img/728x90.jpg
மேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா?– பகுதி 5

மேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா?– பகுதி 5

பன்முகப்படுத்தப்பட வேண்டிய ஈழத்தமிழர்களின் வெளியுறவுக் கொள்கை - கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா

இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு ஈழத்தமிழர்களுக்கான கதவுகளை திறக்க வைக்கக்கூடிய ஆண்டாக 2020ஆம் ஆண்டு முகிழ்த்துள்ளது.

ஒருபுறத்தில் ஈழத்தீவில் கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்புடன் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் சிங்கள பெளத்த மேலாதிக்கவாதம்.

மறுபுறத்தில் ஈழத்தீவு மீதான தனது பிடியைப் பொருண்மியத் தளத்தில் இறுக்கத் தொடங்கியிருக்கும் சீனா. இன்னொரு புறத்தில் மீண்டும் உலக வல்லாதிக்க சக்தியாக உருவெடுக்கும் கனவில் தனது பார்வையை இந்து சமுத்திரத்தையும், ஈழத்தீவையும் நோக்கித் திருப்பியிருக்கும் ரசியா. இதனால் தனது உலக வல்லாதிக்க நிலை சீர்குலைந்து விடும் என்ற அங்கலாய்ப்பில் வியூகம் வகுக்கும் அமெரிக்கா. எடுப்பார் கைப்பிள்ளை போல் அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகங்களுக்கு ஏற்ப தமது வெளியுறவுக் கொள்கைகளை நெறிக்கும் ஏனைய மேற்குலக நாடுகள்.

இவையயல்லாவற்றிற்கும் இடையில் நிகழும் போட்டியில் தனது வல்லரசுக் கனவையும், பிராந்திய ஆதிக்கத்தையும் பேண முற்படும் இந்தியப் பேரரசு.

இவ்வாறு கண்கொத்திப் பாம்புகள் போன்று ஈழத்தீவை மையப்படுத்தித் தமது வியூகங்களை பிராந்திய - உலக வல்லரசுகள் வகுப்பதானது ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்புக்களை உள்ளடக்கிய ஆண்டாக 2020ஆம் ஆண்டை முகிழ்க்க வைத்துள்ளது என்றே எதிர்வுகூற வைக்கின்றது.

அதே நேரத்தில் இவ்வாண்டைத் தமது அரசியல் வேணவாவை முன்னோக்கி நகர்த்துவதற்கான திறவுகோலாக ஈழத்தமிழர்கள் மாற்றியமைப்பது என்பது நாம் வகுக்கப் போகும் வெளியுறவுக் கொள்கையிலேயே தங்கியுள்ளது.

                                                                                ************

ஈழத்தமிழர்களைப் போன்று தொடர்ச்சியாக இன அடக்குமுறைக்கும், இனவழிப்பிற்கும் ஆளாகும் ரொகிங்கியா, பாலஸ்தீனம் ஆகிய தேசங்களுக்கு கடந்து போன 2019 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டு.

முதலாவதாக ரொகிங்கியர்கள் தமக்கென்றொரு தனிநாட்டைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் தமது எல்லைக்குள் ரொகிங்கியர்களை அடித்து விரட்டிப் பன்னாட்டுக் குற்றங்களில் மியன்மார் (பர்மா) ஈடுபடுவதாக வங்காளதேசம் (பங்களாதேஸ்) கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் நியாயாதிக்கம் தமக்கு இருப்பதாகக் கடந்த 06.09.2019 அன்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மியன்மாருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னோடியாக பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்குவதற்கு 14.11.2019 அன்று தமது வழக்குத் தொடுநருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஏக காலத்தில் ஐ.நா. மன்றின் உப அமைப்பான பன்னாட்டு நீதிமன்றத்தில் (கவனிக்கவும்: பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அல்ல) ரொகிங்கியர்களின் சார்பில் கம்பியா வழக்குத் தாக்கல் செய்து, அது 15.12.2019 அன்று நீதிமன்றால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.   

இவ்விரு நிகழ்வுகளும் கட்டவிழ்ந்த சமகாலத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலால் இழைக்கப்பட்டதாகச் சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளைத் தொடங்கப் போவதாக 20.12.2019 அன்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது.

இதில் ஈழத்தமிழர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இஸ்ரேலும் சரி, மியன்மாரும் சரி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் அல்ல. இவ்விரு நாடுகளுமே பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உருவாக்கத்திற்கு வழிசமைத்த ரோம் சாசனத்தில் கையயாப்பமிடவில்லை. இவ்வாறான நாடுகளை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதாயின் பொதுவாக ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக அமெரிக்காவும், சீனாவும் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளை எவருமே எடுக்கத் தலைப்படவில்லை.

ஆயினும் ரோம் சாசனத்தில் உள்ள சட்ட நுட்பங்களை நுணுகி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் மியன்மாருக்கு எதிராக வங்காளதேசத்தின் உதவியுடன் ரொகிங்கியர்களும், ரோம் சாசனத்தில் தாம் கையயாப்பமிட்டிருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பாலஸ்தீன அதிகார சபையும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் வாசல்படியைக் கடந்து தமக்கான அனைத்துலக நீதியைக் கேட்பதற்குத் தலைப்பட்டிருக்கின்றன.

மறுபுறத்தில் ஐ.நா மன்றின் உப அமைப்பான பன்னாட்டு நீதிமன்றத்தில் அரசுகள் மட்டும் தான் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். ரோம் சாசனம் உருவாக்கிய பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தைப் போன்று அல்லாது அரசுகளுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட அனைத்துலக நீதிப் பொறிமுறை தான் பன்னாட்டு நீதிமன்றம். இங்கும் சட்ட நுட்பங்களை நுணுகி ஆராய்ந்து கம்பியாவின் உதவியுடன் மியன்மாருக்கு எதிராக ரொகிங்கியர்கள் களமிறங்கியுள்ளனர்.

Image result for Myanmar's international justice system

இவ்விரு நகர்வுகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாண்டில் சிறீலங்காவிற்கு எதிரான அனைத்துலக சட்டப் போர்க்களத்தைத் திறக்க வேண்டியவர்களாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.

ஆம், தமிழின அழிப்புப் போரின் ஊடாகக் கடந்த நான்கரை தசாப்தங்களில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களைத் தமது சொந்த மண்ணை விட்டு சிறீலங்கா அரசு விரட்டியடித்திருக்கின்றது.

இவ்வாறு தமது நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட அல்லது வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழத்
தமிழர்கள், அதிலும் ரோம் சாசனம் கைச்சாத்திடப்பட்ட 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ தாயகத்தை விட்டுக் குடிபெயர்க்கப்பட்ட ஈழத்தமிழர்கள், வங்காளதேசத்திடம் ரொகிங்கியர்கள் உதவி பெற்றது போன்று தாம் அகதித் தஞ்சம் பெற்றுள்ள நாடொன்றின் (ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடாக அது இருக்க வேண்டும்) உதவியைப் பெற்றால் சிறீலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்குள் இழுத்துச் செல்ல முடியும்.

சமநேரத்தில் கம்பியாவிடம் ரொகிங்கியர்கள் உதவி பெற்றது போன்று தாம் வாழும் இன்னொரு நாட்டின் உதவியுடன் பன்னாட்டு நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்தும் நடவடிக்கைகளை ஈழத்தமிழர்கள் எடுக்கலாம்.

ஆனால் வெறுமனவே மேற்குலக நாடுகளை ஈழத்தமிழர்கள் நம்பியிருப்பார்களாயின் இது சாத்தியமாகப் போவதில்லை. ஏனென்றால் இன்று ஈழத்தீவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், சீனாவின் பக்கம் சாயும் சிறீலங்காவின் போக்கும் மேற்குலகிற்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், இன்னமும் அதனை ஓர் எதிரி நாடாக மேற்குலகம் கருதவில்லை.

தவிர இன்றைய உலக ஒழுங்கில் இந்தியாவை மீறி ஈழப்பிரச்சினையில் அப்பட்டமாகத் தமிழர்களுக்கு ஆதரவாக மேற்குலகம் நடந்து கொள்ளாது.

சிறீலங்காவை சீனாவின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கும், தமது கட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதற்கும் மேற்குலகமும், இந்தியாவும் விரும்புகின்றன.

அதற்கான துருப்புச் சீட்டாகவே ஈழப்பிரச்சினையை அவை கையிலெடுத்து நகர்கின்றன. அதேநேரத்தில் தமது பிடியை விட்டு ஈழத்தமிழர்கள் நழுவிச் செல்லக்கூடாது என்றும் அவை விரும்புகின்றன.

இம் மூலோபாயத்துடனேயே கடந்த 18.10.2019 தொடக்கம் 20.10.2019 வரையான மூன்று நாட்களும் சூரிச் மாநகரின் யூஎற்லிபேர்க் மலையுச்சியில் புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான மாநாட்டை சுவிற்சர்லாந்து அரசாங்கம் நடத்தியிருந்தது.

இம் மூன்று நாள் மாநாட்டின் பொழுது நடந்தேறிய காரசாரமான விவாதங்களும், வழங்கப்பட்ட ஆலோசனைகளும் இம் மூலோபாயத்தின் அடிப்படையிலானவை தான்.

                                                                                       ************

சுவிஸ் மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல் நாள் இரவு நடைபெற்ற வரவேற்பு விருந்துபசாரத்தின் பொழுது, மாநாட்டின் நோக்கம் பற்றி நான் வினவியவேளையில், தமது அரசியல் நடவடிக்கைகளைச் சரியான முறையில் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை என்று தாங்கள் கருதுவதும் இம் மாநாட்டைத் தாம் ஏற்பாடு செய்ததன் ஒரு முக்கிய நோக்கம் என்று என்னிடம் சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சின் இராசதந்திரி மார்டின் ஸ்ரேசிங்கர் கூறியிருந்தார்.

இதனை இப் பத்தியின் முதலாவது தொடரில் நான் பதிவு செய்திருந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கக் கூடும்.

சிறீலங்காவிற்கு எதிரான இனவழிப்பு விசாரணைகள் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கென உருவாக்கப்படும் பன்னாட்டு தீர்ப்பாயம் ஒன்றில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே கடந்த பத்தாண்டுகளாகத் தமிழர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

கலப்பு நீதிமன்றத்திற்கான பரிந்துரையை 2015ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் முன்மொழிந்த பொழுது கூட இவ் வேண்டுகையே மேற்குலக இராசதந்திரிகளிடம் தமிழர் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

எனினும் இதனை நிராகரித்த மேற்குலக இராசதந்திரிகள், சீனா, ரசியா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறிச் சிறீலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தம்மால் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார்கள்.

அது போல் ஐ.நா. பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் ஐம்பது விழுக்காடு நாடுகளின் உதவியைத் திரட்டி றுவாண்டா, யூகொஸ்லாவியா பாணியில் சிறீலங்காவிற்கு எதிரான பன்னாட்டுத் தீர்ப்பாயம் ஒன்றைத் தாம் நிறுவுவதும் சாத்தியமில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினாலும், அதில் தமிழர் பிரதிநிதிகளுக்கான பூடகமான செய்தி ஒன்று மறைந்திருந்தது. அனைத்துலக நீதியைப் பெறும் உங்கள் நகர்வுகளை மாற்று நாடுகளைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ள முற்படுங்கள் என்பது தான் அச் செய்தி. துர்ப்பாக்கியவசமாக அதனை எம்மவர்கள் எவருமே புரிந்து கொள்ளவில்லை.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கதையாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் கூட்டங்களை நடத்துவதிலும், வெளியே ஆண்டுக்கு இரண்டு தடவைகள் பேரணிகளை மேற்கொள்வதிலும், ஏனைய மேற்குலக நாடுகளில் பரப்புரைகளை செய்வதிலுமே ஐந்து ஆண்டுகளை நாம் வீணடித்தோம்.

சுவிஸ் மாநாட்டின் இறுதி நாளில் அங்கிருந்த தமிழர் பிரதிநிதிகள் திடுக்கிடும் வகையில் சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சின் இராசதந்திரியான சப்ரீனா பூச்சிலெர் கூறினார்: ‘எங்களைப் பொறுத்தவரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நீங்கள் யாத்திரை செல்வது ஒரு வினைத்திறனற்ற திட்டம் என்று தான் கூறுவேன்.

’வினைத்திறனற்ற திட்டம் என்ற தமிழ் சொற்பதத்திற்கு அவர் பயன்படுத்தியது ஆங்கிலச் சொல்லாடல் ‘கிறாப் ஐடியா’ என்பதாகும். அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் கூறவில்லை.

மாறாகத் தமது வளங்கள் முழுவதையும் அங்கு தமிழர்கள் குவிப்பதையே ‘கிறாப் ஐடியா’ என்றார்.
அங்கிருந்த சுவிஸ் இராசதந்திரிகளும் சரி, அவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிபுணர்களும் சரி ஐந்து விடயங்களை நேரடியாகக் கூறினார்கள்.

(1) இனவழிப்பு என்ற கோணத்தில் சிறீலங்காவிற்கு எதிரான நகர்வுகளைத் தமிழர்கள் மேற்கொள்வதாயின், தமி
ழினத்தை அழிக்கும் நோக்கத்துடன் தனது யுத்தத்தை சிறீலங்கா முன்னெடுத்தது என்பதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்களைத் திரட்டி ஆவணப்படுத்த வேண்டும்.

(2) தமிழர்களிடம் தற்பொழுது உள்ள ஆதாரங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்ததை நிரூபிக்கும் வகையிலேயே உள்ளன.
 

(3) சீனாவையும், ரசியாவையும் மீறிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை முன்னிறுத்துவதற்கு மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.

(4) சிறீலங்காவிற்கு எதிரான தீர்ப்பாயம் ஒன்றை ஐ.நா. மன்றின் ஊடாக அமைப்பதற்கு மேற்குலகம் நடவடிக்கை எடுக்காது.
 

(5) தமிழர்கள் விரும்பினால் சிறீலங்காவின் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களுக்கும், படை அதிகாரிகளுக்கும் எதிராக மேற்குலக நாடுகளில் பயணத் தடைகளை விதிப்பதற்கும், பிரபஞ்ச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் தாம் வாழும் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.   

இதே நேரத்தில் அனைத்துலக நீதியைப் பெறுவதற்கும், தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் - தமிழர் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகளையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.

உதாரணமாக வெறுமனவே இந்தியாவையும், மேற்குலக நாடுகளையும் மட்டும் நம்பியிருக்காது சீனாவுடனும், ரசியாவுடனும் இராசதந்திர உறவுகளைத் தமிழர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் வெளியுறவுக் கொள்கை என்பது ஓரணி சார்ந்ததாக அல்லாது பன்முகப்படுத்தப்பட்டதாக உலகின் ஏனைய நாடுகளை நோக்கியதாகவும் அமைவதன் மூலமே தமிழர்களுக்கு அனுகூலம் ஏற்படும் என்றும் மாநாட்டின் மூன்றாம் நாள் நான் கூறிய பொழுது, அதற்கு சுவிஸ் இராசதந்திரிகளோ அன்றி அவர்களின் நிபுணர்களோ மறுப்புக் கூறவில்லை.

இம் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தான் மியன்மாருக்கு எதிரான நகர்வுகளை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வங்காளதேசமும், பன்னாட்டு நீதிமன்றத்தில் நமீபியாவும் தொடங்கியிருந்தன.

இது பற்றிய கருத்துக்களை அங்கிருந்த கனடிய பின்னணியைக் கொண்ட இளம் ஈழத்தமிழ் பெண் சட்டத்தரணி முன்வைத்த பொழுது அதை அங்கிருந்த சுவிஸ் இராசதந்திரிகளும், நிபுணர்களும் வரவேற்றார்கள். ரொகிங்கியர்களின் பாணியில் நகர்வுகளை மேற்கொள்வது பற்றித் தமிழர்கள் ஆலோசிப்பதாகக் குறித்த ஈழத்தமிழ் பெண் சட்டத்தரணி கூறிய பொழுது, அங்கிருந்த பன்னாட்டு சட்ட நிபுணரான டேவிட் ரொல்பேற் உணர்ச்சிவசப்பட்டுத் தனது இரண்டு கைகளையும் கைதட்டும் நிலைக்குக் கொண்டு சென்று, பின்னர் தான் இருக்கும் இடம் பற்றிய திடீர் பிரக்ஞையைப் பெற்றவராக கைதட்டாமல் நிறுத்தினார்.

அப்பொழுது அங்கிருந்த சுவிஸ் இராசதந்திரிகளின் முகத்தைக் கூர்ந்து அவதானித்தேன். அவர்களின் முகத்தில் புன்முறுவல். மூன்று நாள் மாநாட்டில் தாம் பூடகமாகச் சொல்ல வந்த செய்தியை ஒரு சிலர் புரிந்து கொண்டுள்ளார்கள் என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் வெளியுறவுக் கொள்கை பன்முகப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு, மாநாடு முடிந்ததும் என்னை சந்தித்த இரண்டு தமிழர் பிரதிநிதிகள், இவ்வாறான நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டால் தங்கள் அமைப்புக்களை மேற்குலக நாடுகள் அழித்து விடும் என்று அச்சம் வெளியிட்டார்கள். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

சிறீலங்காவை சீனாவிடமிருந்து பிரித்தெடுத்துக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமாயினும், நேரடியாகத் தம்மோடு தொடர்புபடாத நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புக்கள் ஊடான நகர்வுகளை ஈழத்தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றது.

அதற்கான திசைகாட்டிகள் தான் ரொகிங்கியர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்.இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்தாக வேண்டும்.

புலம்பெயர் தமிழர் பிரதிதிநிதிகளுடனான மாநாட்டை நடத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் ரொகிங்கியர்கள் உள்ளடங்கலான புலம்பெயர்வாழ் மியன்மார் மக்களின் பிரதிநிதிகளுடன் இதே பாணியிலான மாநாட்டை சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு நடத்தியிருந்தது.

                                                                             ************

2020ஆம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் இனியும் காலம் தாழ்த்தாது தமது வெளியுறவுக் கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு ஈழத்தமிழர்கள் முற்பட வேண்டும். ஏலவே மேற்குலக நாடுகளிலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் முன்னெடுக்கப்படும் பரப்புரை நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளின்  கதவுகளைத் தமிழர்கள் தட்ட வேண்டும். அக்கதவுகளின் ஊடாக சிறீலங்காவிற்கு எதிரான சட்டப் போர்க்களத்தைத் திறக்க வேண்டும்.

சிறீலங்கா அரசுடனான உறவின் மூலம் ஏற்படக் கூடிய வணிக அனுகூலங்களை விடப் பன்மடங்கு வணிக அனுகூலங்களைப் பின்தங்கிய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்படுத்தும் பொருளாதார பலம் தமிழர்களிடம் உண்டு.

அதிலும் கோடிசுவரர்களான புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் சிலரிடம் பின்தங்கிய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய அளவுக்குப் பணம் உண்டு.

தென்னிந்தியத் திரைப்படங்களிலும், புலம்பெயர் தமிழ் ஊடகங்களிலும் முதலீடு செய்து விரயப்படுத்தப்படும் பணத்தை குறித்த நாடுகளில் முதலீடு செய்தாலே அந் நாடுகளை இத் தொழிலதிபர்களால் வளைக்க முடியும்.

தவிர மொரீசியஸ், கிழக்குத் தீமோர், எரித்திரியா போன்ற நாடுகளில் செல்வாக்குடைய தமிழர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றார்கள்.

இவர்கள் முயற்சி எடுத்தால் இந் நாடுகளின் ஆட்சியாளர்களையும் தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் பக்கம் வளைத்தெடுக்கலாம்.

இன்று ஈழத்தீவில் நிகழ்ந்திருக்கும் சீன சார்பு ஆட்சி மாற்றம், தமிழர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளுக்குத் திரைமறைவில் ஆசீர்வாதம் வழங்கும் நிலையிலேயே மேற்குலகையும், இந்தியாவையும் தள்ளியுள்ளது.

(முற்றும்) 

நன்றி: ஈழமுரசு