• :
  • :
களத்தில்

தமிழீழ விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தமிழ் டயஸ்பொறா : Tamil Diaspora

தமிழீழ விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தமிழ் டயஸ்பொறா : Tamil Diaspora

ஒரு விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தேவை. அதுதான் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் மட்டுமல்ல ஏனைய பேராளி இயக்கங்களும் தமிழகத்தை தமது பின்தளமாகக் கண்டடைந்து தமது போராட்டத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.
 
பிற்பாடு இந்திய படைகளுடனான மோதலையடுத்து தமிழகத்தை பின்தளமாக்கி போராட்டத்தை வளர்த்துச்செல்வதில் நடைமுறைச்சிக்கல்கள் ஏற்பட்டது மட்டுமல்ல யாழ் குடவை விட்டு பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் சொந்த மண்ணிலேயே ஒரு உறுதியான பின்தளத்தை வளர்த்தெடுப்பதுதான் அடுத்தகட்ட போராட்டத்தை பன்முகப்படுத்தி வளர்த்துச்செல்ல ஏதுவாக இருக்கும் என்ற புரிதலுடன் வன்னி பெருநிலப்பரப்பை புலிகள் தமது பின்தளமாக்கி கொண்டார்கள்.
 
2009 மே 18 இற்கு பிறகு மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் போராட்டம் தள்ளப்பட்டபோது பின்தளம் எதுவென்பதில் ஒரு குழப்பகரமான நிலை.
 
‘போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது’ என்ற தேசிய தலைவரின் சிந்தனை வரிகளுக்கு ஏற்ப நாம் போராட்ட வழிமுறையை மாற்றி நடந்த இனஅழிப்புக்கு நீதி கேட்கும் ஒரு இராஜதந்திர போராட்ட வழிமுறையை கையிலெடுத்தபோதே அந்த பின்தளம் இயல்பாகவே புலத்திற்கு இடம் மாறிவிட்டது. டயஸ்பொறா என்னும் மாபெரும் சக்தி அது.
 
'நந்திக்கடலின்' துல்லியமான கணிப்பும் அதுவே.

ஆனால் தமிழர் தரப்பு அதை சரியாகக் கணிக்கவில்லை என்பது வேதனையானது. நடந்த இனஅழிப்பின் பின்விளைவாக எமது பின்தளத்தைக்கூட இனங்காண முடியாமல் அல்லது இனங்காண விடாது தடுக்கும் ஒரு நிகழச்சி நிரலுக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்..

2009 நடந்து முடிந்த இனஅழிப்பிற்கு பிறகான நமது தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடான ஒரு தெளிவற்ற – குழப்பகரமான – எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த எமது மதிப்பீடுகளின் விளைவு இது.
 
எமது இந்த மனநிலையை எதிரிகளும் அவர்களின் அடிவருடிகளும் தமக்கு சாதகமாக்கி புலத்தை போராட்டத்திலிருந்து துண்டித்துவிட இன்றுவரை துடியாய்த் துடிக்கிறார்கள்.
 
இதற்கு நம்மவர்கள் பலரும் பலியாகியிருப்பது துரதிஸ்டவசமானது. மே 18 இற்கு பிறகு எமது போராட்டத்தை மீளெழவிடக்கூடாது என்பதன் செயற்பாட்டு அர்த்தம் எமக்கான ஒரு பின்தளத்தை நாம் உருவாக்கக்கூடாது என்பதிலேயே தங்கியிருக்கிறது.
 
எதிரிகளும் பிராந்திய மேற்குலக சக்திகளும் ஒன்றிணைந்து டயஸ்பொறாவை எதிர்க்கும் அல்லது தமக்கு சார்பாக வளைக்கும் தந்திரத்தின் பின்புலம் இதுதான்.
 
எனவே இந்த குரல்களை நாம் இனங்கண்டு புறக்கணிப்பது மட்டுமல்ல புலமும் களமும் ஒன்றிணைந்து ( கூடவே தமிழகமும் ) ஒரு பின்தளத்தை உருவாக்குவதனூடாகவே எமது அடுத்த கட்டப் போராட்டத்தை வலுப்படுத்த முடியும்.
 
இன்று தம்மையறியாமலேயே இன அழிப்புக் குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு பெட்டியடித்து (Box) மைத்ரியின் 'நல்லாட்சி' தந்திரத்தை அம்பலப்படுத்தி ஒரு இராஜதந்திர வெற்றியை தக்க வைத்திருப்பது இந்த டயஸ்பொறாதான்..
 
இனியாவது முரண்பாடுகள் இருந்தாலும் டயஸ்பொறா என்னும் ஒரு புள்ளியில் நாம் ஒன்றிணைந்தால் எமது நீதிக்கான பயணம் எமது கைகளுக்குள் சிக்கிவிடும்.
 
யாரும் அதை மடை மாற்ற முடியாது.
 
சிந்தியுங்கள்...
 
பின் குறிப்பு : இந்த டயஸ்பொறா பலத்தை சிதைக்கவே அனைத்து போர்க்குற்றவாளிகளும் புலத்தில் தூதரக பணி என்ற போர்வையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
 
- பரணி கிருஷ்ணராஜனி -