img/728x90.jpg

சிங்களத்தின் சக்கர வியூகத்திற்குள் தமிழ் அரசியல் கைதிகள் - கலாநிதி சேரமான்

நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதி இரண்டு வார காலப்பகுதி அது. எப்படியும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வருவதற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் கோத்தபாய ராஜபக்ச துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்.

தம்பி உடையான் படைக்கஞ்சான்’ என்ற கதையாக, தனது யுத்த வெற்றிகள் பற்றி உலகெங்கும் புழுகித் தள்ளுவதற்காக மகிந்தர் விமானம் ஏறிப்பறக்க, அவரது இடத்தில் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ஆயுதப் படைகளின் பதில் தளகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் மைத்திரிபால சிறீசேன.
முள்ளிவாய்க்காலில் 148,648 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமல் போகச் செய்யப்பட்டும் இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்டதில் மகிந்தருக்கும், கோத்தபாயவிற்கும் எவ்வளவு பங்கு இருக்கின்றதோ, அதேயளவு பங்கு மைத்திரியாருக்கும் இருக்கின்றது. அது மட்டுமல்ல. 2006ஆம் ஆண்டு மாவிலாற்றில் நான்காம் கட்ட ஈழப் போர் வெடித்ததில் இருந்து முள்ளிவாய்க்காலில் தமிழீழ நடைமுறை அரசை சிங்களம் ஆக்கிரமித்தது வரையான காலப்பகுதியில் ஐந்து தடவைகள் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், அந்த வகையில் சிங்கள ஆயுதப் படைகளின் பதில் தளகர்த்தாவாகவும் சிறீசேன பதவி வகித்திருக்கின்றார். தவிர சிங்கள தேசத்தின் அதிபராகச் சந்திரிகா அம்மையார் பதவி வகித்த பொழுது, கருணா குழுவிற்கும், அம்மையாருக்கும் இடையிலான தொடர்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும் இதே சிறீசேன தான்.
இவ்வாறு ஈழ மண்ணில் தமிழ்க் குருதி ஆறாக ஓடுவதற்குக் காரணமானவர்களில் ஒருவர், புத்தனுக்குத் தமிழ் நிணங்களைப் படைத்து மகிழ்ந்த சிங்கள ஆயுதப் படைகளின் பதில் தளகர்த்தாவாகத் திகழ்ந்த ஒருவர், தனது படையினர் இழைத்த குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார் என்று எதிர்பார்ப்பதை விட மடமைத்தனம் இருக்க முடியாது.
எனவே தமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்குத் தீர்ப்பாயம் எதுவும் அமைக்கப்பட மாட்டாது என்றும், எந்தக் கட்டத்திலும் பன்னாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு தமது படையினர் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கடந்த வாரம் சிறீசேன அறிவித்திருப்பதையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. அதேநேரத்தில் நீண்ட காலமாக சிங்கள தேசத்துச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறீசேன நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் பொழுது இன்னொரு விடயமும் தெளிவாகின்றது: விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ் அரசியல் கைதிகளைத் தவிரப் பெரும்பாலானவர்களை எப்படியாவது தண்டித்து விட வேண்டும் என்பதில் சிறீசேனவின் அரசாங்கம் துடியாய்த் துடிதுடிக்கின்றது என்பதுதான் அது.
கடந்த வாரமும், அதற்கு முந்திய வாரமும் - அதிலும் ஆறு நாட்களில் - இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை இதனையே பறைசாற்றி நிற்கின்றது. இதற்கான காரணத்தை நாங்கள் புரிந்து கொள்வது அவ்வளவு கடினம் அல்ல. தமிழ் அரசியல் கைதிகளை சிறீலங்கா அரசாங்கம் விடுதலை செய்யாதிருப்பதில் பெரும் சதி பொதிந்திருப்பதாக ஏலவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியிருக்கின்றது என்பது வேறு விடயம்.
ஆனால் இதுபற்றி 01.12.2015 அன்று&nbsp; - ஏறத்தாள 23 மாதங்களுக்கு முன்னர் - கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் சந்திரிகா அம்மையார் விளக்கியிருந்தார். அதாவது நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட மற்றும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய முடியாது என்றும், அவ்வாறு அவர்களை விடுதலை செய்வதாயின் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஆயுதப் படையினருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது என்றும் அப்பொழுது சந்திரிகா அம்மையார் கூறியிருந்தார்.</p>
சிறீசேன என்ற புகையிரத வண்டியின் பின் இயந்திரமாகத் திகழ்பவர் சந்திரிகா அம்மையார். இப்பொழுதும் கூட அம்மையார் அமர்ந்திருப்பதற்கு ஆசைப்படும் அதிபர் சிம்மாசனத்தில்தான் மைத்திரியார் அமர்ந்துள்ளார். ஆக 23 மாதங்களுக்கு முன்னர் அம்மையார் திருவாய் மலர்ந்ததையே மைத்திரியார் செயற்படுத்தி வருகின்றார் என்றால் அது மிகையில்லை. தீர்வுப் பொதி என்றும், அதிகாரப் பரவலாக்கம் என்றும், சமாதானத்திற்கான யுத்தம் என்றும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தல் என்றும் பல செப்படி வித்தைகளை அரங்கேற்றிப் பதினொரு ஆண்டுகள் உலகை ஏமாற்றிய நவீன விகாரமாதேவியார்தான் சந்திரிகா அம்மையார். அப்படிப்பட்ட நவாலி நரபலி நாயகியின், செம்மணிப் புதைகுழித் தேவதையின் பொம்மலாட்டமே கடந்த மூன்றாண்டுகளாக மைத்திரிபால சிறீசேனவின் ஆட்சி என்ற வடிவில் ஈழத்தீவில் அரங்கேறி வருகின்றது.
