங்களில் ஈழமுரசு ‘ஊடக இல்லத்தின்’ வாசலின் ஊடாக மீண்டும் மீண்டெழுந்து வந்தது. ‘உண்மையின் முன்னால் நடுநிலைமை இல்லை’ என்ற அதே உறுதியுடனேயே அது வெளிவந்தது.

ஈழமுரசின் மீள் வருகை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால், பொய்யை உண்மையாக்க முயன்றவர்களுக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது. எந்தவித சமரசமுமின்றி விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு துணைபோனவர்களையும், துரோகம் புரிந்தவர்களையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

2009 மே மாதத்திற்குப் பின்னர், மழைக்கு வெளிவரும் புற்றீசல்கள் போன்று, மழைக்கு முளைத்த காளான்கள் போன்று, புதிது புதிதாக கிளம்பிவந்த பொறுப்பாளர்களையும், கட்டமைப்புக்களையும் ஈழமுரசு உள்வாங்கவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்ததால் சந்தித்த ஆபத்துக்களும், நெருக்கடிகளும் மிக அதிகம்.

ஒரு கட்டத்தில் இது ஈழமுரசின் பொறுப்பாளர் மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளும் வரைக்கும் சென்றது. இதனால், பல ஆண்டுகளாக இயங்கிவந்த அலுவலகத்தையும் இழந்து, ஈழமுரசு மீண்டும் இரண்டாவது தடவையாக இடைநிறுத்தப்படவேண்டிய நிலைக்குத் தள்ளியது.

பிரெஞ்சுக் காவல்துறையின் துரித நடவடிக்கையும், நீதிமன்றத்தின் துரித விசாரணையும் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியபோதும், ஈழமுரசு மீண்டும் மீண்டெழுந்து வருவதில் பாரிய சாவல்களைச் சந்தித்தது. மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதுபோன்ற நிலைமை இது. ஆனாலும், ஈழமுரசு சோர்ந்து போய்விடவில்லை. இன்னும் புதிய வீச்சுடன் அது மூசியயழுந்து வந்தது.

இந்திய இராணுவத்துடன் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போர் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் இருந்த ஈழமுரசு அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அலுவலகத்தை இழந்தபோதும், பத்திரிகையை கைவிடாது பல்வேறு இடங்களிலும் மாறி மாறித் தலைமறைவாக இருந்து அதனை வெளிக்கொண்டுவந்தார்கள். மக்களுக்கு உண்மைகளை எடுத்துச்சொன்னார்கள்.

இன்று பிரான்சில் இருந்து வெளிவரும் இந்த ஈழமுரசும் அவ்வாறான ஒரு நடமாடும் நிலையில் இருந்துகொண்டுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இதழை தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஈழமுரசை நிறுத்துவதற்காக விளம்பரதாரர்களின் விளம்பரங்களைத் தடுத்து பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்தார்கள். உயிரச்சுறுத்தல்களை ஏற்படுத்த விளைந்தார்கள். ஈழமுரசுக்கு ஆதரவு வழங்குபவர்களை தடுப்பதற்கு முனைந்தார்கள். இன்னும் இப்படி எத்தனையோ...

ஆனாலும் அவற்றைக் கடந்தும் ஈழமுரசு பயணத்தைத் தொடர்ந்தது. அப்போது மீண்டும் காத்திருந்தது இன்னொரு ஆபத்து. இம்முறை இது புதிய வடிவில்..! வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, உள்ளுக்குள்ளேயே புற்றுநோயாக வளர்ந்துகொண்டிருந்த துரோகத் தனத்தை கண்டுகொள்ளமுடியவில்லை. இறுதி நேரத்தில் எனினும் கண்டுணர்ந்துகொண்டதால் அப்பாரிய சதிக்குள் இருந்தும் ஈழமுரசு மீண்டெழுந்துகொண்டது.

விடுதலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை ஈழமுரசு கடந்து வந்திருப்பதென்பது சாதாரணமல்ல. ஈழமுரசைப் பொறுத்தவரை, ஈழமுரசுக்கும் இதுவொரு ‘நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகளே.’ இத்துடன் இவை முடிந்துவிடப் போவதில்லை. இன்னும் இன்னும் இவை தொடரவே செய்யும். ஆனாலும் இவற்றையும் மீறி, உயிரிழந்த பின்னரும் உயிர்த்தெழுந்துவரும் பீனிக்ஸ் பறவைபோல், தலைவனையும், மாவீரர்களையும், தமிழீழ விடுதலையையும் நேசிக்கும் ஈழமுரசு சாம்பல் மேட்டிலிருந்தும் இலக்கை அடையும்வரை  மீண்டும் மீண்டும் தீப்பிழம்பாக எழுந்துவரும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு