img/728x90.jpg
கனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும்.

கனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும்.

கனடிய தமிழ் காங்கிரஸ்(CTC) சார்பில் CMR என்ற தமிழ் ஊடகத்தில் டேவிட் பூபாலப்பிள்ளை என்ற தமிழர் பேசும் பேச்சை கேளுங்கள் உறவுகளே...

இனப்படுகொலையாளி அரசான இலங்கை அரசின் தூதரகங்களோடு கொண்டாடுவதையும் அவர்களின் அரச ஊடகங்களை அழைத்து மதிப்பளிப்பதையும் எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறார்....

நேயர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான அவர்கள் செயலை சுட்டி காட்டியும் திரித்து திமிராக பேசும் இவரை என்ன சொல்கின்றீர்கள்???

கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) நடத்த இருக்கும் பொங்கல் விழாவுக்கு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த ரூபவாஹினி தொலைக்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதை கனடா வாழ் தமிழ் மக்கள் கண்டிப்போம்!

புலிகள் பெயர் சொல்லி உருவாக்கப்பட்டவர்கள் இன்று "கரும்புலி நாளில் மக்கள் தடைகளை தாண்டி தங்கள் நிகழ்வுகளை வெற்றிகரமாக செய்த்து காட்டி இருக்கின்றோம்!!!" என வீராப்பு பேசுகின்றார். வேடிக்கையாக உள்ளது.

புலிகளை அவமதித்து மக்கள் ஆதரவை பெறலாம் என்ற அவர் இறுமாப்பு தான் இன்று கனடாவில் வாழும் தமிழ் மக்கள் உணர்வுகளையும், தாயகத்து தமிழ் மக்கள் உணர்வுகளையும் அவமதித்து அரசுக்கு சார்பான ஊடகத்திற்கு சாமரம் வீச செய்கிறது!

மைத்திரி அரசு நல்ல அரசாம்... ஐயா டேவிட் பூபாலபிள்ளை.. பச்சை பிள்ளைக்கும் தெரியும் மகிந்தாவையும் இராணுவத்தையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாமல் காக்கும் மைத்திரியின் நயவஞ்சனை. உங்களுக்கு தெரியாதது வேடிக்கையானது.

என்னே ஒரு நயவஞ்சனை பேச்சு ஐயா உங்கள் பேச்சு.

எங்கள் இனத்தை அழித்தவர்களை நியாயப்படுத்தும் இவர் சொல்கின்றார் நாகரீகமாக அழகு தமிழ் சொல்லில் தன்னை விமர்சிக்கட்டுமாம்.

இனவழிப்பை ஏற்று கொள்கிறாராம் இவர். ஆனால் இவர்கள் விருது கொடுத்த சுமந்திரன் சொல்கிறார் எங்கள் மண்ணில் நடந்தது தமிழினப்படுகொலை இல்லை என்று.

போர் குற்றம் என்றால் என்ன இனப்படுகொலை என்றால் என்ன என தெரியாமல் பிதற்றுகிறார்.

ஜெர்மன் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை இது என நிறுவப்பட்டது. மக்கள் என்ன குற்றம் செய்தார்கள் போரா செய்தார்கள்? இனப்படுகொலையான மக்கள் என்ன குற்றமையா செய்தார்கள்? போர் குற்றம் என்கிறீர்களே இனப்படுகொலையை..? இனவழிப்பை நீங்களும் அல்லவா துணை நின்று ஊக்குவிக்கின்றீர்கள்?

கனடாவில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்க்கும் பொழுது இவர்கள் மட்டும் இனப்படுகொலையாளிகளான சிறிலங்கா அரசின் ஊடகத்தை கொண்டாடி செயல்படுவது தமிழின விரோதப்போக்கையே வெளிப்படுத்துகின்றது.

இவர்கள் போன்றவர்களால் தான் எங்கள் இனம் இத்தனை வலிகளை சுமக்கின்றது.

உறவுகளே இந்த நேரடி நிகழ்ச்சியை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்!

https://tunein.com/radio/CMR-1013-s76896/

NB:
கனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும்.

கறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல. ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே செயற்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. மாறி மாறி அரசமைக்கும் சிங்களத்துக்கு ஓர் ஊதுகுழலாகவே ரூபவாகினி இன்றுவரை செயற்பட்டு வருகின்றது.

தமிழினவழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரூபவாகினி தொலைக்காட்சியின் தமிழ்ச் சேவையானது, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காகவே போர் புரிகின்றது என்ற வாதத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடாகப் பரப்பியது மாத்திரமன்றி, பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மரணப் பொறிக்குள் பொதுமக்களைச் சிக்கவைத்துக் கொன்றொழித்ததில் ரூபவாகினிக்கு முக்கிய பங்குண்டு.

இன்று ஐக்கிய நாடுகள் அவையும் பல உலக நாடுகளும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்குரிய பரிகாரத்தை வேண்டிநிற்க, இலங்கை அரசாங்கம் அதில் எதையும் நிறைவேற்றாத நிலையில், கனடியத் தமிழர் பேரவை (CTC), ரூபவாகினி தொலைக்காட்சியைக் கனடாவினுள் அனுமதிப்பதென்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரான காலப்பகுதியில் கனடிய அரசாங்கம் தமிழருக்கான நீதி பெற்றுத் தருவதற்குரிய முயற்சியில் ஜெனிவாவிலும் வேறுபல வகைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் கூடும்போது அதைத் தனித்து நின்று புறக்கணித்தது. அதைத் தொடர்ந்து மொறிஷியஸ் நாடு புறக்கணித்ததென்பது வரலாறு.

இலங்கையில் புதிய அரசு உருவாகிய பின்பு தமிழர் நலன் சார்ந்த அரசியல், இராஜதந்திர ரீதியில் சிக்கியிருக்கின்றது. புதிய அரசானது தம்மை மிதவாதப்போக்குடையதாக உலக அரங்கில் காட்டிக்கொண்டு தமிழர்களுடைய அடிப்படைத் தேவைகளை மூடிமறைத்து அதற்கான பரிகார நீதியில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அதனூடாக உருவாகி இருக்கும் அனத்துலக ரீதியான அழுத்தங்களையும் குறைக்கின்ற வகையில் பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது. இம்முயற்சிகள் அனைத்தும் கூடிவராத சூழ்நிலையில் கனடியத் தமிழர் பேரவையினூடாக ரூபவாகினியின் வருகை என்பது இலங்கை அரசால் ஏவப்பட்டதாகப் பார்க்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அது மட்டுமன்றி, புலம்பெயர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழர் நலன் சார்ந்த செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்கின்ற செயற்பாடாகவும் இந்த வருகை பார்க்கப்படுகின்றது.

கனடியத் தமிழர்கள் பல விதத்திலும் தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு கனடியத் தமிழர் பேரவை ரூபவாகினி வருகையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வேண்டுகோளைப் புறக்கணித்து, கனடியத் தமிழர் பேரவை தமிழின அழிப்புக்குத் துணை போன ரூபவாகினி தொலைக்காட்சியை ஜனவரி 20, 2018 நிகழ்வில் வரவழைத்தார்களானால், புலம்பெயர் தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்று கனடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ் கல்விச்சபை உறுப்பினர்கள், ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், நடன ஆசிரியர்கள், தமிழ் வர்த்தகர்கள், தமிழ் ஊடகங்கள், கனடியத் தமிழர்கள் அனைவரும் இந்நிகழ்வைப் புறக்கணிப்பது மாத்திரமன்றி தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துலக தமிழர்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் 14 அமைப்புக்களும் கனடிய மக்களை பிரதிநிதுத்துவம் செய்கின்ற 5 அமைப்புக்களும் இவ்வறிக்க்கையை வெளியிடுகின்றனர். தொடர்ந்தும் மேலதிக அமைப்புக்களை நாடியிருக்கின்றோம்.

பிற்குறிப்பு: கனடியத் தமிழர் பேரவை நிகழ்வில் ரூபவாகினியின் வருகையை மறுபரிசீலனை செய்யுமாறு மின்னஞ்சல் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு எந்தவித பதிலும் கிடைக்காதவிடத்து இப்பதிவை மக்களிடம் வெளிக்கொணர்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

1. கனேடிய தமிழர் தேசிய அவை - கனடா

2. சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ்

3. நோர்வே ஈழத்தமிழர் அவை - நோர்வே

4. இத்தாலி ஈழத்தமிழரவை - இத்தாலி

5. பிரான்ஸ் தமிழர் பேரவை - பிரான்ஸ்

6. சுவீடன் தமிழர் தேசிய அவை - சுவீடன்

7. தமிழர் நீதிக்கான அமைப்பு - அவுஸ்திரேலியா

8. பெல்ஜியம் தமிழர் தேசிய அவை - பெல்ஜியம்

9. பின்லாந்து தமிழர் பேரவை - பின்லாந்து

10. டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் - டென்மார்க்

11. நெதர்லாந்து தமிழர் அவை - நெதர்லாந்து

12. நியூசீலந்து தமிழர் தேசிய அவை - நியூசீலந்து

13. தமிழர் இன அழிப்புக்கு எதிரான கூட்டமைப்பு - மொரிசியஸ்

14. யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

கனடிய அமைப்புக்கள்:

1. பிரம்ரன் தமிழ் ஒன்றியம்

2. மிசிசாகா தமிழ் ஒன்றியம்

3. கியுபெக் தமிழர் முன்னேற்றச்சங்கம்

4. கனடிய தமிழர் தேசிய அவை

5. கனடிய தமிழர் சமூக அமையம்

மேலதிக தொடர்புகளுக்கு: 416.830.7703