சிங்கள தேசத்தின் அரசியலமைப்பின் படி ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும். அதன்படி பார்த்தால் சிறீசேனவின் ஆட்சிக்காலம் 2021ஆம் ஆண்டு வரை தொடர வேண்டும். ஆனாலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அதிபர் சிம்மாசனத்தில் மைத்திரியார் அமர்ந்த இரண்டு வாரங்களில் அறிவித்ததன் அடிப்படையில் பார்க்கும் பொழுது, 2020ஆம் ஆண்டில் அவரது ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். அது வரை உள்ளகப் பொறிமுறையை நிறுவும் பெயரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குக் காலத்தை இழுத்தடிக்கும் திட்டத்தில் மைத்திரி - சந்திரிகா - ரணில் கும்பல் இருக்கின்றது என்பது மெல்ல மெல்ல கண்கூடாகின்றது. அதற்குள் எப்படியாவது சிறையில் இருக்கும் பெரும்பாலான தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டித்து விட்டால், தமது ஆயுதப் படைகள் மீதான நீதிமன்ற விசாரணை தொடர்பிலான பேரம் பேசலை மேற்கொள்ளலாமென மைத்திரி அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதாவது மைத்திரிபாலவோ, அல்லது 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள தேசத்தின் அதிபர் சிம்மாசனத்தில் அமரப் போகும் வேறு எந்த நபரோ பொதுமன்னிப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தாலே ஒழிய, எந்தச் சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படுவது சாத்தியமில்லை.</p>
எனவே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்ற பன்னாட்டுக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிங்களப் படைத் தளபதிகள், மற்றும் படையினருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்காலத்தில் சிறீசேன - சந்திரிகா - ரணில் கும்பல் விதிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். இதனையயாத்த நிபந்தனைகளை முன்வைத்து நெல்சன் மண்டேலாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் 1994ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சியில் கறுப்பின மக்கள் எதிர்கொண்ட கொடூரங்கள் ஏராளம்: அவலங்கள் எண்ணிலடங்காதவை. நிறவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியும், அமைதி வழியிலும் போராடிய ஆயிரக்கணக்கான கறுப்பின இளைஞர்கள் தென்னாபிரிக்காவின் வெள்ளையின பாதுகாப்புப் படைகளால் தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள்: பலர் கைது செய்யப்பட்டு, வதைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்.
ஆனாலும் நெல்சன் மண்டேலாவிடம் தென்னாபிரிக்காவின் ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்ட பொழுது, இவ்வாறான கொடூரங்களுக்குக் காரணமாக இருந்த வெள்ளையின பாதுகாப்புப் படை அதிகாரிகளும், வீரர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவரிடமிருந்து வெள்ளையின அரசியல் தலைவர்கள் பெற்றிருந்தார்கள். இதனை முன்னுதாரணமாகப் பயன்படுத்தித் தமது ஆயுதப் படைகளைப் பாதுகாப்பதே மைத்திரி - சந்திரிகா - ரணில் கும்பலின் திட்டமாக உள்ளது எனலாம். ஆக இவ்விடயத்தில் மீண்டும் ஏமாறப் போவது தமிழர்கள் தான்.
உள்ளக விசாரணை தொடர்பாகக் கடந்த 2015ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தாது சிறீலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருவதைக் காரணம் காட்டி, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த கொடூரங்கள் தொடர்பான நீதி விசாரணையை சாத்தியப்படுத்த முடியும் என்று தமிழீழ தாயகத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களும், புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் கனவு காண்கின்றார்கள்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தான் தமிழர்களின் விடிவு தங்கியிருக்கின்றது என்ற தொனியிலேயே இவர்களின் அரசியல் வியூகங்கள் - அப்படி ஏதாவது வகுக்கப்பட்டிருந்தால் - தென்படுகின்றன. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை வழங்கி, அவர்களுக்கான பொதுமன்னிப்பை பேரம் பேசலுக்கான ஆயுதமாக்கித், தமது தளபதிகளையும், ஆயுதப் படைகளையும் பாதுகாப்பதற்கான சக்கர வியூகத்தை நுட்பமான முறையில் சிங்களம் செயற்படுத்தி வருகின்றது. மறுபுறத்தில் எதிர்காலத்தில் மேற்குலகிற்கு விரோதமான ஆட்சி மாற்றம் ஈழத்தீவில் நிகழ்ந்தாலேயே ஒழிய, தமது ஆயுதப் படைகளைத் தண்டிக்கும் விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மேற்குலகம் முண்டுகொடுக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
<strong>நன்றி: ஈழமுரசு</strong>